கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய(காரைநகர் இந்துக்கல்லூரி) பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் போசகர் சிவநெறிச்செல்வர் திரு.தி.விசுவலிங்கம், பொருளாளர் திரு.மா.கனகசபாபதி ஆகியோர் பாடசாலையின் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் கடந்த செவ்வாய்கிழமை(29.12.2015) அன்று நடைபெற்ற பழைய மாணவர்களின் தாய்ச்சங்கத்தின் கூட்டத்திற்கு அதன் நிர்வாகிகளின் அழைப்பின் பேரில் சமூகமளித்திருந்தனர்.
கனடாக் கிளையின் நிர்வாக சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமையவும் அத்தீர்மானத்தினை தாய்ச்சங்க நிர்வாகத்திடம் தெரிவிக்குமாறு கனடாக் கிளை நிர்வாகம் வேண்டிக்கொண்டமைக்கு அமையவும் போசகர் திரு.தி.விசுவலிங்கம் அவர்கள் மேற்படி கூட்டத்தில் கருத்துத் தெரிவித்திருந்தார்.
அதாவது தாய்ச்சங்க நிர்வாகம் எந்தவொரு விண்ணப்பத்தினையும் எழுத்து மூலமாகவே கனடாக் கிளை நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுமெனவும் அத்தோடு கனடாக் கிளை தாய்ச்சங்கத்திற்கு அனுப்பி வைக்கும் நிதிக்கான கணக்கு விபரங்களை உடனுக்குடன் அனுப்பி வைத்து உதவ வேண்டுமெனவும் அப்போதுதான் கனடாக் கிளையின் நிர்வாக சபை அவற்றினை ஆராய்ந்து முடிவெடுக்க முடியும் எனவும் தெரிவித்திருந்தார்.
கனடாக் கிளையின் பொருளாளர் திரு.மா.கனகசபாபதி அவர்களும் போசகர் குறிப்பிட்ட மேற்படி கருத்தினை வழிமொழிந்திருந்தார்.
மேலும் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் பாடசாலையின் தற்போதுள்ள “கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம்” என்ற பெயரை “காரைநகர் இந்துக்கல்லூரி” என்று மாற்றுவதற்கான அனுமதிக் கடிதம் கல்வித்திணைக்களத்திடமிருந்து தமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவித்து கனடாக் கிளையின் போசகர் சிவநெறிச்செல்வர் திரு.தி.விசுவலிங்கம் அவர்களைக் கருத்துத் தெரிவிக்குமாறு கூறினார்.
திரு.தி.விசுவலிங்கம் அவர்கள் தனது கருத்துரையில் பாடசாலையின் பெயரை மாற்றவேண்டிய அவசியம் இல்லை எனவும் அப்படி மாற்றுவதாயின் புதிய பெயர் எதுவும் தேட வேண்டிய அவசியமில்லை எனவும், இப்பாடசாலையைத் தோற்றுவித்தவர்களுடைய எண்ணக்கருவைச் சிதைக்காதவாறு மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்களும், சயம்பு உபாத்தியாயரும் இணைந்து இட்ட நாமமாகிய ‘திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் வித்தியாசாலை’ என்ற பெயரையல்லவா மீண்டும் மாற்ற வேண்டும் எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும் திரு.தி.விசுவலிங்கம் அவர்கள் தமது கருத்தில் பாடசாலையின் பெயரை மாற்றுவதில் கவனம் செலுத்துபவர்கள், பாடசாலையின் தரத்தை உயர்த்துவதிலேயே கவனம் செலுத்த வேண்டுமெனவும் சிறிய பௌதீக வளம் கொண்ட பாடசாலைகளை எடுத்துக்காட்டாகக் கூறி அவை பின்னர் அதிசிறந்த முதல்தர பாடசாலைகளாக எவ்வாறு தரமுயர்ந்தன என்றும் விளக்கிக் கூறியிருந்தார்.
பாடசாலையின் பெயர் மாற்ற விவகாரத்தில் தாம் தலையிட விரும்பவில்லை என்பது தனது தனிப்பட்ட கருத்தாகும் என இக்கூட்டத்தில் பொருளாளர் திரு.மா. கனகசபாபதி அவர்கள் தெரிவித்தார்.
No Responses to “பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் போசகர், பொருளாளர் ஆகியோர் தாய்ச் சங்கத்தின் கூட்டத்தில் கலந்துகொண்டனர்”