திரு.வே.சபாலிங்கம் – செயலாளர் (2004-2005)
காரைநகர் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் (Old Students Association) கடந்த பல வருடங்களாக மிகச் சிறப்பாக இயங்கி வருகின்றது. இச் சங்கத்தின் முதலாவது தலைவராக விளங்கியவர் சட்டத்தரணி A.ஆறுமுகம் J.P.U.M அவர்களாவர். இவர் பழைய மாணவர் சங்கம் கல்லூரி வளர்ச்சிக்குப் பணியாற்றக் கால்கோளாக விளங்கியவர். இவரைத் தொடர்ந்து அறிஞர்கள் சான்றோர்கள் பலரும் இச்சங்கத்தை அலங்கரித்து வந்தனர்.
கல்லூரியின் அதிபராக ஆ.தியாகராசா அவர்கள் இருந்த காலத்தில் பழைய மாணவர் சங்கத்தின் பணிகளை வலியுறுத்தி வந்ததோடு மலேசியா போன்ற நாடுகளில் வாழ்கின்ற இக்கல்லூரியின் பழைய மாணவர்களின் உதவியுடனும் சயம்பு மண்டபத்தைக் கட்டி முடித்தமை போற்றுதற்குரியதாகும்.
நூற்றாண்டு விழாவையொட்டி திரு.மு.திருநீலகண்டசிவம் அதிபராக இருந்த காலத்தில் புனரமைப்பு செய்யப்பட்ட பழைய மாணவர் சங்கத்தின் தலைவராக திரு.ஐ.தி.சம்பந்தன் அவர்களும் செயலாளராக திரு.மு.சு.வேலாயுதபிள்ளை அவர்களும் பொருளாளராக திரு.வே.முருகமூர்த்தி அவர்களும் இருந்து செயற்பட்டு வந்தனர். இவர்களது காலத்தில் இச்சங்கம் பின்வரும் திட்டங்களைச் செயற்படுத்தத் தீர்மானித்தது.
1. நூற்றாண்டு நினைவுக் கட்டிடம் நிறுவுதல்
2. நூற்றாண்டு நினைவுமலர் வெளியிடுதல்
3. நூற்றாண்டு கலை கலாச்சார விழாக்கள் நடத்துதல்
நூற்றாண்டு விழாவையொட்டி கலை கலாசார விழாக்கள் நடத்தப்பட்ட போதிலும் நினைவுக் கட்டிடம் நிறுவும் பணியும் பதினேழு ஆண்டுகளின் பின்னராவது கைகூடுவது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
காரைநகர் இடப்பெயர்வின்போது திருமதி.தேவநாயகி பாலசிங்கம் அதிபராக இருந்தபோது திரு.அ.செல்வரத்தினம் செயலாளராகவும் செல்வி.சிவஞானம் நற்குணம் பொருளாளராகவும் இருந்து இயங்கி வந்தனர். செயலாளர் திரு.செல்வரத்தினம் கனடா நாட்டிற்கு சென்றமையினால் திரு.நா.தர்மையா செயலாளராகவும், அ.ஜெகதீஸ்வரன் பொருளாளராகவும் தெரிவுசெய்யப்பட்டனர். திரு.தர்மையா அவர்களது காலத்தில் எமது சங்கம் புத்துயிர் பெறத் தொடங்கியது. புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் எமது கல்லூரியின் பழைய மாணவர்களுடன் கடிதத் தொடர்புகளை ஏற்படுத்தி சங்கத்திற்கு ஆரம்ப வைப்பு நிதி கிடைக்கக் காரணமாக இருந்தவர் திரு.தர்மையா அவர்களே. இவர் அடிக்கடி பாடசாலைக்கு வருகை தந்து ஆசிரியர் ஓய்வறையில் அமர்ந்து சங்க நிர்வாக நடவடிக்கைகளைக் கவனித்து வந்தார்.
