யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ்த்துறையின் ஏற்பாட்டில் சென்ற ஆகஸ்டு மாதம் 3ம் திகதி பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்றிருந்த 3வது அனைத்துலக தமிழியல் ஆய்வு மாநாட்டில் தமிழ் இலக்கியத்திற்கும் மொழிக்கும் தொண்டாற்றிய புலமையாளர்கள் நால்வர் மதிப்பளிக்கப்பட்டிருந்தனர்.
மதிப்பளிக்கப்பட்டிருந்த புலமையாளர்கள் நால்வருள் காரை.இந்துவின் முன்னாள் ஆசிரியையான ‘கலாபூசணம்’; பண்டிதை செல்வி யோகலட்சுமி சோமசுந்தரம் (யோகா ரீச்சர்) அவர்களும் ஒருவராக உள்ளார் என்பது காரை.மண்ணிற்கு மட்டுமல்லாது காரை.இந்துவிற்கும் பெருமை சேர்ப்பதாகும்.
யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.சிறீசற்குணராசா அவர்கள் நினைவுச் சின்னத்தினையும் புகழ்பூத்த தமிழ் சமயப் பணியாளர் கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்கள் சான்றிதழையும் வழங்கி மதிப்பளித்திருந்தனர்.
ஆயிலி, காரைநகரைச் சேர்ந்த பண்டிதை செல்வி யோகலட்சுமி அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் இளமாணிப் பட்டமும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் டிப்ளோமா பட்டமும் பெற்றுக்கொண்டவர். ஆரிய திராவிட பாசாவிருத்திச் சங்கத்தில் கற்று பண்டிதையாக தேறியவர். இவரது கல்விப் பணி பரந்துபட்டதாகும். இவர் ஆசிரியர், ஆசிரிய ஆலோசகர், வளவாளர், பகுதிநேர விரிவுரையாளர் என பல பதவிகளை வகித்து கல்விச் சேவையாற்றியவர். சமய, இலக்கியச் சொற்பொழிவுகள் செய்து வருவதுடன் கவியரங்கம், பட்டிமன்றம், வழக்காடு மன்றம் என்பவற்றில் பங்குகொண்டு சிறந்த பேச்சாளர் என்ற பெயர்பெற்று விளங்குபவர். வடமாகாண சபையினால் வழங்கப்பட்ட முதலமைச்சர் விருது, இலங்கை அரசினால் வழங்கப்பட்ட ‘கலாபூசணம்’ என்ற விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்ற பெருமைக்குரியவர்.
இத்தகைய பெருமைக்குரிய பண்டிதை யோகலட்சுமி அவர்கள் பல்கலைக்கழக தமிழறிஞர்களும், கல்வியாளர்களும், புகழ்பூத்த தமிழ், சமய உணர்வாளர்களும் கலந்துகொண்ட உயரிய சபையிலே யாழ்.பல்கலைக் கழகத்தினால் மதிப்பளிக்கப்பட்டமை குறித்து பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பேருவகையும் பெருமிதமும் கொள்வதுடன் அவரைப் பாராட்டி வாழ்த்துகிறது.
பண்டிதை யோகலட்சுமி அவர்கள் மதிப்பளிக்கப்பட்டிருந்த சமயம் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
No Responses to “யாழ்.பல்கலைக்கழகத்தினால் மதிப்பளிக்கப்பட்டிருந்த காரை.இந்துவின் முன்னாள் ஆசிரியை ‘கலாபூசணம்’ பண்டிதை யோகலட்சுமி சோமசுந்தரம் அவர்களை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துகிறது.”