சென்ற ஒக்டொபர் மாதம் 1ஆம்திகதி நடைபெற்ற காரை.இந்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் 10வது ஆண்டு விழாவில் வைத்து சங்கத்தின் தோற்றத்திலும் வளர்ச்சியிலும் பங்களித்ததுடன் கல்லூரியின் வளர்ச்சித் திட்டங்களிற்கு உதவிய பின்வருவோர் விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டிருந்த லண்டன் Queen Mary பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆறுமுகம் நல்லநாதன் அவர்களினால் பொன்னாடை அணிவித்தும் பாராட்டு விருது வழங்கியும் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.
அமரர் முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை அவர்களிற்கான விருது அன்னாரது மூத்த சகோதரனான கல்லூரியின் பழைய மாணவனும் முன்னாள் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் ஆசிரியருமாகிய திரு.முருகேசம்பிள்ளை பாலசுப்பரமணியம் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
அமரர் சின்னத்தம்பி தம்பிராசா
கல்லூரியின் முன்னாள் உப-அதிபரான அமரர் தம்பிராசா அவர்கள் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையினை உருவாக்குவதற்கு முன்னின்று உறுதியோடு உழைத்தவர் என்பதுடன் சங்கத்தின் முதலாவது தலைவராகவும் இருந்து பணியாற்றி சங்கத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர்.
அமரர் முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை
அமரர் முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை அவர்கள் பழைய மாணவர் சங்கத்தின் உருவாக்கத்தின்போது எதிர்கொண்ட சவால்களையும எதிர்ப்புக்களையும் தனது சாணக்கியத்தினால் வெற்றி கொள்ளவைத்து சங்கம் உருவாக்கம் பெற உழைத்தவர்களுள் முக்கியமானவர். சங்கத்தின் தலைவராகவும் போசகராகவும் கணக்காய்வாளராகவும் பணியாற்றியதுடன் பத்தாண்டுகளிலும் அமையப்பெற்ற சங்கத்தின் நிர்வாகங்கள் அனைத்துடனும் இணைந்து அர்ப்பணிப்புடன தளராது; பணியாற்றி சங்கத்தின் வளர்ச்சியை முன்னெடுத்ததில் இவருடைய பங்கு மகத்தானதாகும்.
அமரர் மாணிக்கம் கனகசபாபதி
அமரர் மாணிக்கம் கனகசபாபதி அவர்கள் சங்கத்தின் ஆரம்பகால நிர்வாக சபை உறுப்பினராகவும் பின்னர உதவிப் பொருளாளராகவும் ஆறு ஆண்டுகள் பொருளாளராகவும் அமரத்துவம் அடைகின்ற வரை அர்ப்பிணிப்புடன் பணியாற்றியவர். கணக்கறிக்கைகளை உரிய முறையில் உரிய காலத்தில் சமர்ப்பித்து வந்ததன் மூலம் சங்கம் உறுப்பினர்களின் நம்பிக்கையினைப் பெற்றுக்கொள்வதற்கு காரணமாகவிருந்தவர்.
திரு.தில்லையம்பலம் விசுவலிங்கம்.
பிரபல்யம்மிக்க கணிதபாட ஆசிரியராக பணியாற்றிய இவர் சங்கம் உருவாக்கம்பெற்றபோது பெரும் உந்துதலாகவும் ஆதரவாகவும் இருந்தவர் என்பதுடன் சங்கத்தின் போசகராக இன்று வரைக்கும் ஒன்பது ஆண்டுகளாக பணியாற்றி சங்கத்தின் சீரிய செயற்பாட்டிற்கும் அதன் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றி வருபவர்.
திரு.கந்தப்பு அம்பலவாணர்.
