நாவலருக்கு அடுத்து வைத்துப் போற்றப்படும் ஈழத்துக் கல்வியாளர் காரைநகர் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்கள் பற்றிய “சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம் அவர்கள்” என்ற நூலின் இரண்டாம் பதிப்பின் நூல் வெளியீட்டு விழாவை கனடா சைவ சித்தாந்த மன்றம் கடந்த சனிக்கிழமை (25.07.2015) அன்று பிற்பகல் 2:00 மணிக்கு Scarborough Civic Centre இல் நடத்தியிருந்தது.
அருணாசல உபாத்தியாயர் அவர்களின் மாணவர் அல்வாய் வாசர் வல்வைச் சிவகுரு வித்தியாசாலையின் முன்னாள் தலைமையாசிரியர் திரு.சி.கணபதிப்பிள்ளை ஐயர் அவர்கள் எழுதிய இந்நூலின் முதற்பதிப்பு காரைநகர் சைவ மகா சபையினால் 1971 ஆம ஆண்டு வெளியிடப்பட்டிருந்தது.
கனடா சைவ சித்தாந்த மன்றத் தலைவர் சிவநெறிச் செல்வர்.திரு.தி.விசுவலிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நூல் வெளியீட்டு விழாவில் கல்வியாளர்கள், பொது அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் காரைநகர் மக்கள் எனப் பெருமளவிலானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நூல் வெளியீட்டு விழாவினை முன்னிட்டு காரைநகரில் இருந்தும் வெளியிலிருந்தும் கல்வி சமூகத்தைச் சேர்ந்த ஓய்வுநிலை கல்விப்பணிப்பாளர்கள், ஓய்வுநிலை அதிபர்கள், தற்போதய அதிபர்கள் ஓய்வுநிலை ஆசிரியர்கள் ஆகியோரும் மற்றும் புலம் பெயர் காரை அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் நூல் வெளியீட்டு விழா சிறப்புற அனுப்பி வைத்த வாழ்த்துச் செய்திகளின் தொகுப்பும் விழா நிகழ்ச்சி நிரலும் அடங்கிய கையேடு விழாவிற்கு வருகை தந்திருந்தவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
கனடா சைவ சித்தாந்த மன்றத்தின் சைவசமய குரவர் பாடசாலை மாணவர்கள் பன்னிரு திருமுறை ஓதல் வழிபாடு செய்த பின்னர் கனடா பண், தமிழ்ப் பண் ஆகியனவற்றையும் இசைத்தனர். அகவணக்கத்தைத் தொடர்ந்து உப-தலைவர் திருமதி.வடிவழகாம்பாள் விசுவலிங்கம் அவர்கள் விழாவிற்கு வருகை தந்தவர்களை வரவேற்று உரையாற்றினார்.
சிவநெறிச் செல்வர் திரு.தி.விசுவலிங்கம் அவர்கள் தமது தலைமையுரையில், இந்நூலை வெளியீடு செய்வதற்கு மிகவும் தூண்டு கோலாக இருந்தவர் மூதறிஞர் க.வைத்தீசுவரக்குருக்கள் அவர்கள் இந்நூலில் அடங்கியுள்ள பெறுமதிமிக்க கட்டுரைகள் பற்றியும், அருணாசலம் அவர்களின் உருவப்படம் அமைக்கப்பட்டமை பற்றிய விளக்கத்தையும் குறிப்பிட்டு இளம் சந்ததியினர் சைவப் பாரம்பரியத்தையும் கல்வியின் முக்கியத்துவத்தையும் இந்நூலின் மூலம் அறிந்து பயன் பெற வேண்டும் என்றும கேட்டுக் கொண்டார்.
