காரைநகர் மண்ணில் பிறந்த தியாகச்செம்மல் கல்விப்புரட்சி செய்த கருமவீரர் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்கள் தன் வாழ்நாளில் 30 ஆண்டுகளை அர்பணித்து தனது சொத்துக்கள் அனைத்தையும் எம் சமூகத்திற்காக தானம் செய்து எல்லாத் தானங்களிலும் சிறந்த தானமாககிய வித்தியாதானத்தை எமக்களித்த உத்தமராவார். ஏறத்தாழ 45 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த மாமனிதரை நினைவுகூர்ந்து வணங்கி வாழ்த்தி நன்றி செலுத்தும் விழா காரைநகரில் நடைபெற்றிருக்கிறது.
மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்களின் சரிதம் அடங்கிய “சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த மகான் ச.அருணாசலம் அவர்கள” என்ற நூல் வெளியீட்டு விழா கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய நடராஜா ஞாபகார்த்த மண்டபத்தில் ஓய்வு நிலை மாகாணக் கல்விப்பணிப்பாளர் திரு ப.விக்கினேஸ்வரன் அவர்களின் தலைமையில் 20.12.2015 ஞாயிற்றுக்கிழமை மாலை 2.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது. அதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்வியாளர்கள், நலன்விரும்பிகள். மற்றும் காரைநகர் மக்கள் என 150 இற்கு மேற்;பட்டோர் விழாவிற்கு சமூகமளித்திருந்தனர்.
மடத்துக்கரை அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பூசை வழிபாட்டினை தொடர்ந்து மகான் திரு ச.அருணாசலம் அவர்களின் திருவுருவப்படம் மங்கல வாத்தியத்துடன் நடராசா ஞாபகார்த்த மண்டபத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. மங்கல விளக்கினை அருணாசல உபாத்தியாயர் அவர்களின் பேத்தியார் திருமதி.சிவநாயகி சுப்பிரமணியம் அவர்களும,; பண்டிதை.செல்வி யோகலக்சுமி சோமசுந்தரம் அவர்களும், விழாவில் கலந்து கொண்ட பெரியோர்களும் ஏற்றி வைத்தனர். வித்தியாலய மாணவிகள் பன்னிரு திருமுறைகள் ஓதினார்கள்.
பேராசிரியர் வே.தர்மரத்தினம் அவர்கள் தனது ஆசியுரையில் வசதிகள் வாய்ப்புகள் இல்லாத காலத்தில் சவால்களுக்கு மத்தியில் சலியாது துணிச்சலுடன் பணியாற்றிய பெருமைக்குரியவர் பெரியார் ச.அருணாசலம் அவர்கள் எனக் குறிப்பிட்டார். காரைநகரில் வாழ்ந்த பெரியார்களின் பணி சமூகத்திற்கு விடுத்த செய்தியை இன்றைய தலைமுறையினருக்கு அறியப்படுத்துவது அவசியம். இப் பெரியார்களின் தியாகம் மிக்க பணியின் வரலாறு வெளிக்கொணரப்பட்டு இப் பெரியார்கள் கௌரவிக்கப்பட வேண்டும். அருணாசல உபாத்தியாயர் காட்டிய பாதையில் சமகால மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்படல் அவசியம் என எடுத்துரைத்தார்.
தலைவர் திரு ப.விக்னேஸ்வரன் தனது தலைமையுரையில் காரைநகரில் 5 சைவப் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு காரணகர்த்தாவாக விளங்கியதுடன் சைவப்பாரம்பரியம் மிக்க கல்விமான்களை காரைநகருக்கு அழைத்து வந்து ஆலோசனை வழங்கி அவர்களுடன் தாமும் சேர்ந்தியங்கியவர் அருணாசல உபாத்தியாயர் எனக் குறிப்பிட்டார். அனலைதீவு, வடமராட்சி, தென்மராட்சி போன்ற பல ஊர்களிற்கு சென்று முயற்சித்து அங்கும் பாடசாலைகளை ஆரம்பித்தவர். இன்றைய சமூகம் அருணாசல உபாத்தியாயரிடமிருந்து அறிந்து கொள்ள வேண்டிய பல விடயங்களை அறிந்து கொள்ள இந்நூல் வெளியீடு உதவியுள்ளமையால் இந்நூலை வெளியிட பணியாற்றிய அனைவரும் பாராட்டப்பட வேண்டியர்கள் எனக் குறிப்பிட்டார்.
