கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற (காரைநகர் இந்துக் கல்லூரி) மனித மேம்பாட்டுக் கல்வித் தொடரில் இணைந்து கொண்ட 30 மாணவர்களும் அண்மையில் யாழ் நகரின் பிரதான இடங்களிற்கு கல்விச் சுற்றுலா சென்றிருந்தனர்.
கல்லூரியில் எட்டு மாதங்களாக நடைபெற்று கடந்த ஏப்பிரலில் நிறைவு பெற்ற மனித மேம்பாட்டுக் கல்வித் தொடரின் பிரதான வளவாளரான திரு.த.மேகநாதன் அவர்கள் இக்கல்விச் சுற்றுலாவிற்கான பிரதான அநுசரணையை வழங்கியிருந்தார். அதிபர் திருமதி.வாசுகி தவபாலன், பகுதித் தலைவர் திரு.தெ.லிங்கேஸ்வரன் ஆகியோரும் இச்சுற்றுலாவில் உடன் சென்றிருந்தனர்.
சுற்றுலாவின் முதல் நிகழ்வாக மாணவர்கள் யாழ்ப்பாணம் இராமநாதன் வீதியில் அமைந்துள்ள சத்திய சேவா நிலையத்திற்குச் சென்று அங்கே நடைபெற்ற கூட்டு வழிபாடுகளில் மாணவர்கள் கலந்து கொண்டதுடன் காரை இந்து மாணவர்களின் “ சேவை ஒரு யோகம்” எனும் நாடகமும் மேடையேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாணவர்கள் யாழ் பல்கலைக்கழகம், யாழ் பொது நூலகம், யாழ்ப்பாணம் சுப்பிரமணியம் பூங்கா, யாழ்ப்பாணம் தொடரூந்து நிலையம், யாழ் கோட்டை, யரழ் கச்சேரி, பழைய பூங்கா வீதியிலுள்ள பூங்கா ஆகிய இடங்களையும் சென்று பார்வையிட்டனர்.
அத்துடன் பாடசாலை சமூக நல்லிணக்க செயற்பாடுகளை வலுப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, அன்றைய தினம் நடைபெற்ற சிங்கள பௌத்தமத பிரதான சமய நிகழ்வான பொசன் பண்டிகையிலும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதேவேளையில், கடந்த ஆண்டில்(2014) விசேட தேவையுடைய மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கில் திருகோணமலை நகருக்கும், பல்வேறு போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்களை ஊக்குவிக்குமுகமாக மன்னார் திருக்கேதீஸ்வரம், மடு தேவாலயம், சென் சேவியர் மகா வித்தியாலயம், கேரதீவு, சங்குப்பிட்டி ஆகிய இடங்களிற்கும் மாணவர்கள் கல்விச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மனித மேம்பாட்டு கல்வி மாணவர்களின் யாழ்நகர சுற்றுலாவின்போது எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.
No Responses to “காரை இந்து மாணவர்கள் சென்ற கல்விச் சுற்றுலா”