எனது ஆறு வருட கல்லூரி வாழ்வில்….
திரு.செ.பத்மநாதன் B.Sc. , முன்னாள் அதிபர்
விக்ரோறியாக் கல்லூரியின் 26 வருட தொடர்சேவை 03-03-1981 இல் கிடைத்த காரைநகர் இந்துக் கல்லூரிக்கான இடமாற்றக் கடிதத்துடன் நிறைவுபெற்றது. உயிரியல் ஆசிரியராக பதவியேற்றேன். அப்போது எனது மாணவனே அதிபராக இருந்தார்.
காரைநகர் இந்துககல்லூரி எனக்கு புதிய இடம், புதிய சூழல், புதிய ஆசிரிய நண்பர்கள், காரைநகர் கிராமப்புற சூழல் மிகுந்த பிரதேசம், அங்குள்ள மக்கள் எளிமையான வாழ்க்கை வாழ்பவர்கள். நிறைந்த சமயப்பற்றுள்ளவர்கள். மூதாதையருக்கு பிதிர்க்கடன் செலுத்துவதில் மிக சிரத்தை காட்டுபவர்கள். அதனால் செல்வச் செழிப்புடன் வாழ்கிறார்கள். பெரும்பாலானவர்கள் சுயதொழிலாக வர்த்தகத்தையே கொண்டவர்கள். பெருகப் பொருளைத் தேடி சிக்கனமாக செலவு செய்பவர்கள்.
ஏனக்கு வியப்பான விடயம் காரைநகர் மக்கள் சிக்கனமாக தண்ணீரைப் பாவிப்பது.அப்படி சிக்கனத்தை கடைப்பிடிக்காவிட்டால் அந்தச்சூழலில் வாழ்வது கடினம்.
காரைநகர் கோவில்கள் நிறைந்த புண்ணியபூமி.மக்கள் மிகுந்த ஆசாரத்தோடு சமயத்தை கடைப்படிக்கிறார்கள்.ஈழத்துச ;சிதம்பரம் மிகப்பிரசித்திபெற்ற பதியாகும். காரைநகரில் கந்தபுராண கலாசாரம் இன்னும் நிலவுகிறது.
இவ்வளவு சிறப்புப்பெற்ற பூமியின் கலங்கரை விளக்கமாக விளங்குவது காரைநகர் இந்துக் கல்லூரி.தற்போது கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம்.இக்கல்லூரி காரைநகரின் நுழை வாசலில் அமைந்திருந்து எல்லோரையும் வருக என வரவேற்கின்றது.
இக்கல்லூரி 1888ஆம் ஆண்டு பெரியார் முத்து சயம்பு ஆசானால் ஆரம்பிக்கப்பட்டது. இக்கல்லூரி பெரு வளர்ச்சி காண்பதற்கு அவருடைய ஆழ்ந்த சிந்தனை ஆத்மீக பலம் கடும் உழைப்பு என்பன மூலதனங்களாகும். பலமான மூலதனத்தினால் தான் அது தழைத்து ஓங்கி பல்கிப்பெருகி ஒரு பழம்பெரும் விருட்சமாக மிளிர்கிறது.
பழைய மாணவர்கள் தம்மை வாழ வைத்த கலாலயத்தை நன்றிக்கடனுடன் நேசிக்கிறார்கள்.
கல்லூரியில் உள்ள கலைமகள் கோயில் இறைபக்தியை இளமையிலேயே மனதில்; பதித்து முதிரும்போது சமய ஆசாரத்தில் வாழ வழி செய்கின்றது. ஒவ்வொருநாளை தொடங்கும்போதும் இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கும் பழக்கத்தையும் வளர்க்கிறது.
புழமை வாய்ந்த பெருமை வாய்ந்த எண்ணிறைந்த நூல்களால் நிரப்பப்பட்ட நூல்நிலையம் கல்லூரிக்கு அரிய பொக்கிசமாக அமைந்திருந்தது. அதையிட்டு பெருமைப்பட்டிருந்தோம். ஆனால் எதிர்பாராதவிதமாக வந்த யுத்த நிகழ்வுகள் நூல் நிலையத்தை அப்படியே சிதைத்து விட்டது. இது தாங்கமுடியாத துயரச்சம்பவம். இதேபோல் விஞ்ஞானகூடம் மனையியற்கூடம் போன்றவையும் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகிவிட்டது.
இவற்றையெல்லாம் ஒரு சவாலாக ஏற்று அவற்றை புதுப்பித்து மாணவர்களின் தற்காலத் தேவைகளிற்கும் வருங்கால வளர்ச்சிக்கும் ஏற்றவாறு அமைத்துக்கொடுப்பது பழைய மாணவரின் கட்டாய பணியாகும்.
தற்காலத்தில் தொழில்நுட்பம் (Technology) அபரிதமாக வளர்ச்சி கண்டுள்ளது. அதற்கு முகங்கொடுக்கக்கூடிய விதத்தில் எங்கள் கல்லூரி மாணவர்கள் தயார் செய்யப்படவேண்டும். இதற்கான வசதிகள் மிகுந்த கவனத்துடன் திட்டமிடப்படவேண்டும்.
நாளுக்குநாள் புதிய கண்டுபிடிப்புகள் வந்தவண்ணம் உள்ளன. இதனால் திட்டமிடும்போது வருங்கால சவாலையும் சமாளிக்கக்கூடிய வகையில் அது அமையவேண்டும். (Competent People) தகுதி வாய்ந்தவர்களினால் திட்டம் தயாரிக்கப்படவேண்டும். இது கட்டாய தேவை. இப்படிச்செய்வதால் எங்கள் கல்லூரி மாணவர் எவருக்கும் சளைத்தவர்கள் அல்லர் என்ற நிலை உருவாக வேண்டும்.
ஒரு குறைபாட்டை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். விளையாட்டுத் துறை நவீனப்படுத்தப்படவேண்டும். குடாநாட்டில் நடைபெறும் எல்லாப்போட்டிகளிலும் பங்கு பற்றக்கூடிய மனோநிலைகொண்ட மாணவரை உருவாக்க வேண்டும். நவீன உபகரணங்களும் சிறப்புப் பயிற்சியாளகளும் அமர்த்தப்படவேண்டும்.
எங்கள் கல்லூரி பல்லாண்டு வாழ்ந்து பல்லாயிரம் மாணவருக்கு வாழ்வளிக்க எல்லாம் வல்ல ஈழத்து சிதம்பரத்தான் கருணை புரிய வேண்டுகிறேன்.
நன்றி: சயம்பு மலர் 2005
No Responses to “முன்னாள் அதிபர் திரு.செ.பத்மநாதன் அவர்களின் அநுபவப் பதிவுகள்”