“சைவ ஆசிரியர்களை தோற்றுவித்த சிவத்திரு ச. அருணாசலம் ” என்கின்ற நூலின் இரண்டாம் பதிப்பு புதுப்பொலிவுடனும், அநேகமான தகவல்களுடனும் வருவது கண்டு மகான், சிவத்திரு ச. அருணாசலம் என்கின்ற மாமனிதன் பிறந்த கிராமத்தின் ஒரு வாரிசு என்கின்ற நிலையில் என் உள்ளம் புளகாங்கிதம் அடைகின்றது. அந்த மாமனிதன் தன் நலம் கருதாது தமிழையும், சைவத்தையும் வளர்க்க பாடுபட்டதோடு அல்லாது, தொலை நோக்கோடு சிந்தித்து ஆங்கில அறிவிலும் புலமை பெற அன்றைய சந்ததிக்கு அடித்தளம் இட்டார் என்னும் போது அவரின் சிந்தனை, சமூக பொறுப்புணர்வு, கடின உழைப்பு எல்லாவற்றையும் எண்ணி இன்றைய சமுதாயத்தின் சார்பில் அந்த ஆசிரியப் பெருமகனின், சமூக சேவை செய்த பெருமகனின் பாதக் கமலங்களினை தூய அன்போடு பணிகின்றேன்.
1989/90 களில் யாழ்பாணத்தின் அநேகமான கிராமங்களுக்கு நேரில் சென்ற “வீக் என்ட்“ (Week End) பத்திரிகைக் குழு அன்றைய கால கட்டத்தில் யாழ்ப்பாணத்தின் நிலைமை பற்றி ஒரு பெரிய ஆய்வுரை எழுதி இருந்தது. அந்த ஆய்வுரையில், முதல் பக்கத்தில் சிறப்பு விடயமாக ஒரு தனி சதுர அடைப்புக்குள் “Little England in Jaffna” என்று காரைநகரை சுட்டி காட்டி சிறு விமர்சனம் போட்டிருந்தார்கள். அந்த விமர்சனத்திற்கு மூல வித்து சிவத்திரு ச. அருணாசலம் உபாத்தியாரின் சிந்தனைகள் என்றால் மிகையாகாது.
பெரு மதிப்பிற்குரிய இந்த சிந்தனையாளனின் வாழ்க்கையினை, அவர் தான் நினைத்த விடயங்களினை நிறைவேற்றுவதில் பட்ட சிரமங்களை எல்லாம் உற்று நோக்கும் கால், தமிழ் நாட்டில் தமிழுக்கு என தம்மை அர்பணித்த “தமிழ்த் தாத்தா” உ. வே. சாமிநாதையரின் வாழ்க்கை வரலாறு தான் என் மனத்திரையில் ஓடுகின்றது.
அவர்கள் பாடசாலைகளினை நிறுவுவதுடன் தன் பணியினை நிறுத்தி விடாது நல்ல ஆசான்களையும் உருவாக்க முயன்றார். நல்லாசான்களை தேடி பாடசாலைகளுக்கு நியமித்தார். அந்த வகையில் அவர் அப்போது இருந்த சமூக சேவகர்களுடன் இணைந்து (தற்போதைய கலாநிதி ஆ .தியாகராசா மத்திய மகா வித்தியாலத்திற்கு) தேடி கொண்டு வந்த நல் முத்தே, முத்து சயம்பு உபாத்தியாயர் ஆவார். முத்து சயம்பு உபாத்தியாயர் அவர்களின் கடமை உணர்வு, சேவை மனப்பான்மை, மாணவர்களுக்கான அவரின் தியாகம் என்பனவற்றை நாம் கோடிட்டு காட்ட வேண்டியது இல்லை. அந்த மாசு, மறுவற்ற ஆசானின் தகைமை பாடசாலைக்கு பல, பல பெயர் மாற்றங்கள் வந்தபோதும் இன்னமும் நம் முதியவர்களின் மனதில் “சயம்பற்றை பள்ளிக்கூடம்” என்ற பெயர் நிலைத்து நிற்பதில் இருந்தும், அவ் ஆசானின் மாணவர்கள் வழியாக வந்த கதைகளில் இருந்தும் அறிந்து கொள்ளலாம்.
திரு ச. அருணாசலம் அவர்களின் மகிமையினை அவரின் சீடனான திரு. சி. கணபதிபிள்ளை ஐயர் அவர்கள் முதல் பதிப்பாக “சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த திரு ச. அருணாசலம் அவர்கள்” என வெளியிட்டு இருந்தார்கள்.
அதனை மேலதிக விபரங்ககளுடன் சிவநெறிசெல்வர் திரு தி. விசுவலிங்கம் (சைவ சித்தாந்த மன்ற அதிபர் – கனடா) அவர்கள் பெரு முயற்சி செய்து இரண்டாவது பதிப்பாக வெளியீடு செய்வது கண்டு பெரு மகிழ்வடைகின்றோம். முயற்சி வெற்றி பெற எல்லாம் வல்ல ஈழத்து சிதம்பரத்து சிவகாமி அம்மை சமேத சுந்தரேசப் பெருமான் பாதமலர் பணிந்து வேண்டுகின்றோம். இந்த முயற்சியில் பெரு மகனாரின் குடும்ப வாரிசுகளும் இணைந்து கொண்டமை போற்றுதற்குரியது.
கனடா காரை கலாச்சார மன்றம்
வே. இராசேந்திரம்
போஷகர் சபை இணைப்பாளர்
No Responses to “கனடா – காரை கலாச்சார மன்றத்தின் வாழ்த்துச் செய்தி”