சைவப்பாடசாலைகளை நிறுவியும், சைவ ஆசிரியர்களை உருவாக்கியும் சைவத்தின் பாதுகாவலராக பெருந்தொண்டாற்றி சிவபூமியாகிய காரைநகருக்குப் பெருமை சேர்த்த கர்ம வீரன் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்கள் பற்றிய “சைவாசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம் அவர்கள்” என்ற நூலை அருணாசலம் அவர்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய தொகுப்பாக கனடா சைவ சித்தாந்த மன்றம் கனடாவில் வெளியிடுகின்றது.
இவ்வேளையில் காரைநகரில் சைவம் வளர்க்கும் பவள விழாக் கண்ட சபையாகிய காரைநகர் மணிவாசகர் சபையின் தலைவரும் கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் (காரை இந்துக் கல்லூரி) முன்னாள் அதிபருமாகிய பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்கள் இந்நூல் வெளியீட்டு விழா சிறப்புப் பெற வழங்கிய வாழ்த்துச் செய்தியைக் கீழே தருகின்றோம்.
வாழ்த்துரை
சைவப் பாடசாலைகளை நிறுவவும் சைவ ஆசிரிய கலாசாலையை உருவாக்கவும் சைவ ஆசிரியர்களைத் தோற்றுவிக்கவும் பெருந்தொண்டு புரிந்த ஒப்பற்ற மகான் திரு.ச.அருணாசலம் உபாத்தியாயர் அவர்களின் வரலாற்று நூல் மீளவும் வெளிவருவதையிட்டு பெருமகிழ்ச்சியடைகின்றோம். சைவசமயம், தமிழ்மொழி ஆகியவற்றில் தீவிர பற்று மிக்கவராக விளங்கியவர். தம் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அளித்துத் தொண்டு செய்தவராவர். “ஆறுமுகநாவலருக்குப் பிறகு அருணாசலம் தான்” என்று போற்றப்பட்ட காரணத்தால் காரைநகர் பெருமை பெறுகிறது.
நம் ஊரில் சைவத்தமிழ் பாடசாலைகளான திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் வித்தியாலயம் என்று ஆரம்பத்தில் அழைக்கப்பட்ட தற்போதய கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம், சுப்பிரமணிய வித்தியாசாலை, வியாவில் சைவ வித்தியாலயம் ஆகியன உருவாகுவதற்கு இவரின் முயற்சியும் தூண்டுதலும் பெருந்துணை புரிந்தன.
போக்குவரத்து வசதி குறைந்த நிலையில் பொருளாதார வளமற்ற அருணாசல உபாத்தியாயர் அவர்கள் தமது கருமத்தை நிறைவேற்ற கால்நடையாக நடந்து ஊண் உறக்கமின்றி ஊரெங்கும் ஓடித்திரிந்தவராவர். இவர் செயல்பற்றி பண்டித மாணவனாக சிறியேன் படித்த காலத்தில் எழுதிய பாடல்கள் சில.
வண்டிக ளின்றிச் செருப்புமில் லாது மண்ணுறக் காலினால் நடந்தும்
மண்டிய இருளிற் பனியினில் வெயிலில் மழையினிற் பலஇடர் உழந்தும்
உண்டியை ஒறுத்தும் ஊரெங்கும் ஓடி உத்தமத் தொண்டர்கள் பலரைக்
கண்டுமெங் காரை நகரினிற் கல்விக் கழகங்கள் தாபித்த பெரியார்.
சுப்பிர மணிய வித்தியா சாலை சுடர்வியா விற்பாட சாலை
திப்பிய சயம்பர் இந்துக்கல் லூரி சீரியர் பலரையும் மேவிக்
கைப்பொருள் இழந்தும் ஆவியும் உடலும் காய்ந்திட ஒளிமிகு பொன்போல்
ஒப்பிலாத தொண்டாற் றாபித்துச் சைவ ஒளியிங்கு திகழவைத் தனரே.
நாவலர் ஒழுக லாறெங்கள் காரை நகரினில் ஒளிரவைத் திட்ட
காவலர் அருணா சலமகான் சேவை காலமெல் லாம்நின் றிலங்க
ஓவிய மணிமண்டபமமைத் திடுவோம் உயர்சைவ மன்றமாக் கிடுவோம்
ஆவலொ டாண்டு தொறும்விழா எடுத்தே அரியநன் றிக்கடன் புரிவோம்.
இத்தகைய உத்தமனை காலமெல்லாம் போற்ற மணிமண்டபம் அமைத்து ஆண்டாண்டு தோறும் விழா எடுத்து நன்றிக்கடன் செலுத்துவோமாக.
கனடா சைவ சித்தாந்த மன்றத்தின் நிர்வாக ஆசிரியர் திரு.தி.விசுவலிங்கம் அவர்கள் இத்தகைய உத்தமனைப் போற்ற எடுத்த முயற்சி போற்றத்தக்கது. வரவேற்கத்தக்கது. வெளியீட்டு விழா சிறக்க வாழ்த்துகின்றோம்.
நன்றி
பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை
தலைவர்
காரைநகர் மணிவாசகர் சபை
No Responses to “நூல் வெளியீட்டு விழா சிறப்புற மணிவாசகர் சபைத் தலைவர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்களின் வாழ்த்துச் செய்தி”