மண்டபம் நிறைந்த ரசிகர்களுடன் கரை புரண்டோடிய ‘காரை வசந்தம்’
-காரைக் கூத்தன்-
கனடா-காரை கலாச்சார மன்றம் வழங்கிய காரை வசந்தம் 2015, நவீன வசதிகளுடன் அமைந்த சீன கலாசார மண்டபத்தில் அரங்கம் நிறைந்த ரசிகர்களுடன் வெற்றிகரமாக நேற்றய தினம் நடந்து அனைவரதும் பாராட்டினைப் பெற்ற கலைகளின் சங்கமமாக அமைந்து விளங்கியது.
சரியாக மாலை 6.00 மணிக்கு விழாவின் முதன்மை அனுசரணையாளர் குழந்தைகள் மருத்துவ நிபுணர் வி.விஜயரத்தினம், மன்றத்தின் முன்னாள் தலைவர் திரு.கோபால் மயில்வாகனமும் பாரியாரும், முன்னாள் பொருளாளர்களான திரு.சபாரத்தினம் பாலச்சந்திரனும் பாரியாரும, மன்றத்தின் தலைவர் இரவி இரவீந்திரனும் பாரியாரும், கலாநிதி தம்பிராசா ரவிச்சந்திரனும் பாரியாரும் ஆகியோரினால் மங்கள விளக்கேற்றிவைக்கப்பட்டு விழாவின் நிகழ்ச்சிகள் மங்களகரமாக ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தன. அக வணக்கத்தைத் தொடர்ந்து காரைச் சிறார்களினால் கனேடிய தேசியப் பண், தமிழ்மொழி வாழ்த்து, மன்றப் பண் என்பன அழகுற இசைக்கப்பட்டன.
மன்றத்தின் உப-தலைவரான திரு.குமரேசன் கனகசபை வரவேற்புரை நிகழ்த்தியதைத் தொடர்ந்து லயபிருந்தம் நுண்கலைக் கல்லூரி அதிபர் மிருதங்க கலாவித்தகர் ரதிரூபனின் உருவாக்கத்தில் 25க்கு மேற்பட்ட சிறுவர்கள் வழங்கிய ‘லயபிருந்தம்’ இசை நிகழ்வு ரசிகர்களை 45 நிமிட நேரத்திற்கு கட்டிப்போட்டிருந்த அற்புதமான நிகழ்வாக அமைந்திருந்தது. பாடல்களின் இசை, மிருதங்கம, வயலின, கீபோட, போன்ற இசைக்கருவிகளின் இசை ஆகியவற்றின் சங்கமமாக வித்தியாசமான முறையில் உருவாக்கப்பட்டிருந்தது ‘லயபிருந்தம.;’
காரை வசந்தம் விழாவினை முன்னிட்டு காரைச் சிறார்கள் மத்தியில் வழமைபோன்று இவ்வாண்டும் நடாத்தப்பட்டிருந்த தமிழ்மொழித் திறன் பண்ணிசை ஆகியவற்றில் வெற்றி பெற்ற சிறார்களிற்கான விருதுகளும் பங்குபற்றியவர்களிற்கான ஊக்கிவிப்பு விருதுகளும் வழங்கப்பட்டபோது சிறார்கள் மிகுந்த ஆர்வத்துடன் அவற்றினைப் பெற்றுச் சென்றனர். பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்றவர்கள் தமது பேச்சினை இவ்வரங்கில் நிகழ்த்துவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகின்ற முறைமை பாராட்டப்படக்கூடியதாகும்.
இவ்விழாவின் சிறப்பம்சங்களுள் ஒன்றான சிறப்பு மலரின் வெளியீட்டிற்கு பொறுப்பாக இருந்து செயற்பட்ட திரு.கனக.சிவகுமாரன் மலர்க்குழுவின் சார்பில் வெளியீட்டுரையினை சுருக்கமாக நிகழ்த்திய பின்னர் முதற்பிரதியை முன்னாள் மக்மாஸ்டர் பல்கலைக்கழகப் பேராசிரியர் கலாநிதி தி.சிவகுமாரன் அவர்களிற்கு வழங்கி வெளியிட்டுவைத்திருந்தார். காரைநகரிலிருந்தும் காரை மக்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலிருந்தும் அவ்வப்போது சஞ்சிகைகள் வெளியிடப்பட்டு வருகின்றதாயினும் கனடாவில் மட்டுமே தொடர்ச்சியாக 16 ஆண்டுகளாக காரை மண் சார்ந்த விடயங்களை ஆவணப்படுத்தி வெளிவருகின்ற ஒரு சிறப்புச் சஞ்சிகையாக ‘காரை வசந்தம்’ அமைந்திருப்பது என்பதை சாதனைப் பதிவாகப் பார்க்க முடியும் எனத் தெரிவித்ததுடன் இதையிட்டு கனடா-காரை கலாச்சார மன்றம் பெருமைப்படமுடியும் என கனக சிவகுமாரன் தமது வெளியீட்டுரையில் குறிப்பிட்டார்.
