தமிழ்கூறும் நல்லுலகு எங்கும் தனது நாவன்மையால் பெரும் புகழ் பெற்று விளங்கும் தமிழறிஞரும் ஆன்மீக, இலக்கிய சொற்பொழிவாளரும், பட்டிமன்றப் பேச்சாளருமாகிய தமிழருவி தம்பிராஜா சிவகுமாரன் அவர்கள் சைவம், தமிழிலக்கியம், பேச்சுத்துறை ஆகியனவற்றிற்கு ஆற்றிய உன்னதமான பணிகளுக்காக ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சமூகமும், கொழும்பு இந்துக் கல்லூரிச் சமூகமும் இணைந்து வழங்கிய இவ்விருதானது இவ்விரு கல்லூரிகளினது அணிகளும் கலந்துகொண்ட சொல்லாடல் நிகழ்வில் வைத்து வழங்கப்பெற்றிருந்தது.
சிவகுமாரன் அவர்கள் எமது புலம் பெயர் சமூகத்தின் அழைப்பினை ஏற்று சர்வதேசத்தின் பல நாடுகளிற்கும் சென்று சொற்பொழிவுகள் நிகழ்த்தி புலம்பெயர் சமூகத்தினதும் நன்மதிப்புக்குரிவராக விளங்குபவர். பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சொற்பொழிவுகளிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களிலும் பங்குபற்றி சாதனை படைத்தவர். 82 விருதுகளிற்குச் சொந்தக்காரரான சிவகுமாரன் அவர்கள் 83வது விருதாக வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றமை சிறப்பானதாகும்.
சிவகுமாரன் அவர்கள் காரைநகர் இந்துக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்து அனுபவங்களை பதிவுசெய்தபோது தனது ஆளுமையை வளர்த்த கல்லூரிகளில் காரை.இந்துவிற்கு முதலிடம் உண்டு எனக் குறிப்பிட்டுள்ளதுடன் சமய, இலக்கிய சொற்பொழிவாளராக மிளிர்வதற்கு மிக அரிய விடயதானங்களைத் தந்தது கல்லூரியின் அரிய பொக்கிசமாக விளங்கிய நூல்நிலையமேயாகும் எனக் குறிப்பிட்டுள்ளமை இத்தருணத்தில் பெருமையுடன் நினைவுகூரத்தக்கதாகும்.
சிவகுமாரன் அவர்கள் ‘வாழ்நாள் சாதனையாளர’ விருது வழங்கி சிறப்புச் செய்யப்பட்டமை குறித்து பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை மிகுந்த பெருமிதம் கொள்வதுடன் அவரைப் பாராட்டி வாழ்த்துவதில் பேருவகையடைகிறது.
விருது வழங்கப்பெற்றபோது எடுக்கப்பட்ட சில புகைப் படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன:
No Responses to “காரை.இந்துவின் முன்னாள் ஆசிரியர் தமிழருவி த.சிவகுமாரன் ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.”