28.10.2022 வெள்ளிக்கிழமை அன்று எமது கல்லூரியில் முன்னாள் தலைசிறந்த விளையாட்டு வீரனும் தற்போது ஜேர்மனியல் வசிப்பவருமான திரு க.ஆனந்தசற்குணநாதன் அவர்கள் தனது குடும்பத்தினருடனும் உறவினருடனும் பாடசாலைக்கு விஐயம் செய்திருந்தார்..
இந்நிகழ்வின் போது அவரது சகபாடியும் அவரது காலத்தில் அவருடன் விளையாட்டு அணிகளில் அங்கம் வகித்தவரும் எமது பாடசாலையின் முன்னாள் உப அதிபருமான திரு தெ.லிங்கேஸ்வரன் அவர்களும், பாடசாலையின் வளர்ச்சியில் அக்கறையுடன் செயற்பட்டு வருபவரும் ஒய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளருமான திரு S.K.சதாசிவம் அவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
திரு ஆனந்தசற்குணநாதன் அவர்கள் அதிபருடன் பாடசாலையின் தேவைகள் தொடர்பாகக் கேட்டறிந்ததுடன், விளையாட்டு அணிகளின் வீர, வீராங்கனைகளைச் சந்தித்து கலந்துரையாடினார்.
இந் நிகழ்விற்கு தலைமைதாங்கிய அதிபர் திரு அ.ஜெகதீஸ்வரன் அவர்கள் ஆனந்தசற்குணநாதனின் பாடசாலைக்கால விளையாட்டுச் சாதனைகளை விபரமாக எடுத்துக்கூறியிருந்ததுடன் ஓர் அப்பழுக்கற்ற விளையாட்டு வீரனுக்குரிய அனைத்துப் பண்புகளையும் திரு.ஆனந்தசற்குணநாதன் கொண்டு விளங்குவதாகக் குறிப்பிட்டார். சிறப்பாக வெற்றி தோல்விகளை ஏற்றுக்கொள்கின்ற மனப்பக்குவமும் தான் கற்ற பாடசாலை என்கின்ற சிந்தனையையும் பாடசாலைக் காலத்து விளையாட்டுத்துறை ஈடுபாடு ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்ட அதிபர் அத்தகைய பண்புகளின் வெளிப்பாடாகவே திரு.ஆனந்தசற்குணநாதன் அவர்களின் பாடசாலைக்கான விஜயம் அமைந்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும் இக்கல்லூரியில் கல்வி கற்ற மாணவர்கள் கல்லூரியை மறவாது தாமாகத் தேடிவந்து கல்லூரித் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. எனவே இந்நேரத்தில் ஆனந்தசற்குணநாதன் அவர்களுக்கு எனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன் என அதிபர் திரு.ஜெகதீஸ்வரன் அவர்கள் மேலும் கூறினார்.
திரு S.K. சதாசிவம் அவர்கள் உரையாற்றுகையில் சிறுபராயம் முதல் காரை விளையாட்டுக் கழகத்தில் விளையாடிய காலம் வரையான முக்கியமான நிகழ்வுகளை நினைவுகூர்ந்து இவர் மாணவர்களுக்கு சிறந்த ஓர் முன் உதாரணமான விளையாட்டு வீரன் எனக் கூறினார்.
இவர் பாடசாலையின் தேவைகளைக் கேட்டறிந்து அவற்றை நிறைவேற்றுவதற்கான வழிவகைகளையும் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வில் திரு க. ஆனந்தசற்குணநாதன் அவர்கள் உரையாற்றுகையில் தான் கல்வி கற்ற பாடசாலைக்கு உதவிகளைச் செய்வதற்கு தனது குடும்பம் தயாராக இருப்பதாகவும் நீடித்து நிலைத்திருக்கக்கூடிய அபிவிருத்திக்கு தான் உதவ விரும்புவதாகவும் கருத்துத் தெரிவித்திருந்தார்.
மைதான நிகழ்வுகளில் தேசிய மட்ட சாதனைகளை ஏற்படுத்திய ஆனந்தசற்குணநாதன் அவர்கள் தேசிய மட்ட உதைபந்தாட்ட அணியிலும், யாழ்.மாவட்ட உதைபந்தாட்ட அணியிலும் இடம்பெற்றிருந்த பெருமைக்குரியவர். கல்லூரிக்கு பல உதவிகளை கடந்த காலங்களில் செய்து வந்துள்ள இவர் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் பணிகளிற்கும் உதவியிருந்தார் என்பதும் இத்தருணத்தில் நன்றியுடன் நினைவுகூரத்தக்கதாகும்.
இந்நிகழ்வின் நிழற்படங்கள் சில கீழே இணைக்கப்பட்டுள்ளன.
No Responses to “காரை.இந்துவின் புகழை மேலோங்க வைத்த விளையாட்டுத்துறைச் சாதனையாளன் ஆனந்தசற்குணநாதன் அவர்களின் கல்லூரிக்கான விஜயம்.”