இலங்கை “வாழ்வின் எழுச்சி” திணைக்களத்தினால் சமுர்த்தி பயனாளிகள் குடும்பத்தைச் சேர்ந்த கெக்குல சிறுவர் கழகங்களுக்கிடையில் தேசிய மட்டத்தில்; நடத்தப்பட்ட தனிப்பாடல் போட்டியில் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலத்தை (காரைநகர் இந்துக் கல்லூரி) சேர்ந்த செல்வி.அமிர்தா ஆனந்தராசா இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்து கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
தேசியமட்டத்தில் 2012 ஆம் ஆண்டில் நடைபெற்ற விஞ்ஞான புத்தாக்கப் போட்டியில் கல்லூரி அணியும், 2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற கணித ஒலிம்பியாட்போட்டியில் செல்வி.சி.விதுஷா அவர்களும் 2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற சிறிலங்கா இளைஞர் தேசிய விருதுப் போட்டியில் செல்வி.அமிர்தா ஆனந்தராசாவும் பங்கு பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளையில் மேற்படி கெக்குல சிறுவர் கழகங்களுக்கிடையில் தேசிய மட்டத்தில் நடைபெற்ற அறிவிப்பாளர் போட்டியில் செல்வன் K.விநோதன் இவ்வாண்டு பங்குபற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நீண்ட காலத்திற்கு பின்னர் காரை இந்துவிற்கு கிடைத்த தேசிய மட்ட சாதனையாக மாணவி செல்வி அமிர்தா ஆனந்தராசாவின் சாதனை பதிவாகியிருக்கின்றது.
1990 களின் தொடக்கம் வரை காரைநகரில் வாழ்ந்த மக்கள் தொகையின் ஏறத்தாழ 25 சதவீதமான மக்களே இன்று காரைநகரில் வாழ்ந்து வரும் நிலையில் அன்றைய கல்லூரி மாணவர் தொகையின் 50 சதவீத எண்ணிக்கையிலான மாணவர்களே இன்று எமது பாடசாலையில் கல்வி கற்று வரும் நிலையில் இவ்வாறான தேசிய மட்ட சாதனைகளை வென்று பாடசாலைக்கும் ஊருக்கும் பெருமை சேர்க்கும் மாணவர்கள், சேவையாற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவர்கள்.
சாதனையாளர் செல்வி.அமிர்தாவும் அவருக்கு பயிற்சி அளித்த கல்லூரியின் இசைத்துறை ஆசிரியைகளான திருமதி கலாசக்தி றொபேசன், திருமதி பங்கையற்செல்வி முகுந்தன் ஆகியோரும் கல்லூரியை வழிநடத்திவரும் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களும் பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் உரியவர்கள்.
No Responses to “தேசிய மட்டப் போட்டியில் காரை இந்து இரண்டாம் இடம் பெற்று சாதனை”