யாழ்ற்றன் கல்லூரி முன்னாள் அதிபர் திரு ந.பரமசிவம், தற்போதயை அதிபர் திரு வே.முருகமூர்த்தி, கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய ஆசிரியர் திரு இ.இராஜகோபால் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். கவிஞர் வே.குமாரசுவாமி வாழ்த்துப்பா வழங்கினார்.
செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் நூல் ஆய்வுரை வழங்கினார். சைவ ஆசிரிய கலாசாலையை காரைநகரில் ஆரம்பித்து கீரிமலை, கோப்பாய், திருநெல்வேலி ஆகிய இடங்களில் இயக்கி சைவ ஆசிரியர்களை தமிழ் சமூகத்துக்கு வழங்கிய பெருமைக்குரியவர். அருணாசல உபாத்தியாயர் எனக் குறிப்பிட்டார். கீர்த்திமிகு பணிகள் காரணமாக உலகத்தின் பார்வையை காரைநகரின் பால் ஈர்த்தவர். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஆங்கில மொழியில் கல்வி கற்று ஆங்கில உடை, நடை, பாவனை போன்றவற்றில் மூழ்கிக் கிடந்த ஆங்கில கல்வி கற்றவர்களின் சிந்தனை மாற்றத்திற்கு திறவு கோலாக விளங்கியவர். இப்பணி ஆங்கிலம் கற்றவர்களை தமிழ்ப் பாரம்பரிய உடைக்கு மாற்றி சமூக மாற்றத்திற்கான சிந்தனை விதைகளை அவர்கள் மனதில் விதைத்தவர். வசதியான வாழ்வு காத்திருந்தும் அதனை விடுத்து சமயத்தினதும் சமூகத்தினதும் மேன்மைக்காக தன் வாழ்வை அர்ப்பணம் செய்த உன்னத மனிதர் அருணாசலம் உபாத்தியாயர். அருணாசல உபாத்தியாயர் காலத்தில் வாழ்ந்த பெரியோர்களும் அவர்களின் பின் வந்த சமூகத்தின் மேல் கரிசனை உள்ள அனைவரும் அருணாசல உபாத்தியாயரின் பணிகளை பாராட்டியுள்ளனர். அருணாசல உபாத்தியாயரது வரலாற்றை வெளிக்கொணர்வதில் அரும் பாடுபட்ட சைவசித்தாந்த மன்ற தலைவர் திரு தி.விசுவலிங்கம் அவர்கள் காரைநகர் மக்களால் மதித்து பாராட்டப்பட வேண்டியவர் என குறிப்பிட்டார்.
வெளியீட்டுரையை சைவசித்தாந்த மன்ற தலைவர் திரு தி.விசுவலிங்கம் ஆற்றினார். இந்நூலை மீள்பிரசுரம் செய்வதில் என்னை ஈடுபடவைத்து ஊக்குவித்த பெருமை மூதறிஞர் கலாநிதி ச.வைத்தீஸ்வரக்குருக்களுக்கே உரியது. இந்நூலின் நகல் பிரதியை வழங்கி உதவிய திரு எஸ்.கே.சதாசிவம். இதனை ஒப்பு நோக்கி சரிபார்த்த பேராசிரியர் சிவபாதம் பரமசிவம், ஆகியோருடன் இப்பணியில் என்னுடன் உழைத்த திருமதி கிருஸ்ணவேணி சோதிநாதனுக்கும் எனது பாரியார் வடிவழகாம்பாள் அவர்களுக்கும் ஏனையோர்களுக்கும் நான் நன்றி கூறுகின்றேன். அருணாசல உபாத்தியாயரை அறிந்தவர்கள் நேரில் பார்த்தவர்கள் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் திரு அருணாசலம் அவர்களின் உருவப்படம் வரையப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்நூல் கனடா, சுவிற்சலாந்து, பிரித்தானியா ஆகிய நாடுகளில் வெளியிடப்பட்டுள்ளது. இன்று அவர் வாழ்ந்த மண்ணில் இந்நூல் வெளியிடுவதானது பெருமைக்குரிய விடயமாகும். தை மாதம் கொழும்புத் தமிழ்ச்சங்கத்திலும் வெளியிடப்பட உள்ளது என தெரிவித்தார்.
