எமது கல்லூரியின் தோற்றத்திற்கு காரணகர்த்தாவாக விளங்கியவரும், கல்வியாளர்களுக்கும், சமூக சேவையாளர்களுக்கும் மிக முன்னோடியுமான காரைநகர் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் (1864-1920) அவர்களின் சரிதம் அடங்கிய “சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம்” என்ற நூல் அறிமுகவிழா 17.01.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் கலாபூஷணம் சைவப்புலவர் சு.செல்லத்துரை அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது. அன்றைய தினம் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்கள் அமரத்துவம் அடைந்த 96ஆவது நினைவு தினமும் ஆகும்.
இவ்விழாவில் வாழ்த்துரையை இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் உயர்திரு.அ.உமாமகேஸ்வரன் அவர்களும் அறிமுகவுரையை சிவநெறிச் செல்வர் தி.விசுவலிங்கம் அவர்களும் ஆய்வுரைகளை அருள் மொழி அரசி திருமதி.வசந்தா வைத்தியநாதன் அவர்களும் காரைநகர் கம்பன் கழக அமைப்பாளர் தமிழருவி த.சிவகுமாரன் அவர்களும் கோப்பாய் ஆசிரிய கலாசாலை உபஅதிபர் திரு.ச.லலீசன் அவர்களும் சிறப்புரையை சித்தாந்தரத்தினம் க.பத்மானந்தம் அவர்களும் நிகழ்த்த உள்ளனர்.
நாவலருக்கு அடுத்து வைத்துப் போற்றப்பட வேண்டியவர் என நாவலர் பெருமானின் தமையனார் மகன் திரு.த. கயிலாயபிள்ளை அவர்களால் பெருமையுடன் பேசப்பட்டவர் எமது காரைநகர் தந்த பெருமகன் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்கள் ஆவார்.
இவர் காரைநகரில் சுப்பிரமணிய வித்தியாசாலை, திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் ஆங்கிலப் பாடசாலை(பின்னாளில் காரைநகர் இந்துக்கல்லூரி, கலாநிதி ஆ.தியாகராசா ம.மகா வித்தியாலயம்) வியாவில் சைவ வித்தியாசாலை போன்ற பாடசாலைகளின் தோற்றத்திற்கும், யாழ்ப்பாணத்தில் உள்ள பல ஊர்களில் சைவப் பாடசாலைகளின் தோற்றத்திற்கும், கோப்பாயில் முதல் சைவ ஆசிரியர் கலாசாலையின் தோற்றத்திற்கும் காரணமானவர்.
இவரின் தூண்டுதலின் பேரிலேயே “இந்துபோட்” இராசரத்தினம் அவர்கள் சைவ வித்தியா விருத்திச் சங்கத்தை தோற்றுவித்து, நாவலரினதும் அருணாசலம் உபாத்தியாயரினதும் சைவத்தமிழ்க் கல்விப் பணிகளைத் தொடர்ந்தார்.
இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள் தவத்திரு ஆறுமுகநாவலர் (1822-1879), திரு.ச.அருணாசலம்(1864-1920) திரு.சு.இராசரத்தினம் (1884-1970) ஆகிய மூவரையும் யாழ்ப்பாணத்தின் மூன்று சைவசமயக் கண்கள் எனப் பெருமையுடன் போற்றிக் கூறியுள்ளார்.
இத்தகைய காரைநகர் பெரியாரின் வரலாற்றினை அவரது மாணவராகிய திரு.சி.கணபதிப்பிள்ளை ஐயா அவர்கள் எழுதினார்கள். இந்நூல் காரைநகர் சைவமகா சபையின் வெளியீடாக 1971 இல் வெளியிடப் பெற்றது. இந்நூலின் மறுபதிப்பு காரைநகரைச் சேர்ந்த கனடா சைவசித்தாந்த மன்றத்தின் தலைவர் சிவநெறிச் செல்வர்.சிவத்திரு.தி.விசுவலிங்கம் அவர்களின் பெருமுயற்சியில், கனடாவில் 25.07.2015 இலும், சுவிற்சலாந்தில் 13.09.2015 இலும், இலண்டனில் 22.11.2015 இலும், காரைநகரில் இந்துக்கல்லூரி நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் 20.12.2015 இலும் சிறப்பாக வெளியிடப் பெற்றது.
கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்களின் நினைவு தினத்தில் நடைபெற உள்ள இந்த நூல் அறிமுக விழாவில் சைவத்தமிழ் அன்பர்கள் கலந்துகொண்டு ஒவ்வொருவரும் சிறப்புப் பிரதியைப் பெற்று ஆதரவு நல்குமாறு பணிவன்புடன் வேண்டுகின்றனர் கொழும்பு நூல் வெளியீட்டுக் குழுவினர்.
விழாவின் நிகழ்ச்சி நிரல் அடங்கிய முழுமையான அறிவித்தலைக் கீழே காணலாம்.
No Responses to “எமது கல்லூரியின் மூலகர்த்தா மகான் சிவத்திரு. ச.அருணாசலம் அவர்களின் 96ஆவது நினைவு தினமும் நூல் அறிமுகவிழாவும்”