காரைநகர் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் தனது உன்னதமான இலட்சியப் பயணத்தில் 10வது ஆண்டினை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கின்ற இவ்வேளையில் அதனை அன்னையின் புதல்வர்களுடன் இணைந்து கொண்டாடி மகிழவிருப்பதுடன் அவர்களின் பங்களிப்பினைப் பெற்று கல்லூரியின் முக்கியமான திட்டமொன்றிற்கு உதவத் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் 1ஆம் திகதி கனடா கந்தசுவாமி கோயில் மண்டபத்தில் நடைபெறவுள்ள வெற்றி விழாவில் நீங்கள் ஒவ்வொருவரும் கலந்துகொள்வதன் மூலம் உங்கள் வாழ்வை செழுமைப்படுத்திய காரை.இந்து அன்னையை பெருமைப்படுத்தவதுடன் மட்டுமல்லாது செழுமைப்படுத்தகின்ற உயரிய நோக்கத்திற்கும் பங்களிக்கின்ற மனநிறைவடைவீர்கள்.
இவ்விழாவின் ஊடாகத் திரட்டப்படுகின்ற நிதி அனைத்தும் கல்லூரியின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும் நோக்குடன் எமது சங்கத்தினால் 2020 ஆம் ஆண்டு தொடக்கி வைக்கப்பட்ட நிரந்தர வைப்புத் திட்டத்திலுள்ள இருபது இலட்சம் ரூபாவினை மேலும் அதிகரிக்க உதவிசெய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே மற்றுமொரு வரலாற்றுப் பணியினை உங்களது பேராதரவுடன் நிறைவு செய்யவும் இவ்விழாவினை வெற்றிகரமானதாக அமைத்திடவும் உழைத்து வருகின்றோம்.
இன்றுவரை இவ்விழாவிற்கு அன்னையின் புதல்வர்களிடமிருந்து கிடைத்து வருகின்ற ஆதரவு எமக்கு ஊக்கமும் மகிழ்ச்சியுமளிப்பதாகவுள்ளது. கனடாவில் மட்டுமன்றி புலம்பெயர் தேசங்களிலுள்ள அன்னையின் பல புதல்வர்களும் எமது சங்கத்தின் பணிகளினால் ஈர்க்கப்பட்டவர்களாக 10வது ஆண்டு விழாவினை நோக்கி தமது நிதிப் பங்களிப்பினை வழங்கி வருவது எமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியளிப்பதாகவுள்ளது என்பதுடன் இவ்விழாவின் இலக்கினை வெற்றிகரமாக அடையமுடியும் என்பதை பறை சாற்றுவதாகவும் உள்ளது.
எனவே விழாவிற்கான நுழைவுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொண்டும், இயன்ற நன்கொடைகளை வழங்கியும் உங்கள் மேலான ஆதரவையும் ஒத்துழைப்பினையும் தருவீர்கள் என்ற உறுதியான நம்பிக்கையுடன் உழைத்து வருகின்ற பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையானது அற்புதமான இசை நிகழ்ச்சியையும் நாடகம், நடனம் ஆகிய கலை நிகழ்வுகளையும் கண்டு கழிக்க திரண்டு வந்து கல்லூரி அன்னையை குதூகலப்படுத்துமாறு உரிமையோடு அழைக்கின்றது..
No Responses to “காரை.இந்து அன்னையை பெருமைப்படுத்திடவும் செழுமைப்படுத்திடவும் 10வது ஆண்டு விழாவிற்கு திரண்டு வாரீர் என அன்னையின் புதல்வர்களை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை உரிமையோடு அழைக்கிறது.”