சென்ற ஓக்டோபர் 01ஆம் திகதி கனடா கந்தசுவாமி கோயில் மண்டபத்தில் நடைபெற்ற காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் 10வது ஆண்டு விழா மண்டபம் நிறைந்த மக்களுடன் உன்னதம் பெற்று விளங்கியதுடன் இந்நிகழ்வின் ஊடாக காரை.இந்துவின் நிரந்தர வைப்புத் திட்டத்திற்கு உதவ குறைந்தது 25இலட்சம் ரூபாவினை சேகரிப்பது என்ற இலக்கினையும் வெற்றிகரமாக அடைந்துள்ளது.;
விழாவின் பிரதம விருந்தினர் பேராசிரியர் ஆறுமுகம் நல்லநாதன், நேச அமைப்பான கனடா-காரை கலாசார மன்றத்தின் தலைவர் திரு.சிவசம்பு சிவநாதன், கல்லூரியின் மூத்த பழைய மாணவர்கள், அனுசரணையாளர்கள் ஆகியோர் மங்கள விளக்கேற்றி வைத்ததைத் தொடர்ந்து அமரத்துவம் அடைந்த பழைய மாணவர் சங்கத்தின் தலைவரான முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை, மாணிக்கம் கனகசபாபதி மற்றும் அமரத்துவம் அடைந்த அனைத்து உறவுகளின் ஆத்ம சாந்திக்காக இரு நிமிட மௌனப் பிரார்த்தனை செய்யப்பட்டது.
கடவுள் வணக்கம், கனேடிய தேசிய கீதம், தமிழ்மொழி வாழ்த்து என்பவற்றை பொன்.சுந்தரலிங்கத்தின் அரங்கேற்றம் கண்ட மாணவிகளான செல்வி டக்சனா ஞானகாந்தன், செல்வி கோசலா ஞானகாந்தன் ஆகியோர் அழகுற இசைத்தனர்.
கல்லூரியின் பழைய மாணவனான அமரர் சங்கீதபூசணம் புண்ணியமூர்த்தி அவர்களின் கம்பீரமான குரலில் இசைக்கப்பட்டு பதிவுசெய்யப்பட்ட தாய் மலரடிபணிவோம் நம் கல்லூரி……. என்ற கல்லூரிப் பண் ஒலிபரப்பப்பட்டபோது அனைவரும் எழுந்து நின்று தமது கல்லூரி அன்னைக்கு மரியாதை செலுத்தியிருந்தனர்.
பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் பதில் தலைவரான திரு.நாகலிங்கம் குஞ்சிதபாதம் அவர்கள் கடந்த பத்து ஆண்டுகளில் சங்கம் முன்னெடுத்திருந்த முக்கியமான கல்லூரிக்கான வளர்ச்சித் திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறியதுடன் அவற்றினை நிறைவு செய்வதற்கு உதவி ஆதரவளித்த அனைவரையும் பாராட்டி நன்றி தெரிவித்து தனது தலைமை உரையினை நிகழ்த்தியிருந்தார்.
இவ்விழாவின் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு விழாவிற்கு சிறப்புச் சேர்த்தது மட்டுமல்லாது காரை.இந்து அன்னையையும் பெருமைப்படுத்திய கல்லூரியின் மகிமை மிக்க பழைய மாணவனான லண்டன் Queen Mary பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆறுமுகம் நல்லநாதன் அவர்கள் காரை.இந்துவின் கல்வித் தரத்தினை உயர்த்துவது குறித்த திட்டங்கள் தொடர்பில் ஆலோசனைகளைத் தெரிவித்து கல்லூரியின் வளர்ச்சிக்கு உதவி வரும் அமைப்புக்களும் தனியாரும் சிந்திக்கும்படியான சிறப்பான உரையினை ஆற்றியிருந்ததுடன் காரை.இந்துவின் மேம்பாட்டிற்கு பேருதவி செய்து வருகின்ற பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் ஒப்பற்ற பணிகளை வெகுவாகப் பாராட்டினார்.
வரலாற்று ஆவணமாக சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டிருந்ததுடன் சங்கத்தின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியவர்களும் பாடசாலையின் வளர்ச்சித் திட்டங்களிற்கு உதவி வருகின்றவர்களுமான பின்வருவோர் பொன்னாடை அணிவித்தும் பாராட்டு விருது வழங்கியும் மதிப்பளிக்கப்பட்டிருந்தனர்.
அமரர் சின்னத்தம்பி தம்பிராசா
அமரர் முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை
அமரர் மாணிக்கம் கனகசபாபதி
சிவநெறிச்செல்வர் தில்லையம்பலம் விசுவலிங்கம்
குழந்தைகள் மருத்துவநிபுணர் Dr.வி.விஜயரத்தினம்
தொழிலதிபர் மகாதேவன் பாலசுப்பிரமணியம்
ஓய்வுநிலை துறைமுக அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரி திரு.கந்தப்பு அம்பலவாணர்.
வானொலி அரங்க அறிவிப்பாளர திரு.பா.ஞானபண்டிதன்.
