.காரைநகர் இந்தக் கல்லூரியில் ஆங்கில ஆசியராகப் பணியைத் தொடங்கி இக்கல்லூரியிலேயே 27 ஆண்டு கால சேவையை (1972-1999) நிறைவு செய்து ஓய்வுபெற்றவர் K.M.செல்வரத்தினம் அவர்களாவர். இவர் சென்ற 07-03-2022 திங்கட்கிழமை சிவபதம் அடைந்துள்ளார் என்ற செய்தி அறிந்து பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை ஆழ்ந்த துயரடைந்துள்ளது. காரைநகரில் ஆங்கில அறிவு மிக்க மாணவர் பரம்பரையை உருவாக்கியதில் செல்வரத்தினம் அவர்களிற்கு பெரும் பங்கு உண்டு என்றே கூறலாம். ஆங்கிலக் கல்வியை திறமையோடு போதித்து வந்து மாணவர்களின் மனங்களில் நிலை பெற்று விளங்குபவர். ஆங்கில மொழியொடு தமிழ், பாளி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளிலும் புலமைபெற்ற பன்மொழிப் புலமையாளர் இவர். உயர்தர வகுப்பு மாணவர்களிற்கு தமிழ், இந்து நாகரிகம் ஆகிய பாடங்களையும் சிறப்பாகப் போதித்து வந்தவர். காரைநகரில் அமைந்திருந்த பிரதான தனியார் கல்வி நிலையங்கள் இவர் மூலமாக மாணவர்களிற்கு ஆங்கிலக் கல்வியை போதித்து வந்தமை இவரது ஆங்கிலப் புலமைக்கும் கற்பித்தல் திறனிற்கும் சான்று பகர்வதாகவுள்ளது. இவரால் ஆங்கிலத்தில் எழுதப்பெற்று வெளியிடப்பட்டிருந்த கட்டுரை நூல்களும், பயிற்சி நூல்களும் ஆசிரிய சமூகத்தினதும் மாணவ சமூகத்தினதும் வரவேற்பினைப் பெற்று பெரிதும் பயனுடையதாகவிருந்தன. நவாலியிலிருந்து கிரமமாக வருகை தந்து அர்ப்பணிப்போடு அளப்பரிய சேவையாற்றிய முன்னுதாரணமான ஆசிரியப் பெருந்தகையாக விளங்குபவர். கல்லூரியின் இடப்பெயர்வு காலத்தில் வசதியான பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லக்கூடிய வாய்ப்பு இருந்தபோதிலும் காரை.இந்துவிலேயே சேவையாற்ற வேண்டும் என்ற பெரு விருப்போடு இறுதிவரை சேவையாற்றி இளைப்பாறியவர்.
அனைவராலும் ‘நடமாடும் நூல்நிலையம்’ எனப் போற்றப்பட்ட அமரர் செல்வரத்தினம் அவர்களது இழப்பினால் ஆறாத் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்திற்கு பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை ஆழ்ந்த அனுதாபத்தினையும் ஆறுதலையும் தெரிவிப்பதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றது.
No Responses to “காரை.இந்துவின் ஓய்வுநிலை ஆங்கில ஆசிரியர் K.M.செல்வரத்தினம் அவர்களின் மறைவிற்கு பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் அனுதாபம்.”