காரை.இந்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் 10வது ஆண்டு விழா எதிர்வரும் சனிக்கிழமை கனடா கந்தசுவாமி கோயில் மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் திட்டமிட்டமுறையில் மிகவும் நேர்த்தியாக ஓழுங்கமைக்கப்பட்டு பூர்த்தியடைந்துள்ளதாக பழைய மாணவர் சங்கத்தின் தலைவரும் விழா அமைப்புக் குழுவின் தலைவருமாகிய திரு.நாகலிங்கம் குஞ்சிதபாதம் அறியத்தந்துள்ளார்.
இதுவரை இவ்விழாவிற்கு அனுசரணையாளர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் ஆகியோரிடமிருந்து கிடைத்து வருகின்ற பேராதரவினைப் பார்க்கின்றபோது இவ்விழா பெரு வெற்றியாக அமைந்து கல்லூரியின் நிரந்தர வைப்புத் திட்டத்திற்கு உதவ இவ்விழாவின் ஊடாக சேகரிக்க எண்ணியுள்ள எமது இலக்கினை இலகுவாக அடைந்து விடமுடியும் என்ற உறுதியான நம்பிக்கையினை ஏற்படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
விழாவின் முதன்மை நிகழ்வாக ரொறன்ரோவின் முன்னணி இசைக்குழுவான நட்சத்திராவின் இன்னிசை வசந்தம் இசை நிகழ்வும் நடனம், நகைச்சுவை நாடகம் ஆகிய கலை நிகழ்வுகளும் நடைபெறவுள்ள அதேவேளை பழைய மாணவர் சங்கத்திற்கு தொடர்ச்சியாக ஆதரவளித்து வரும் அனுசரணையாளர்கள், சங்கத்தினது தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் உழைத்தவர்கள, பாடசாலையில் உதவித் திட்டங்களை செயற்படுத்த உதவியவர்கள் என பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினர்கள் மதிப்பளிக்கப்படவுள்ளார்கள் என்பதுடன் சிறப்பு மலர் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்படவுள்ளதாக திரு.குஞ்சிதபாதம் தெரிவித்தார்.
ரசிகர்களின் நலனும் வசதியும் கருதி தேநீரும், சிற்றுண்டிகளும் இலவசமாகப் பரிமாறப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கனடாவாழ் பழைய மாணவர்கள் அனைவரும் திரண்டு வந்து இவ்விழா நிகழ்வுகளை கண்டு கழிப்பதுடன் உங்களை வளர்த்து விட்ட இந்து அன்னையை வளப்படுத்த ஆதரவு நல்குமாறு பழைய மாணவர் சங்கத்தின் சார்பில் திரு.குஞ்சிதபாதம் உரிமையோடு வேண்டிக்கொண்டுள்ளார்.
No Responses to “காரை.இந்து அன்னையின் அரவணைப்பில் வளர்ந்த புதல்வர்கள் ஒன்றுகூடி மகிழவுள்ள விழாவிற்கு திரளாக வருகை தந்து ஆதரவளிக்குமாறு பழைய மாணவர் சங்கம் உரிமையுடன் வேண்டிக்கொள்கிறது.”