கவிநாயகர் வி.கந்தவனம் அவர்கள் தனது வெளியீட்டுரையில், இந்நூலின் பதிப்பாசிரியர் அருணாசலம் என்ற மகானை மீண்டும உயிர்ப்பித்திருக்கிறார் என்று கூறி சேர்.பொன் இராமநாதன், இந்துபோட் இராசரத்தினம் போன்றவர்களின் பணிகளுக்கே கால் கோள் இட்டவர் இந்த அருணசலம் அவர்கள் என்றும் மதம் மாற்றம் என்ற சத்திய சோதனையை உறுதியுடன் கடந்து பல ஊர்களில் சைவப் பாடசாலைகளையும் சைவ ஆசிரிய கலாசாலைகளையும் உருவாக்கத் தன்னை அர்ப்பணித்த மகான் பற்றிய நூலை நீங்கள் எல்லோரும வாங்கிப்படிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
நூலின் முதற்பிரதியை பதிப்பாசிரியர் அன்னாரின் பேரனார் இளைப்பாறிய ஆசிரியர் திரு.சிவப்பிரகாசம் சிவானந்தரத்தினம் அவர்களுக்கு வழங்கிய பின்னர் சபையோர் அனைவரும் வரிசையில் வந்து அன்னாரின் பேரனார் பேராசிரியர்.சிவபாதம் பரமசிவம் அவர்களின் கரங்களினால் நூலின் பிரதியைப் பெற்றுக் கொண்டனர்.
கலாசூரி.திரு.சிவநேசச்செல்வன் அவர்கள் தனது நூல் ஆய்வுரையில், இந்நூல் என்னை நூறு ஆண்டுகள் பின்னால் நோக்க வைத்திருக்கின்றது. இலங்கை வரலாறு பற்றிய நிறைந்த தரவுகள் கொண்ட மிகப்பெரிய தொகுப்பாகிய இந்நூல் நிச்சயமாக திரும்பவும் இலங்கைக்குச் சென்று சேர வேண்டும் எனவும் காரைநகர் மண்ணின் செழுமை இந்நூல் ஊடாக வெளிவந்திருக்கின்றது எனவும் எதிர்காலத்தில் ஒரு பாரிய எழுச்சிக்கும் ஆய்வுக்கும் இந்நூல் வழி வகுக்கும் எனவும் தெரிவித்தார்.
அடுத்து காரைநகர் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்களின் பணிகளின் தொகுப்பு அடங்கிய வரலாற்று நூலை பதிப்பித்து வெளியிட்ட சைவசித்தாந்த மன்றத் தலைவர் சிவநெறிச் செல்வர் திரு.தி.விசுவலிங்கம் அவர்களை கனடா காரை கலாச்சார மன்றத்தின் சார்பில் அதன் முன்னாள் தலைவர் திரு.தம்பிஐயா பரமானந்தராஜா அவர்கள் பொன்னாடை போர்த்தியும் போசகர் சபை உறுப்பினர் திரு.ரவி ரவீந்தரன் அவர்கள் பாராட்டு விருது வழங்கியும் கௌரவித்தனர். கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் சார்பில் அதன் தலைவர் திரு.முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
இந்நூலின் மூலப்பிரதியை ஆக்க ஊக்குவித்தவரும் அருணாசலம் அவர்களின் பணிகள் பற்றி கட்டுரை எழுதியவரும் அன்னாரின் பேரனுமாகிய இளைப்பாறிய ஆசிரியர் திரு.சிவப்பிரகாசம் சிவானந்தரத்தினம் அவர்களை கனடா காரை கலாச்சார மன்றத்தின் சார்பில் அதன் போசகர் சபை உறுப்பினர் திரு.கந்தப்பு அம்பலவாணர் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
இந்நூலின் இரண்டாம் பதிப்பினை ஆக்குவதற்கு உறுதுணை புரிந்த பெரியார் அருணாசலம் அவர்களின் பேரனார் பேராசிரியர் சிவபாதம் பரமசிவம் அவர்களை கனடா காரை கலாச்சார மன்றத்தின் சார்பில் போசகர் சபை உறுப்பினர் திரு.கனக.சிவகுமாரன் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
அடுத்து கலாநிதி தம்பிராசா ரவிச்சந்திரன் அவர்கள் தனது நூல் ஆய்வுரையில் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளப்பரிய சேவை செய்த அருணாசல உபாத்தியாயர் என்ற இந்த மகான் பற்றிய தகவல் அடங்கிய இந்நூலை 1971 ஆம் ஆண்டு காரைநகர் சைவ மகா சபை அன்னாரை நேரில் அறிந்திருந்தவர்கள் அருகிக் கொண்டிருந்த காலத்தில் கடைசிச் சந்தர்ப்பமாக வெளியிட்டிருக்கிறார்கள் என்றும் கூறி இரண்டாம் பதிப்பில் புதிதாகச் சேர்க்கப்பட்டவற்றையும் நூலின் உள்ளடக்கத்தையும் விரிவாக எடுத்துக் கூறினார். தனது தந்தையார் அமரர்.சின்னத்தம்பி தம்பிராசா அவர்கள் அருணாசல உபாத்தியாயர் மீது பேரபிமானம் கொண்டவர் என்பதையும் அதற்கான காரணங்களையும் விளக்கி அவர் 10 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த மகான் பற்றிய கட்டுரையை சயம்பு மலரில் எழுதியிருந்தமையையும் நினைவுபடுத்தினார்.
