‘சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம் அவர்கள்’ என்ற நூலின் இரண்டாம் பதிப்பினை கனடா சைவ சித்தாந்த மன்றம் வரும் சனிக்கிழமை (25.07.2015) அன்று கனடாவில் வெளியிடவுள்ள நிலையில், இந்நூலின் மூலப்பிரதியைப் பெற்று தந்து உதவியவரும் ஓய்வுநிலை உதவிக் கல்விப்பணிப்பாளருமாகிய திரு. ளு.மு.சதாசிவம் அவர்கள் இந்நூல் வெளியீட்டு விழா சிறப்புற்று விளங்க வழங்கிய வாழ்த்துச் செய்தியை இங்கே எடுத்து வருகின்றோம்.
மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்கள் பற்றிய நூல் வெளியீட்டு விழா சிறப்புற திரு.S.K.சதாசிவம் அவர்களின் வாழ்த்து செய்தி
கனடா சைவ சித்தாந்த மன்றத்தின் தலைவர் சிவநெறிச் செல்வர் திரு.தி.விசுவலிங்கம் நூலின் பதிப்பாசிரியர் அவர்களின் முயற்சியினால் “சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம் அவர்கள்” என்ற நூலின் இரண்டாம் பதிப்பினை வெளியிட்டு வைப்பதன் மூலம் அருணாசல உபாத்தியாயர் சைவத்திற்கும் கல்விக்கும், தமிழுக்கும் ஆற்றிய பணிகளுடன் சமூகப்பணி ஆற்றுபவர்கள் செல்ல வேண்டிய செல்நெறியையும் தன் வாழ்வின் மூலம் வகுத்துச் சென்றதையும் அறிந்து கொள்ளும வாய்ப்புக் கிட்டியுள்ளது.
அக்காலத்து பெரியார்கள் மாட்டு வண்டி அல்லது குதிரை வண்டியை தம் பயணங்களுக்கு பயன்படுத்தினர். மகான் அருணாசலம் அவர்கள் பாதரட்சை அணியாது வெறுங்காலுடன் நடைப்பயணங்களை மேற்கொள்பவர். அதிகாலை நான்கு மணக்கு எழுந்திருக்கும் நாவலரின் தமையனார் மகன் ஸ்ரீமத். கைலாசபிள்ளை அவர்கள் தெருக்கதவைத் திறக்கும் போது வெகுநேரத்திற்கு முன்பே வந்து காத்திருப்பவர் திரு.ச.அருணாசலம் அவர்கள்.
தனவந்தர்களைச் சந்தித்து சைவசமயச் சூழலில் கல்வியை வழங்க பாடசாலைகளை நிறுவவும், சைவ ஆசிரியர்களை உருவாக்க இளைஞர்களைத் தேடியும் ஊரெல்லாம் நடைப்பயணம் மேற்கொண்டவர். தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு சலிப்பின்றி தொடர்ந்து முயன்று வெற்றி கண்டவர். அருணாசலம் பெரும் பொருள் இல்லாதவர். தன்னிடம் இருந்த காணிகளை ஈடு வைத்து செலவு செய்பவர். ஈடு மீட்காதவர். தன் மனைவி குழந்தைகள் பற்றி அதிகம் சிந்திக்காதவர்.
‘ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்’
எனும் முதுமொழிக்கு இலக்கணமாக வாழ்ந்தவர்.
ஈழத்துச் சிதம்பர புராண நூலாசிரியர் புலவர் சோ.இளமுருகனார் ‘ஆங்கிலேயர் ஆட்சியும் அருணாசலத்தார் தொண்டும்’ எனும் பகுதியில் ஊர்கள் தோறும் அருணாசலத்தார் நிறுவிய பாடசாலைகள் அன்னாரின் நினைவுச் சிலைகள் எனவும் ஊண் உறக்கமின்றி ஊர்கள் தோறும் நடந்து உழைத்து கருத்தை நிறைவு செய்த “கரும வீரன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
“காரைநகர் மடந்தை தவம் வாய்த்ததென
வந்தானோர் கருமவீரன்
சீருடையான் பெயரருணாசலனென்பான்”
அருணாசலம் அவர்கள் பேருக்கும், புகழுக்கும் தொண்டாற்றியவர் அல்லர். சைவப் பெரியார்கள் நண்பர்கள், மாணவர்கள் நிழற்படம் எடுக்க விரும்பியபொழுது அருணாசலம் அவர்கள் உடன்படவில்லை. அருணாசல உபாத்தியாயர் மறைந்து ஒருநூற்றாண்டுகளுக்கு ஐந்து ஆண்டுகள் இருக்கும்போது நூலின் பதிப்பாசிரியர் அருணாசல உபாத்தியாயர் பற்றி வாசித்து அறிந்த அனைத்துத் தகவல்களையும் ஆவணமாக்கி உருவப்படத்தை வரைந்து மீள்பரீசீலனை செய்து மீண்டும் வரைந்து உருவப்படம் ஒன்றினையும் வரைந்து நூலின் இரண்டாம் பதிப்பினையும் வெளியிடல் பாராட்டப்படவேண்டிய வரலாற்றுப்பதிவாகும் என்று வாழ்த்துகின்றேன்.
நன்றி
திரு.S.K.சதாசிவம்
ஓய்வுநிலை உதவிக் கல்விப்பணிப்பாளர்
No Responses to “மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்கள் பற்றிய நூல் வெளியீட்டு விழா சிறப்புற திரு.S.K.சதாசிவம் அவர்களின் வாழ்த்து செய்தி”