அத்துடன் இவ்விழாவிற்கு அனுசரணை வழங்கியோரும் பொன்னாடை பதக்கம் என்பன அணிவித்து கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் நேச அமைப்பான கனடா-காரை கலாசார மன்றத்தின் நடப்பு நிர்வாகத்தின் தலைவர், செயலாளர் ஆகியோரும் முன்னாள் தலைவர்கள் இருவர், முன்னாள் செயலாளர்கள் நால்வர், முன்னாள் பொருளாளர்கள் மூவர் உள்ளிட்ட பல நிர்வாகிகள் இவ்விழாவில் கலந்துகொண்டிருந்தமை சிறப்பானதாகும்.
இவ்விழாவின் முதன்மை நிகழ்ச்சியான ரொறன்ரோவின் முன்னணி இசைக்குழுவான நட்சத்திராவின் இன்னிசை வசந்தம் நிகழ்ச்சியின் இடையே ஸ்ரீமதி சியாமா தயாளனின் மாணவி செல்வி துர்கா சிவகுமாரின் நடன நிகழ்வும், தொலைக்காட்சி, வானொலிக் கலைஞர்களான P.S.சுதாகரன், S.T.செந்தில்நாதன் ஆகியோரின் நகைச்சுவைக் கதம்பம் நிகழ்வும் இடம்பெற்றிருந்தன. அண்மையில் அரங்கேற்றம் கண்டவரான செல்வி துர்கா சிவகுமார் வழங்கிய விஸ்ணு கடவுளிற்கு அர்ப்பணம் செய்த பாடல் ஒன்றிற்கான சிறந்த நடனம் சபையோரின் பாராட்டினைப் பெற்றிருந்தது.
சிறப்புக் கௌரவத்தினைப் பெற்றுக்கொண்ட சங்கத்தின் தலைவரான அமரரர் முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை அவர்களிற்கான சேவை விருதினை அன்னாரது குடும்பத்தின் சார்பில் அன்னாரது சகோதரனான கல்லூரியின் பழைய மாணவனும் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் முன்னாள் ஆசிரியருமாகிய முருகேசம்பிள்ளை பாலசுப்பிரமணியம் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
நட்சத்திராவின் “இன்னிசை வசந்தம்” இசை நிகழ்வு அனைவரையும் கட்டிப்போட்டு விட்ட நிகழ்வாகவே அமைந்து விழாவிற்கு சிறப்புச்சேர்த்திருந்தது. இரவு 11.30மணி வரை இசை நிகழ்வு நடைபெற்றிருந்த நிலையிலும் ரசிகர்கள் கலைந்து செல்லாது ரசித்திருந்தமை நிகழ்வின் உன்னதத்தினை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது.
கல்லூரியின் அடிப்படைத் தேவைகளிற்கு உதவும்பொருட்டு பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினால் இருபது இலட்சம் ரூபா நிரந்தர வைப்பிலிட்டு ஏற்படுத்தப்பட்ட திட்டத்திற்கு மேலும் 25 இலட்சம் ரூபாவினை உதவும் பொருட்டு இவ்விழாவின் மூலமாக சேகரிக்கப்படவேண்டும் என்கின்ற இலக்கினை அடைந்திருப்பதாக செயலாளரினால் அறிவிக்கப்பட்டபோது சபையினர் பலத்த கரகோசம் செய்து தமது பாராட்டினையும் நன்றியினையும் வெளிப்படுத்தினர்.
எப்பொழுதும்போல கல்லூரியின் பழைய மாணவனும் வானொலி அரங்க அறிவிப்பாளருமாகிய திரு.பா.ஞானபண்டிதன் நிகழ்வுகளை அழகாகத் தொகுத்து வழங்கி சபையோரது பாராட்டினை மட்டுமல்லாது இசை நிகழ்ச்சியை வழங்கிய கலைஞர்களது பாராட்டினையும் பெற்றுக்கொண்டார்.
சங்கத்தின் நிர்வாக சபை உறுப்பினர் திரு.கனகரத்தினம் சிவபாதசுந்தரம் அவர்களின் நன்றியுரையுடன் விழா நிறைவுற்றது.
விழாவில் கலந்துகொண்ட பலரும் மண்டபத்திலிருந்து வெளியேறும்போது நிர்வாக சபை உறுப்பினர்களை அணுகி அற்புதமான இசை நிகழ்ச்சியை ரசித்த மனநிறைவோடு செல்வதாகக் குறிப்பிட்டு இத்தகைய வாய்பினை ஏற்படுத்தி உதவிய பழைய மாணவர் சங்க கனடாக் கிளைக்கு தமது பாராட்டினையும் நன்றியினையும் தெரிவித்துச் சென்றமை சிறப்பானதாகும்.
கீழே இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்களிற்கு கீழாக உள்ள இணைப்பினை அழுத்துவதன் மூலம் நிகழ்வில் பதிவாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான புகைப்படங்களை பார்வையிடலாம்.
புகைப்படங்களை முற்றிலும் இலவசமாகப் பதிவுசெய்து உதவிய K.K.ELECTRONICS திருமதி மலர் குழந்தைவேலு அவர்களிற்கு நன்றி!
கீழாக உள்ள இணைப்பினை அழுத்துவதன் மூலம் நிகழ்வில் பதிவாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான புகைப்படங்களை பார்வையிடலாம்.
https://photos.app.goo.gl/QqcdVBEWFPcm27PC6
No Responses to “காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் 10வது ஆண்டு விழா உன்னதம் பெற்று அதன் இலக்கினையும் வெற்றிகரமாக அடைந்துள்ளது.”