இந்நூல் வெளியீட்டின் சிறப்புரையினை கலாநிதி ஆ.தியாகராசா ம.மகா வித்தியாலய முன்னாள் அதிபரும் மணிவாசகர் சபை தலைவருமாகிய பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை, யாழ்ற்றன் கல்லூரி ஆசிரியர் திரு அ.மனோகரன் ஆகியோர் நிகழ்த்தினர்.
கருத்துரையின் போது சித்தாந்தரத்தினம் திரு.க.பத்மானந்தன் அவர்கள் அருணாசல உபாத்தியாயர் சைவசமய மக்கள் சைவ சமய சூழலில் தம் கலை,கலாசாரங்களை கைவிடாது தம் கல்வியை மேற்கொள்ள வேண்டுமென்று வேணவா கொண்டிருந்த சைவமக்களின் எண்ணத்தை ஈடேற்றிய பெருமகன் எனக் குறிப்பிட்டார். அருணாசல உபாத்தியாயர் காலத்தின் தேவையறிந்து மக்களின் பணிகளை நிறைவேற்றிய கருமவீரன் என்பதால் தான் அவர் மறைந்தும் 100 ஆண்டுகள் அண்மிக்கின்ற இவ்வேளையிலும் நினைவுகொள்ளப்படுகின்றார். அருணாசலத்தார் பணி சைவத்தையும் தமிழையும் வாழவைத்தவாறு கல்விப்பயிர் வளர்த்தது. மதத்தைப்பற்றியும், சமூகத்தைப்பற்றியும் சிந்திக்கின்ற சமூக செயற்பாட்டாளர்கள் அருணாசலம் வழியில் செயற்பட்டால் இன்றைய சமூகமும் வாழ்ந்து இன்றைய சமூக செயற்பாட்டாளர்களும் நாளைய உலகில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். ஆலயங்கள் சமூக நிறுவனங்களாக மாறி அப்பிரதேச மக்களுக்கு பணியாற்றுவதன் மூலம்; மதமாற்றம் ஏற்படுவதைத் தவிர்ப்பதுடன் சமூகத்தில் காணப்படுகின்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் எனக்குறிப்பிட்டார்.
இந்நூலை மட்டுமல்ல “காரைநகர் மான்மியம்” என்ற நூலையும் “முதுசகங்களைத்தேடி” என்ற திட்டத்தின் கீழ் மீள்பதிப்பு செய்வதற்கு எல்லாவிதமான உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்கி உதவிய திரு.எஸ்.கே.சதாசிவம் அவர்களுக்கு பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கம் வழங்கிய பாரட்டு விருதினை சிவநெறிச்செல்வர் திரு.தி.விசுவலிங்கம் அவர்கள் வழங்கினா
ஓய்வுநிலை உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு எஸ்.கே.சதாசிவம் இந்நூல் வெளியீடு தொடர்பான அனைத்து பணிகளிலும் பங்குபற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். மங்களம், வாழ்த்து இசைக்கப்பட்டு நிகழ்வு நிறைவு இனிதே பெற்றது.
விழாவில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.
No Responses to “மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்களுக்கு காரைநகரில் கல்வியாளர்கள் எடுத்த பெருவிழா”