10.02.2002 அன்று நடைபெற்ற எமது சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் திரு.மு.சு.வேலாயுதபிள்ளை தலைவராகவும், திரு.ந.கணேசமூர்த்தி செயலாளராகவும் செல்வி.சரஸ்வதி நாகலிங்கம் பொருளாளராகவும் தெரிவுசெய்யப்பட்டு இயங்கி வந்தனர். தனது சொந்த விருப்பின்பேரில் செல்வி.ச.நாகலிங்கம் பதவி விலக திரு.ந.இராசசிவம் பொருளாளராக நியமிக்கப்பட்டார். இவர்களது காலத்தில் நடைபெற்ற பாரிய அபிவிருத்திப் பணிகள் பற்றி 2002, 2003, 2004 ஆண்டறிக்கை வெளியீடு விரிவாக விளக்குகிறது.
2004-07-02ஆம் திகதி நடைபெற்ற வருடாந்தப் பொதுக் கூட்டத்தில் மு.சு.வேலாயுதபிள்ளை தலைவராகவும் வே.சபாலிங்கம் செயலாளராகவும் ஜெ.தில்லையம்பலவாணர் பொருளாளராகவும் தெரிவசெய்யப்பட்டனர். எமது சங்கம் 38 ஆயுள்கால அங்கத்தவர்களையும் 118 சாதாரண அங்கத்தவர்களையும் கொண்டு விளங்குகின்றது.
சங்க உறுப்பினரும் கொழும்புக் கிளையின் தலைவருமான S.R.S.தேவதாசன், செயலாளர் நா.தர்மையா உப-தலைவர்களான சி.கந்தையா(காட்டர்), க.கந்தையாபிள்ளை, கே.வி.குலரத்தினம் ஆகியோர் சங்க வளர்ச்சிக்கு அரும்பணியாற்றி அண்மைக் காலத்தில் அமரத்துவம் அடைந்தவர்களாவர். இவர்களின் மறைவு எமது சங்கத்திற்கு பேரிழப்பாகும். அன்னார்களின் குடும்பத்தவர்களிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
கடந்தகால இராணுவ நடவடிக்கைகளினால் எமது கல்லூரியின் ஆய்வுகூடங்கள், வகுப்பறைகள், நூல்நிலையம், மதிற்சுவர்கள் என்பன முழுமையாகச் சேதமடைந்திருந்தன. எமது சங்கம் கல்லூரியின் சகல வளங்களையும் உள்ளடக்கிய பாரிய திட்டம் ஒன்றை வகுத்து செற்படத் தொடங்கினோம். இத்திட்டத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று நிறைவு செய்யப்படாத கட்டடத் தொகிதிகளை எதிர் காலத்தில் ஒழுங்கான முறையில் அமைக்க உதவியாக இருப்பதாகும். இத்திட்டத்திற்கிணங்க ஏறக்குறைய இரண்டு கோடி ரூபா(20 million) செலவில் மாடிக் கட்டடத் தொகுதிகள் அமைக்கப்பட்டு வேலைகள் நிறைவடைகின்றன. இன்னும் கட்டிடம் ஒன்று மேற்குப்புறமாக அமைக்கவேண்டியுள்ளது. இக்கட்டிடத் தொகுதிகளை இணைக்கும் வகையில் வடகிழக்கு மூலையில் ஒன்றும் தென்மேற்கு மூலையில் ஒன்றுமாக 25X20 மாடிக் கட்டடங்கள் நிறுவவேண்டியுள்ளது. யாராவது தமது அன்புக்குரியவர்கள் நினைவாக இக்கட்டடங்களை நிறுவித்தரமுயன்றால் அது எமது கல்லூரியின் அபிவிருத்திக்கு பேருதவியாக அமையும்.
