காரைநகர் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனும் ஐக்கிய அமெரிக்காவின் Texas மாநிலத்தில் உயர்பதவி வகித்து வருபவருமான பொறியியலாளர் பாலசுப்பிரமணியம் மகேஸ்வரன் அவர்களின் முழுமையான நிதிப் பங்களிப்புடன் 5ஆம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து காரை.இந்துவில் பயின்று வருகின்ற 36 மாணவர்களின் கற்றலிற்கான மாதாந்த உதவித் திட்டம் சென்ற 7ஆம் திகதி வெள்ளிக்கிழமை; நடைபெற்ற மாப்பாணவூரி நாச்சி அம்மன் கோயிலின் மணிமண்டப கலசாபிசேகமும் 108 சங்காபிசேக நிகழ்வின்போது தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.
5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த வசதி வாய்ப்புள்ள மாணவர்கள் பலரும் நகர்ப்புறப் பாடசாலைகளில் அனுமதி பெற்றுச் சென்றுள்ள நிலையில் வாழ்வாதார வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த திறமையான பல மாணவர்கள் கஸ்ட்டத்தின் மத்தியில் காரை.இந்துவில் தமது கல்வியைத் தொடர்ந்து வருகின்றனர். இவ்விதம் கற்கின்ற முப்பத்தாறு மாணவர்களிற்கும் அவர்கள் உயர்தர வகுப்பு கற்கும் வரைக்குமான உதவி வழங்கி ஊக்குவிப்பதன் மூலம் அவர்களை சாதனை மிக்க மாணவர்களாக மாற்றியமைக்கமுடியும் என்ற முன்மொழிவினை கல்லூரியின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்கள் முன்வைத்திருந்தார்.
காரை.இந்துவின் வளர்ச்சியில் மிகுந்த கரிசனை கொண்டுள்ள மகேஸ்வரன் அவர்கள் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையுடன் நெருக்கமான தொடர்பினைப் பேணி வருபவர். பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினால் முன்னெடுக்கப்பட்டு வந்த கல்லூரியின் வளர்ச்சித் திட்டங்களிற்கு பேருதவி புரிந்தவர். காரை.இந்துவின் மாணவர்களிற்கு உதவும் தனது விருப்பத்தினை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையிடம் பகிர்ந்துகொண்டதைத் தொடர்ந்து பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளைக்கும் அதிபருக்கும் இடையேயான தொடர்பாடலின் விளைவாக அதிபரின் இந்த முன்மொழிவு திரு.மகேஸ்வரன் அவர்களிற்கு தெரியப்படுத்தப்பட்டது. மாணவர்களின் கற்றலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து முழுமையாக ஏற்றுக்கொண்டு உதவ முன்வந்த பொறியியலாளர் மகேஸ்வரன் அவர்களது முன்மாதிரிப் பணியினை காரைநகர் கல்வியாளர்கள் பலரும் பாராட்டியுள்ள அதேவேளை காரைநகர் இந்துக் கல்லூரிச் சமூகம் நெஞ்சார்ந்த நன்றியை மகேஸ்வரன் அவர்களிற்குத் தெரிவித்துள்ளது.
பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையும் திரு.மகேஸ்வரன் அவர்களது காரை.இந்து அன்னை மீதான விசுவாச உணர்வினையும் முக்கியமான பணி ஒன்றிற்கு உதவ முன்வந்த செயலையும் பாராட்டி உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது.
சமய சமூக உணர்வாளரான மகேஸ்வரன் அவர்களும் இவரது குடும்பத்தினரும் இவர்களது பரம்பரைக் கோயிலான மாப்பாணவூரி நாச்சி அம்மன் கோயிலை நிர்மாணித்து நிர்வகித்து வருவதுடன் மட்டுமல்லாது இவ் ஆலய சுற்றாடலிலுள்ள பிள்ளைகளின் சமயப் பண்பாட்டு ஒழுக்க விழுமியங்களை மேம்படுத்தும் பணிகளிற்கும் அவர்களது கல்விச் செயற்பாடுகளிற்கும் உதவி செய்து வருபவர்கள். பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் முதன்மை அனுசரணையாளர்களுள் ஒருவரும் கல்லூரியின் பல திட்டங்களிற்கும் பேருதவி செய்து வருபவருமாகிய தொழிலதிபர் மகாதேவன் பாலசுப்பிரமணியம் அவர்கள் மகேஸ்வரன் அவர்களது மூத்த சகோதரன் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
குறித்த இவ்வுதவித்திட்டத்தின் கீழ் 36 மாணவர்களிற்கும், அவர்கள் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் வரைக்கும் மாதாந்தம் 1000.00ரூபா வீதம் உதவப்படும். இம்மாணவர்களைக் காட்டிலும் அதிக மதிப்பெண்களைப் பெற்று வேறு மாணவன் வகுப்பில் முதல்நிலை மாணவனாக வரும் பட்சத்தில் அம்மாணவனிற்கும் இவ்வுதவு தொகையினை வழங்குமாறு திரு. மகேஸ்வரன் கேட்டுள்ளார்.
கல்லூரியின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்களின் தலைமையில நாச்சி அம்மன்; ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் 36 மாணவர்களிற்கும் முதல் மாதத்திற்கான உதவு தொகை வழங்கப்பட்டு இத்திட்டம் சம்பிரதாயபூர்வமாகத் தொடக்கி வைக்கப்பட்டது. பொறியியலாளர் மகேஸ்வரன், ஓய்வுநிலை அதிபர் பண்டிதர்.மு.சு.வேலாயுதபிள்ளை, மகேஸ்வரனின் சகோதரிகளான திருமதி ஜெயராணி பேரின்பராசா, திருமதி ஜெயவதனி மனோகரன் உள்ளிட்ட பலரும் உதவுதொகையினை மாணவர்களிற்கு வழங்கி வைத்திருந்தனர். கல்லூரியின் ஆசிரியர்கள் சிலரும் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் திரு.நிமலதாசன் கணபதிப்பிள்ளை அவர்களும் இத்தொடக்க நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
36 மாணவர்களிற்கும் தொடர்ந்து மாதாந்தம் வழங்குவதற்கான உதவுதொகை பழைய மாணவர் சங்கத்தின் வங்கிக் கணக்கில் திரு.மகேஸ்வரன் அவர்களினால் வைப்பிலிடப்பட்டுள்ளது.
திரு.மகேஸ்வரன் அவர்கள் கல்லூரிச் சமூகத்தின் சார்பில் ஓய்வுநிலை அதிபரும் பழைய மாணவர் சங்கத்தின் உப-தலைவருமாகிய பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்களினால் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்
நிகழ்வின் புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன. புகைப்படங்களிற்கு கீழே உள்ள இணைப்பினை அழுத்தியும் புகைப்படங்களை பார்வையிடமுடியும்:
கீழுள்ள இணைப்பினை அழுத்தியும் முழுமையான படத்தொகுப்பினை பார்வையிடலாம்:
https://photos.google.com/album/AF1QipMDK8ApxrHvMpfk8m9kt8bAcVV9izm2RRL9gKYk
No Responses to “காரை.இந்துவின் பழைய மாணவன் பொறியியலாளர் மகேஸ்வரன் அவர்களின் உதவியுடன் முப்பத்தாறு மாணவர்களின் கற்றலுக்கான உதவித் திட்டம் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.”