ஆசிரியர்களின் மகத்துவத்தை சமூகத்திற்கு உணர்த்துகின்ற ஆசிரியர் தின கொண்டாட்டம் பழைய மாணவர் சங்க கனடா கிளையின் அனுசரணையில் சிறப்புற நடைபெற்றது.
1994ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி விஞ்ஞான கலாச்சார நிறுவனத்தினால் (UNESCO) ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி சர்வதேச ஆசிரியர் தினமாக பிரகடனம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இத்தினத்தில் ஆசிரியர்கள் பல்வேறு வழிகளில் மதிப்பளிக்கப்பட்டு அவர்களது சமூகத்திற்கான அர்ப்பணிப்பும் மகத்துவம் மிக்கதுமான சேவை நன்றியுணர்வுடன் நினைவு கூரப்பட்டுவருகின்றது.
கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் தினம் சென்ற ஒக்டொபர் மாதம் 6ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணிக்கு நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரியின் உயர்தர மாணவர்களின் ஏற்பாட்டிலும் அதிபர் திருமதி வாசுகி தவபாலன் அவர்களின் நெறிப்படுத்தலிலும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு கல்லூரி அதிபரும் ஆசிரியர்களும் மதிப்பளிக்கப்பட்டிருந்தனர்.
இக்கொண்டாட்டத்திற்கான அனுசரணையினை பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை வழங்கி உதவியிருந்தது. ஆசிரியர்களின் சேவை முன்னிலைப்படுத்தப்பட்டு அவர்களை கௌரவித்து ஊக்குவிக்கும் செயற்பாடுகளிற்கு ஆதரவளிக்க வேண்டும் என பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் வருடாந்த பொதுக்கூட்டத்தின்போது தெரிவித்திருந்த ஆலோசனையை உள்வாங்கிக்கொண்டே ஆசிரியர் தின கொண்டாட்டத்தின் முக்கியத்துவம் கருதி அனுசரணை வழங்குவதென சங்க நிர்வாகம் தீர்மானித்து கடந்த இரு வருடங்களாக நிதி உதவியளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
உயர்தர மாணவர் மன்றத்தின் தலைவர் செல்வன் க.தர்சிகன் தலைமையில் நடைபெற்ற கொண்டாட்ட நிகழ்வில் கல்லூரியின் ஓய்வு நிலை ஆசிரியரும் ஓய்வநிலை வடமாகாண கல்விப் பணிப்பாளரும் ஓய்வுநிலை வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் பிரதிச் செயலாளருமாகிய திரு.ப.விக்கினேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்திருந்ததுடன் கல்லூரியின் ஓய்வுநிலை அதிபர் திரு.கா.குமாரவேலு ஓய்வுநிலை ஆசிரியர் திரு.க.சோமாஸ்கந்தன் காரைநகர் கோட்டக் கல்விப் பணிமனை நிர்வாக உத்தியோகத்தர் திரு.சி.பிரபாகரன் பாடசாலையை உன்னதமான நிலைக்கு கொண்டுவர கால் நூற்றாண்டுகளாக அயராது உழைத்த வெள்ளி விழா அதிபர் திரு.ஆ.தியாகராசாவின் புதல்வியும் கல்லூரியின் பழைய மாணவியும் கல்லூரியின் ஓய்வுநிலை ஆசிரியையுமாகிய திருமதி புனிதவதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் பங்குகொண்டு நிகழ்வினை மேலும் பொலிவுற்று விளங்க வைத்திருந்தனர்.
அறிவு என்னும் ஞான ஒளியை மாணவர்களுக்கு ஊட்டும் ஆசிரியர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசில்களாக மங்கலகரமான காமாட்சி விளக்கு வழங்கப்பட்டிருந்ததுடன் மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதிய போசன விருந்திலும் விருந்தினர்களுடன் கலந்துகொண்டு மகிழ்ந்திருந்தனர்.
நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.
No Responses to “ஆசிரியர் தின கொண்டாட்டம் பழைய மாணவர் சங்க கனடா கிளையின் அனுசரணையில் சிறப்புற நடைபெற்றது”