விகடன் குழுவினர் வழங்கிய ‘நாங்களும் கனடா தான்’ என்ற நகைச் சுவை நாடகத்தில் பங்கு கொண்ட வானொலிக் கலைஞர்கள் தென்னிந்திய சினிமா நகைச்சுவைக் கலைஞர்களுக்கு தாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்துச் சென்றனர். விவேக், வடிவேலு ஆகியோரை விகடன் குழுவினர் தூக்கி எறிந்து விட்டதாக இவ்விழாவினைக் கண்டு களித்துச் சென்ற கனடாவின் பிரபல பத்திரிகையான கனடா உதயனின் செய்திப் பிரிவினர் தமது முகநூலில் குறிப்பிட்டிருந்ததுடன் விழாவின் தரமான நிகழ்ச்சிகளை வெகுவாகப் பாராட்டி விமர்சித்திருந்தமை இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
எப்போழுதுமே வித்தியாசமான தயாரிப்புக்கனை வழங்கி ரசிகர்களின் பாராட்டினைப்பெற்று வரும் பால விமல நர்த்தனாலயம் அதிபர் திருமதி சித்திரா தர்மலிங்கத்தின் உருவாக்கத்தில் ‘திண்ணபுர தரிசனம்’ என்ற நடனம் ரசிகர்களை மெய்மறக்கச் செய்திருந்தது. அதேபோன்று அபிநயாலயா நாட்டியாலயம் அதிபர் திருமதி ரஜனி சக்திரூபன் வழங்கிய கண்ணன் நடனம், கலை அருவி கலைக் கல்லூரி அதிபர் திருமதி ரேணுகா விக்கினேஸ்வரன் வழங்கிய Fusion நடனம் என்பனவும் ரசிகர்களின் பலத்த வரவேற்பைப் பெற்றிருந்தன.
குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படக் காரணம் பெற்றோர்களா? பிள்ளைகளா? என்ற தலைப்பிலான பட்டி மன்றத்தில் காரைச் சிறார்கள் பங்குகொண்டு அசத்திவிட்டார்கள். பயிற்சி பெற்று இப்பட்டிமன்றத்தில் இவர்கள் தங்களது வாதத்தினை வைத்திருந்தாலும் பக்குவப்பட்ட பேச்சாளர்கள் போன்று இவர்கள் அடுக்குத் தமிழில் அழகாகப் பேசி வாதிட்டிருந்தமை அனைவரையும் வியக்கவும் சிந்திக்கவும் பூரிக்கவும் வைத்திருந்தது.
பிரபல வானொலி தொலைக்காட்சிக் கலைஞரான P.S.சுதாகரனின் உருவாக்கத்தில் ‘கனடா TO காரைநகர்’ என்ற நடன நாடகம் மண்டபத்திலிருந்தோருக்கு ஒரு கணம் காரைநகருக்கு சென்று வந்தது போன்ற உணர்வினை ஏற்படுத்தியிருந்தது.
KK Electronics நிறுவனத்தின் அதிபர் திரு.பொன்னம்பலம் குழந்தைவேலுவின் தொழில்நுட்பம் ஊடாக ஒவ்வொரு நிகழ்ச்சியின் போதும் காரைநகர்க் காட்சிகள் உள்ளிட்ட பொருத்தமான காட்சிகளை அரங்கின் பின்னால் அமைந்திருந்த பெரிய அளவிலான வெண்திரையில் விழுத்தியிருந்தமை இந்நிகழ்ச்சிகளிற்கு மெருகூட்டி அவற்றினை உன்னதமடையச் செய்திருந்தது.
பிரபலமான இசைக் குழுவான பயஸ் இசைக்குழுவின் இசை நிகழ்வு நேரப்பற்றாக்குறை காரணமான சுருக்கவேண்டி ஏற்பட்டமை ஏமாற்றமளிப்பதாகவிருந்ததாயினும் இக்குழுவினால் குறுகிய நேரத்தில் வழங்கப்பட்ட இனிமையான இசையில் அனைவரும் மூழ்கித்திளைத்தனர்.
கனடா-காரை கலச்சார மன்றத்தின் தலைவர் திரு.இரவி இரவீந்திரன் தமது தலைமையுரையில் வழமைக்கு மாறாக விடுமுறை காலமான டிசம்பர் மாதத்தில் இந்நிகழ்வினை நடாத்தியிருந்தபோதும் நாம் எதிர்பார்தததற்கு மேலாக காரைநகர் மக்களின் வருகை தமக்கு மகிழ்ச்சியளிப்பதாகவுள்ளதாக தெரிவித்ததுடன் இவ்விழாவின் வெற்றிக்கு ஆதரவு வழங்கி ஒத்துழைத்த அனைவரையும் பாராட்டி நன்றி கூறினார்.
பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்த மருத்துவ கலாநிதி சிவதேவி பாலசிங்கம் தமதுரையில் காரைச் சிறார்கள் தமிழோடு விளையாடியதும் கலைநிகழ்வுகளில் ஆற்றலை வெளிப்படுத்தியிருந்ததும் தம்மை வியக்க வைத்ததாகக் குறிப்பிட்டார்.
கனடா-காரை கலாச்சார மன்றத்தின் செயலாளர் கணேசன் பாலசுப்பிரமணியம் விழாவின் வெற்றிக்கு காரணமாகவிருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து உரையாற்றினார்.
கனடா பல்கலாசார வானொலியின் செய்தி வாசிப்பாளர் திருமதி கிருஷ்ணவேணி சோதிநாதன், கனேடிய தமிழ் வானொலியின் அறிவிப்பாளர் ரி.எஸ்.கோகுலன, திரு.சங்கரப்பிள்ளை தவராசா ஆகியோர் நிகழ்ச்சிகளை அழகுறத் தொகுத்து வழங்கி நிகழ்விற்கு அணிசேர்த்தனர்.
கலைஞர் P.S.சுதாகரன் நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டு தொய்வின்றி நிகழ்ச்சிகள் நடந்தேற சிறப்பாக அவற்றினை ஒழுங்கமைத்திருந்தார்.
நேரப்பற்றாக் குறையினை கருத்திற்கொண்டு இடைவேளை விடப்படாமலிருந்தமை ரசிகர்களிற்கு சிறிது சலிப்பினை ஏற்படுத்தியிருந்தது.
விழாவில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.
No Responses to “மண்டபம் நிறைந்த ரசிகர்களுடன் கரை புரண்டோடிய ‘காரை வசந்தம்’”