கந்தப்பு அம்பலவாணர் அவர்களும் பழைய மாணவர் சங்கத்தை உருவாக்கிய இடைக்கால நிர்வாக சபையின் உறுப்பினராக உறுதி குலையாது உற்சாகமாகவும் உணர்வுரீதியாகவும்; பணியாற்றியவர். இவரது அனுபவரீதியான ஆலோசனைகளும் அணுகுமுறையும் சங்கம் பல தடைகளையும் தாண்டி தோற்றம் பெற்றதில் பெரிதும் உதவியாகவிருந்தன. சங்கத்தின் கணக்காய்வாளராகவும் பணியாற்றி சங்கத்தின் அறிக்கைகளை சிறந்த முறையில் சமர்ப்பிக்க ஒத்துழைத்தவர்.
மருத்துவகலாநிதி வி.விஜயரத்தினம்
பிரபல்யம்மிக்க குழந்தைகள் மருத்துவ நிபுணரான இவர் சங்கத்தின் அனைத்து நிகழ்வுகளிற்கும் முதன்மை அனுசரணையாளர்களுள் ஒருவராக இருந்து உதவி வருதுடன் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்த கல்லூரியின் வளர்ச்சித் திட்டங்களிற்கு இவர் வழங்கி வந்த உதவிகள் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கு பெரும் பங்களித்தன. சங்கப் பணிகளில் மிகுந்த அக்கறைகொண்டு ஆதரவாகவும் ஊக்குவிப்பாகவும் இருந்து வருபவர். கல்லூரியின் வரலாற்று உதவித் திட்டமாக விளங்கும் மருத்துவகலாநிதி வி.விஜயரத்தினம் நம்பிக்கை நிதியத்தினை நிறுவியவர். இந்நிதியத்தின் அனுசரணையிலேயே கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு தினமும், வருடாந்த விளையாட்டுப் போட்டியும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
தொழிலதிபர் மகாதேவன் பாலசுப்பிரமணியம்
தனது கடின உழைப்பினால் பெரும் தொழில் நிறுவனத்தினை நிறுவி நிர்வகித்து வருபவர். சங்கம் தொடங்கப் பெற்ற காலத்திலிருந்து சங்கத்தின் பணிகளிற்கும் கல்லூரியின் வளர்ச்சித் திட்டங்களிற்கும் இவரது அனுசரணையும் உதவியும் இருந்து வருகிறது. இவர் மற்றொரு முதன்மை அனுசரணையாளராக விளங்குபவர். சேதமுற்றிருந்த சயம்பு சிலை மீள புனரமைக்கப்பட்டது மகாதேவன் அவர்களது உதவியுடனேயே என்பது குறிப்பிடத்தக்கதாகும். தனது ஆசிரியரான அமரர் சி.குமாரவேலு அவர்களின் ஞாபகார்த்தமாக மாணவர்களை ஊக்குவித்து அவர்களிற்கு உதவும் வகையில் இவரது முழுமையான நிதிப் பங்களிப்புடன் நிரந்தர வைப்புத்திட்டம் ஓன்று தொடங்கப் பெற்று தாய்ச் சங்கத்தினால் செயற்படுத்தப்பட்டு வருகிறது.
திரு.பாலசுப்பிரமணியம் ஞானபண்டிதன்.
கல்லூரியின் பழைய மாணவனான இவர் வானொலி அறிவிப்பாளராகவும் அரங்க அறிவிப்பாளராகவும் கனடா வாழ் தமிழ மக்களால் நன்கு அறியப்பட்டவர். இவரது தனித்தவம் மிக்க சிறந்த அறிவிப்பானது சபையோரை கவரவல்லது. நாம் அழைக்கின்றபோது தாம் கற்ற காரை.இந்து அன்னைக்கான சேவையாகக் கருதி அனைத்து நிகழ்வுகளையும் சிறப்பாகத் தொகுத்து வழங்கி நிகழ்வுகளிற்கு பொலிவு சேர்த்து வருபவர். அத்துடன் சங்கத்தின் விளம்பரப் பிரசுரங்களை வடிவமைப்புச் செய்து உதவி வருபவர்.
கௌரவம் செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன:
No Responses to “பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் 10வது ஆண்டு விழாவில் சேவை விருது வழங்கி பாராட்டிக் கௌரவிக்கப்பட்டோர் விபரம்”