கல்வி அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய குடியியல் கல்விப் பாடத்தின் (Civic Education) ஓர் அங்கமாக மாணவர் பாராளுமன்றத் திட்டம் பாடசாலைகளில் செயற்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் செயற்பாட்டு ரீதியான அனுபவங்களைப் பெற்றுக்கொள்கின்ற வாய்ப்பாக பாராளுமன்றத் திட்டம் அமைந்துள்ளது. ஜனநாயகம், அதன் பொறுப்புக்கள், சட்டத்தின் மேலாதிக்கம், வாக்கின் முக்கியத்துவம், என்பவற்றை உணரவைப்பதுடன் மாணவர்களின் பலதரப்பட்ட திறன்களை மேம்படுத்துவதே இப்பாராளுமன்றத் திட்டத்தின் நோக்கமாகும். அந்தவகையில் காரைநகர் இந்துக் கல்லூரியில் உருவாக்கப்பட்ட மாணவர் பாராளுமன்றம் இவ்வாண்டு இரண்டு அமர்வுகள் கூடியது. கல்லூரியின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்களின் தலைமையில் ஆரம்பமான இப்பாராளுமன்ற அமர்வுகள் சபாநாயகரின் வருகையைத் தொடர்ந்து பாராளுமன்ற நடவடிக்ககைகள் நடைபெற்றன.
பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் சபாநாயகர், பிரதி சபாநாயகர், சபை முதல்வர், பிரதமர், பிரதிச் செயற்குழுத் தலைவர், பத்து பிரதான அமைச்சுக்களிற்கான அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர்.
சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற இரண்டாவது அமர்வில் தீவக கல்வி வலயத்தின் சமூக விஞ்ஞான பாட ஆலோசகர் திரு.பா.பாஸ்கரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். இவ் அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சத்தியப் பிரமாணம் செய்ததைத் தொடர்ந்து பதவி வழியால் செயலாளர்நாயகமான அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்கள் அறிமுக உரையாற்றினார். பத்து அமைச்சர்களும் தமது பிரேரணைகளை முன்வைத்த பின்னர் பிரதமரினால் தொகுப்புரை நிகழ்த்தப்பட்டிருந்தது. சபை முதல்வர் அடுத்த அமர்விற்கான திகதியை அறிவித்ததைத் தொடர்ந்து சபாநாயகர் மன்றை ஒத்திவைத்தார்.
இரண்டு அமர்வுகளின்போதும் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
No Responses to “காரை.இந்துவின் மாணவர் பாராளுமன்றத்தின் இரண்டு அமர்வுகள் நடைபெற்றுள்ளன.”