நிறைவேற்றப்பட்ட வேலைத் திட்டங்களில் 60X25 அடி கட்டடத்தை இலண்டன் காரை நலன்புரிச் சங்கம், கனடா, சுவிற்சலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் வாழும் பழைய மாணவர்களின் உதவியுடனும் கட்டி முடித்துள்ளோம். கட்டிடத்தொகிதியில் ஏனைய கட்டிடங்கள் G.T.Z, உலகவங்கிஇ நிக்கொட் போன்ற நிறுவனங்களின் உதவியுடன் கட்டப்பட்டுள்ளன. இந்நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு செயலாற்ற ஊக்கமும் ஆக்கமும் தந்த வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.ப.விக்கினேஸ்வரன், பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் திரு.வே.சாம்பசிவம், முன்னாள் இந்து கலாசார அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.தியாகராசா மகேஸ்வரன் ஆகியோர்களிற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
எமது கல்லூரியின் நீர் விநியோகத் தேவையை நிறைவுசெய்யும் வகையில் எமது கல்லூரியின் பழைய மாணவரும் பிரான்சில் வசிப்பவருமான களபூமியைச் சேர்ந்த திரு.கணேசு மயில்வாகனம் அவர்கள் தனது மாமனார் அமரர் கணபதிப்பிள்ளை சபாரத்தினம் ஞாபகார்த்தமாக சுமார் 3இலட்சம் ரூபா செலவில் தண்ணீர்த் தாங்கியை நிறுவி நீர் விநியோகத்திற்காக குழாய்களையும் அமைத்துத் தந்துள்ளார்.அவர்களிற்கும் எமது சங்கத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
கல்லூரியின் கல்வி வளர்ச்சிக்காக உயர்தர வகுப்புக்களில் பற்றாக்குறையாகவுள்ள ஆசிரியர்களை நியமித்து மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கு எமது சங்கம் அதிக அளவில் நிதியுதவியை வழங்கிவருகிறது.கணனிக் கல்வியை ஊக்குவிக்கும் நோக்குடன் கணனிக்கூடம் அமைக்கப்பட்டு அரசாங்க உதவியுடனும் கனடா-காரை கலாச்சார மன்றத்தின் உதவியுடனும் பெறப்பட்ட கணனிகள் மூலம் மாணவர்களிற்கு கணனிப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. கணனி ஆசிரியர்களிற்கான வேதனத்தை கனடா-காரை கலாச்சார மன்றத்தினர் வழங்கி வருகின்றனர்.
விளையாட்டுத்துறையின் முன்னேற்றத்திற்காக கல்லூரி விளையாட்டுப் போட்டிக்கும் மாவட்ட மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவர்களிற்கான போக்குவரத்துச் செலவிற்கும் பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளையினர் நிதி உதவியை எமது சங்கத்தின் ஊடாக வழங்கி வருகின்றனர். கல்விஇ விளையாட்டு என்பவற்றிற்கு மட்டுமன்றி கலை கலாச்சார முன்னேற்றத்திற்காகவும் பாடசாலையில் நடைபெறும் சில விழாக்கள் பல்வேறு மட்டங்களில் நடைபெறும் கலை கலாச்சார போட்டிகள் என்பவற்றில் பங்குபற்றும் பிள்ளைகளிற்கு ஊக்கமும் உதவியும் வழங்கி வருகின்றோம். இப்போட்டிகளில் வருடா வருடம் மாணவர்கள் பலர் பரிசில்கள் பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கதாகும். மாணவர்களின் மதிய உணவுத் திட்டத்திலும் நாம் பங்களிப்புச் செய்து வருகின்றோம்.
இக்கல்லூரியின் வளர்ச்சி கருதி பழைய மாணவர் சங்கத்திற்கு உறுதுணையாக நின்ற உள்ளுர் வெளியூர் அன்பர்கள் பழைய மாணவர்கள் அனைவருக்கும் புலம்பெயர்ந்த நாடுகளில் நிதி சேகரித்து தந்த எமது கல்லூரியின் பழைய மாணவர்களான கலாநிதி ச.சபாரத்தினம்(இலண்டன்), ஆ.செந்தில்நாதன்(சுவிற்சலாந்து), இ.சுந்தரதாசன்(இலண்டன்), இராசேந்திரம்(கனடா), தி.ஜெகநாதன்(பிரான்ஸ்), க.ஆனந்தமனோகரன்(ஜேர்மனி), க.சரவணப்பெருமாள்(சுவிற்சலாந்து)இ ஆகியோருக்கும் கட்டிடங்கள் கட்டுவதற்கு உறுதுணையாக நின்ற ஆசிரியர் திரு.எஸ்.அருள்செல்வம் அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் இக்கல்லூரியின் வளர்ச்சிக்கு தங்கள் அனைவரினதும் ஆதரவினை வேண்டி நிற்கின்றோம்.
நன்றி: சயம்பு மலர் – 2005
No Responses to “பழைய மாணவர்களின் தாய்ச் சங்கத்தின் செயலாளர் அறிக்கை -2005”