ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சைவத்தையும் தமிழையும் பாதுகாக்க கல்வி என்னும் கருவியைத் தனது கையிலெடுத்தவர் எமது காரைநகர் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்கள்.
காரைநகரிலும், யாழ் குடாநாட்டிலும் இன்றும் சைவப் பாரம்பரியம் மிக்க பாடசாலைகளாக விளங்கி சாதனைகள் படைத்து வரும் கல்விக்கூடங்களையும் ஆசிரியர் கலாசாலையையும் நிறுவிட மூலகர்த்தாவாக தனது உடல், பொருள், ஆவி அத்தனையையும் அர்ப்பணித்து உழைத்த காரைநகர் தந்த அருணாசல உபாத்தியாயர் அவர்கள் நாவலர் பெருமானுக்கு அடுத்து வைத்துப் போற்றப்படுகின்றார்.
சைவப்பாரம்பரியத்தைப் பேணியவாறு கல்விப்பயிர் வளர்ந்த மகான் அருணாசலம் அவர்களுக்கு காரைநகர் மைந்தர்கள் ஒவ்வொருவரும் நன்றிக்கடன்பட்டவர்கள் ஆவார்.
அந்த நன்றிக் கடனைச் செலுத்தும் வகையில் பிருத்தானியா வாழ் காரை மைந்தர்களின் அமைப்பான பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கம் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்களின் சரிதம் அடங்கிய “சைவாசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம் அவர்கள்” என்ற நூல் வெளியிட்டு விழாவை ஏற்பாடு செய்துள்ளது.
மேற்படி நூலின் முதல் பதிப்பு காரைநகர் சைவமகா சபையினால் 1971 ஆம் ஆண்டு காரைநகரில் வெளியிடப்பட்டது. இந்நூலின் மூலப்படியுடன் மகான் ச.அருணாசலம் அவர்கள் பற்றிய மேலும் கட்டுரைகள், தகவல்கள் அடங்கிய இரண்டாம் பதிப்பு கனடா சைவ சித்தாந்த மன்றத்தினால் கடந்த ஜுலை மாதம் கனடாவில் வெளியிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தமக்கே உரித்தான தனித்துவமான துடிப்புடனும் பொறுப்புடனும் மிகச் சிறப்பாக இந்நூலினை பிருத்தானியா வாழ் காரை மக்களுக்கும் கல்வியாளர்கள், சைவத் தமிழ் அன்பர்களுககும் அறிமுகஞ் செய்து வெளியிட இருக்கும் பிருத்தானியா காரை நலன்புரிச்சங்கத்திற்கு தமது பாராட்டுகளைத் தெரிவிப்பதுடன் இந்நூல் வெளியீட்டு விழா வெற்றி பெற கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை வாழ்த்துகின்றது.
No Responses to “பிருத்தானியாவில் “சைவாசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம் அவர்கள்” நூல் வெளியீட்டு விழா சிறப்புற வாழ்த்துகின்றோம்”