‘என் பாட்டனார் காட்டிய வழி எனது பார்வையில்’ என்ற தலைப்பில் அருணாசலம் அவர்களின் பேரனார் பேராசிரியர்.சிவபாதம் பரமசிவம் அவர்கள் உரையாற்றினார். காலனித்துவ காலத்திலிருந்து இன்று வரை ஆட்சியாளர்கள் ஒர் இனத்தின் சமய பண்பாட்டு விழுமியங்களைச் சூறையாடும் வழிமுறைகளையே கையாளுகின்றனர். ஆனால் வளங்களும் வசதிகளும் தொழில்நுட்பமும் இல்லாத அந்தக் காலத்தில் எனது பாட்டனார் உறுதியான முடிவெடுத்தார். தனி ஒரு மனிதனாக கிட்டத்தட்ட 10 சைவப் பாடசாலைகளை உருவாக்குவதற்கு உரியவர்களைச் சந்தித்து அவர்களைத் தம்வசப்படுத்தி காணி, வகுப்பறைகள், ஆசிரியர்கள் என்பனவற்றைப் பெற்று பாடசாலைகளைத் தொடங்கினார். இவற்றுள் சுப்பிரமணிய வித்தியாசாலை, வியாவில் சைவ வித்தியாசாலை, திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் வித்தியாசாலை(இந்து ஆங்கிலப்பாடசாலை) ஆகியன காரைநகரில் தொடங்கியனவாகும். நானே எனது பாட்டனாரைப்பற்றிப் பெருமையாக கூறுவது எனக்குச் சரியாகப்படவில்லை எனினும் இதுவே உண்மை எனவும் கூறினார். 1915 இல் எனது பாட்டனாரின் வீட்டுத் திண்ணையில் தொடங்கப்பட்ட முதலாவது ஆசிரியகலாசாலையே இன்று நூற்றுக்கணக்கான பயிற்றுப்பட்ட ஆசிரியர்கள் உருவாக்கப்படுவதற்கு முன்னோடியாக அமைந்தது எனவும் கூறினார்.
கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க கனடா கிளையின் தலைவர் திரு.முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை அவர்கள் உரையாற்றும் போது எமது பாடசாலை ஸ்தாபிக்கப்படுவதற்கு மூலகர்த்தாவாக இருந்தவர் எமது ஊர் தந்த ச.அருணாசலம் அவர்களே எனவும் அவர் அன்று ஆரம்பித்த பாடசாலைகளில் கல்வி கற்ற நானும் எமது ஊரவர்களும் அவரின் செயற்பாடுகளை மறந்தால் நாம் நன்றிக்கடன் மறந்தவர்களாவோம் எனவும் குறிப்பிட்டார்.
