நூல் வெளியீடு
சைவ ஆசிரியர்களை தோற்றுவித்த திரு ச.அருணாசலம் உபாத்தியாயர் (1864- 1920).
(மீள்பதிப்பு 2015)
காலம் :- 22/11/2015 ஞாயிற்றுக்கிழமை , மாலை 04:30மணியளவில்
இடம் :-Highgatehill Murugan Temple Hall
200A Archway Rd, London N6 5BA.
காரைமண் பெற்றெடுத்த மகான் சங்கரப்பிள்ளை அருணாசலம்
யாழ்ப்பாணத்தின் மூன்று தமிழ் சார்ந்த சமயக் கண்கள், அதில் ஒருவர் எம் அருமை அருணாசல உபாத்தியாயர். மற்றிருவர் தவத்திரு ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலப் பெருமான்( 1822- 1879) மற்றும் திரு.சு .இராசரத்தினம்(1884-1970) ஆவர் .
நாவலப் பெருமான் மறைவுக்கு பின்னர் அவர் பணியை முழுமூச்சாய் முன்னெடுத்து வெற்றி கண்டவர் எம் அருமை ஆசான் அருணாசலம் ஐயா அவர்கள். ஆங்கிலேயர் ஆட்சியில் தமிழையும் சைவைத்தையும் , பேசியும் பூசியும் போராடி தக்க வைத்தவர்கள் இவர்கள்.
காரைநகர் வடக்கில் மல்லிகை குறிச்சியை சேர்ந்த சிற்றம்பலம் சங்கரப்பிளைக்கும் , அவரின் பண்புமிக்க பாரியார் பத்மினியம்மாவுக்கும் 1864ம் ஆண்டு ஒக்டோபர் மாதம்31ம் திகதி புத்திரராக அவதரித்தார் திரு.அருணாசலம் ஐயா அவர்கள். எமது அல்லின் ஏபிரகாம் காலத்தில் வாழ்ந்த சமகால சரித்திர நாயகன் இவர். அல்லின் ஏபிரகாம் அவர்கள் கற்பகதருவினூடே வால்வெள்ளியை வயப்படுத்த , ஐயா அருணாசலம் அவர்கள் தமிழ் மொழியை காக்கவும், சைவசமயத்தை பேணவும் அரும்பாடுபட்டார். ஆறுமுக நாவலர் மறைவுக்கு பின் சைவ ஆசிரியர்களை தோற்றுவிப்பதிலும், சைவ தமிழ் பாடசாலைகளை உருவாக்குவதிலும் அரும்பாடுபட்டார். தனது பூர்வீக சொத்துக்களை விற்று இவற்றை நிர்வகிக்க போராடினார்.
— 10/04/1970 இல் வெளிவந்த இந்துசாதனத்தில் நூலாசிரியர், பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் எழுதிய கட்டுரையில் பின்வருமாறு கூறியிருக்கின்றார் —
நாவலர் மறைந்தது 1879 இறுதியில். 1880இக்கு பின் தெல்லிப்பளையில் கிறிஸ்தவ ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஒன்று தோன்றியது. ஆங்கிலம் படிக்க பணமில்லாத வறிய மீன்கள் அங்கே அகப்பட்டன . ஒரு மீன் மட்டும் ஞானஸ்தானத் தீட்சைக்கு அகப்படாமல் நீண்டகாலந் தப்பித்துக்கொண்டிருந்தது.1885இல் ஆசிரிய பயிற்சிப் பத்திரம் பெறுங்காலம் நெருங்கிக் கொண்டிருந்தது. ” இதோ பிடி ஞானஸ்நானம் ! ஓ ! அஞ்ஞானியே !” என்ற நெருக்கமிருந்தது.
1885இல் ஒரு நாள் இரவு அந்த அஞ்ஞான மீனுக்கு நித்திரை வரவில்லை. கோழி கூவும் நேரத்தில் அந்த அஞ்ஞான மீனின் உள்ளத்தில் ஒரு சேவல் கூவியது. அந்தச் சேவல் , சேவலும் மயிலும் என்ற இடத்தில் வரும் சேவலுக்கினமான சேவல் போலும்!! அந்த ஞானமீன் துடிதுடித்துத் துள்ளி எழுந்தது. வலையைப் பீறிட்டுக் கொண்டு, மதிலைக் கடந்து விடிகிற சமயம் தெல்லிப்பளைத் தெருவில் குதித்தது. அது காரைதீவு மீன், ”அருணாசலம் ” என்பது அந்த மீனின் திவ்விய திருநாமம்.
அருணாசலத்திற்கு திருநீறு பூசுகிறவர்களும் பயிற்சி பெற்ற ஆசிரியர்களாக வேண்டுமென்ற பைத்தியம் உண்டானது. முப்பது வருடம் ஊண் , உறக்கம் செவ்வனே இன்றித் தெருத்தெருவாய் அலைந்தார் அந்த மகான் அருணாசலம். ஒருமுறை கால் நடையிற் கொழும்புக்கு போய், சேர் .அருணாசலத்தைக் கண்டவர் காரைதீவு அருணாசலம் என்ற கதையும் உண்டு.
இப்படியான பலபல பெரும் மகான்களை பெற்றெடுத்த எமது காரை மண்ணில் நாமும் அவதரித்துள்ளோம் என்று பெருமை கொள்வதுடன் நின்றுவிடாது, அவர்களின் பணிகளையும் , அவர்கள் வரலாறுகளையும் முன்னெடுத்து பேணிப் பாதுகாக்க எம் அடுத்த சந்ததிக்கு தாரை வாருங்கள்.
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் பிரித்தானியா காரை நலன் புரிச் சங்கத்தினர்.
ப.தவராஜா,
முதுசங்களைத் தேடி, நூல் வெளியீட்டுக் குழு,
பிரித்தானியா காரை நலன் புரிச் சங்கம்
No Responses to “பிருத்தானியாவில் “சைவாசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம் அவர்கள்” நூல் வெளியீட்டு விழா”