எமது கல்லூரியின் முன்னாள் அதிபர் திருமதி.தேவநாயகி பாலசிங்கம் அவர்களின் அன்புக் கணவரும் எமது கல்லூரியின் பழைய மாணவருமான திரு.மார்க்கண்டு பாலசிங்கம் (முன்னாள் உதவி முகாமையாளர், மக்கள் வங்கி) அவர்கள் செவ்வாய்கிழமை (18.08.2015) அன்று கொழும்பில் சிவபதம் அடைந்தார் என்ற செய்தி அறிந்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளை ஆழ்ந்த துயரம் அடைந்துள்ளது.
எமது கல்லூரியின் பழைய மாணவியும், விஞ்ஞான பட்டதாரியுமான திருமதி. தேவநாயகி பாலசிங்கம் அவர்கள் எமது கல்லூரியில் 23 ஆண்டு காலமாக உயிரியல் விஞ்ஞான ஆசிரியராகவும், பிரதி அதிபராகவும், அதிபராகவும் சேவையாற்றியவர் ஆவார். கல்லூரியின் முதலாவது பெண் அதிபர் என்ற பெருமையைப் பெறுவதுடன் 1991 இடப்பெயர்வு காலத்தில் கல்லூரியின் தனித்துவத்தைப் பேணி வளர்ப்பதில் அரும்பாடுபட்டார். காரைநகரில் மீளக் குடியேறியபோது கல்லூரியை துணிவுடன் சொந்த இடத்தில் இயங்க வைத்து மீளக்கட்டியெழுப்புவதற்கு ஆரம்ப கர்த்தாவாக இருந்து ஏனைய பாடசாலைகளுக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்த அதிபர் திருமதி.தே.பாலசிங்கம் அவர்கள் ஆவார்.
இத்தகைய அர்ப்பணிப்பும் துணிவும் ஆளுமையும்மிக்க அதிபர் திருமதி.தேவநாயகி பாலசிங்கம் அவர்கள் எமது கல்லூரியின் வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகளுக்கு அவருக்குப் பின்னால் உறுதுiணையாகவிருந்து உற்சாகமளித்தவர் அவரின் அன்பிற்குரிய வாழ்க்கைத் துணைவர் திரு.மார்க்கண்டு பாலசிங்கம் அவர்கள் என்றால் அது மிகையாகாது.
அத்தகைய அன்புக் கணவரை இழந்து தவிக்கும் எமது கல்லூரியின் முன்னாள் அதிபர் திருமதி.தேவநாயகி பாலசிங்கம் அவர்களுக்கும் அவரது புதல்வர் மற்றும் குடும்பத்தினருக்கும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளை அநுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய ஈழத்துச் சிதம்பரத்தில் உறையும் சிவகாமி சமேத நடராசப் பெருமானை இறைஞ்சுகின்றது.
கலாநிதி.ஆ.தியாகரசா ம.ம.வித்தியாலய(காரைநகர் இந்துக் கல்லூரி) பழைய மாணவர் சங்கம்-கனடா
முழுமையான கண்ணீர் அஞ்சலியைக் கீழே காணலாம்.
No Responses to “அமரர். மார்கண்டு பாலசிங்கம் அவர்களின் மறைவு குறித்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் கண்ணீர் அஞ்சலி”