அடுத்து உரையாற்றிய திருமதி.கிருஷ்ணவேணி சோதிநாதன் சைவத்தமிழ்ப் பாரம்பரியம் எங்கள் இனத்தின் இருப்பு என்ற நெருப்பை அருணாசலம் அவர்கள் நெஞ்சில் சுமந்தாலும் பிற மதத்தையோ பிற மொழியையோ வெறுப்புடன் நோக்கியவர் அல்லர் எனவும் கிறிஸ்தவர்களுடன் இணைந்து நடத்திய கோப்பாய் ஐக்கிய போதனா பாடசாலை அவரின் மனிதநேயத்திற்கும் சைவ ஆங்கிலப் பாடசாலையை எமது ஊரில் அமைக்க வேண்டும் என்ற அவரின் வேட்கையினால் உருவான திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் வித்தியாசாலை (காரைநகர் இந்துக்கல்லூரி) அவரின் தீர்க்கதரிசனத்திற்கும் எடுத்துக்காட்டு எனக் கூறினார். தன்னை முழுமையாகத் தியாகம் செய்து ஈழமணித்திருநாட்டின் சைவக் கல்விப் பாரம்பரியத்தை பாதுகாத்தவர் பேராசான் அருணசலம் அவர்கள் எனவும் நாவலரினால் நல்லூர் பெருமை பெற்றது மகான் அருணாசலம் அவர்களால் காரைநகர் பெருமை பெறுகிறது எனவும் குறிப்பிட்டார்.
கனடா-காரை கலாச்சார மன்ற போசகர் சபை இணைப்பாளர் திரு.வேலுப்பிள்ளை இராசேந்திரம் அவர்கள் உரையாற்றும் போது இந்த விழா ஒரு புதுமையான விழா என்றும் விழா நாயகனுக்கு நூற்றாண்டு விழா நடத்தி அதற்கு பின் பல ஆண்டு விழாக்களையும் கண்டிருக்க வேண்டிய நிலையில் இப்போது தான் ஒர் அறிமுகவிழா நடத்திக் கொண்டிருக்கின்றோம் எனவும் எமது சமூக விழிப்புணர்வு, பொறுப்புணர்வு பற்றி மீளாய்வு செய்ய வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம் என்றும் கூறி இந்த மாமனிதர் உண்மையான ஈடுபாட்டுடன் பெயர் புகழ் விரும்பாமல் இதயசுத்தியுடன் செயலாற்றியமையினாலேயே வெற்றி அடைந்தார் எனவும் கூறினார். மேலும் “அருணாசலம் விருது”, “ சயம்பு விருது “ ஆகிய இரு ஞாபகார்த்த விருதுகளை கனடா காரை கலாச்சார மன்றத்தினூடாக வழங்குவதற்கு தமது சபை உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்;து நடவடிக்கை எடுப்பேன் எனவும் உறுதியளித்தார். மெய்ப்பொருளான கல்வியின் மகத்துவம் காண எமக்கு நல்வழி காட்டிய அந்த ஞான சற்குரு அருணாசலம் அவர்களைப் போற்றுவோம் எனவும் கூறினார்.
ஊடகவியலாளர் சிவஸ்ரீ சுதாகரன் பஞ்சாட்சரக் குருக்கள் அவர்கள் உரையாற்றும் போது சைவ சமய பாரம்பரியத்தைப் பாதுகாத்த மகான் அருணாசலம் அவர்களின் நூலை வெளியிட்ட கனடா சைவ சித்தாந்த மன்றத்தைiயும் அவர்கள் மாதாந்தம் வெளியிடும் அன்பு நெறி இதழின் சிறப்பு பற்றியும் குறிப்பிட்டுப் பேசினார்.
கனடா சைவ சித்தாந்த மன்ற செயலாளர் திருமதி.அநிதா திருமுருகா அவர்களின் நன்றி உரையைத் தொடர்ந்து எல்லோரும் சேர்ந்து மங்களம் பாடியமையைத் தொடர்ந்து விழா இனிதே நிறைவு பெற்றது.
விழாவின் போது எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.
முழுமையான படத்தொகுப்பினைக் கீழே காணலாம்
No Responses to “கல்வியாளர் காரைநகர் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்கள் பற்றிய நூல் வெளியீட்டு விழா கனடாவில் ஒரு வரலாற்றுப் பதிவு”