எமது கல்லூரியின் புகழ் பெற்ற நல்லாசிரியரும், வெள்ளி விழா அதிபராகச் சேவையாற்றி பாடசாலையை உயர்நிலைக்கு உயர்த்திய சிற்பியுமாகிய அமரர்.கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் 100 ஆவது பிறந்த நாள் இன்று 17.04.2016 ஆகும்.
அன்னார் அதிபராகச் சேவையாற்றிய காலத்தைக் கல்லூரி வரலாற்றில் பொற்காலமாக்கிய காலத்தால் அழிக்கப்பட முடியாத தியாகச் செம்மல் அமரர்.கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களை நன்றியுடன் நினைவு கூர்ந்து வாழ்த்தி வணங்க வேண்டியது எமது பாடசாலைச் சமூகத்தின் கடமையாகும்.
அந்தவகையில், இந்நாளையொட்டி “நானறிந்த காரைநகர்ப் பெரியார் கலாநிதி.ஆ.தியாகராசா ஆவார்“ என்ற கட்டுரை இங்கே எடுத்துவரப்படுகின்றது.
எமது பாடசாலை மாணவன் செல்வன் விநோதன் கனகலிங்கம் எழுதிய இக்கட்டுரை 2014 ஆம் ஆண்டில் சுவிஸ் காரை அபிவிருத்தி சபையினால் காரைச் சிறார்களிடையே நடத்தப்பட்ட அனைத்துலகக் கட்டுரைப் போட்டியில் பரிசு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நானறிந்த காரைநகர்ப் பெரியார் கலாநிதி ஆ.தியாகராசா ஆவார்
“இந்து சமுத்திரத்தின் முத்து” எனவும்,”தெட்சணகைலாயம்” எனவும், திருமந்திரத்தை அருளிய திருமூலரால் “சிவபூமி” எனவும் போற்றப்படுகின்ற இலங்கை திருநாட்டின் வடமாகாணத்தின் சிகரமாய் செந்தமிழ் பேணி சிவநெறி காக்கும் பண்பாட்டின் உறைவிடமாய் அமையப்பெற்ற குடாநாடே யாழ்ப்பாணம். அதன் வடமேற்குத் திசையிலே பதின்நான்கு மைல் தொலைவில் எண்திசை புகழும் அருளும் நிறைந்த சௌந்தலாம்பிகை சமேத சுந்தரேஸ்வரப்பெருமான் குடிகொண்ட ஈழத்துச்சிதம்பரம் என்னும் திவ்வியசேத்திரம் இனிதே அமைந்து சுந்தர ஈசனின் திருவருட்கடாட்சம் இனிதே பொழிய நல்லருள் அதனால் நலம் பல பெற்று வளம் பல கொழிக்கும் திருநிறை கொண்ட கவின் பெறும் ஊர் காரைநகர் ஆகும். இத்தகைய சிறப்பு மிக்க ஊரிலே நானறிந்தபெரியார்களுள் ஒருவர் கலாநிதி .ஆ.தியாகராசா ஆவார்.
இவர் பிரிட்டிஷ் மலாயாவில் புகையிரதப்பாதை இடப்பட்ட பொழுது அதன் சமிக்ஞைப் பொறியமைப்பை நிர்மாணித்த திரு. ஆறுமுகம் என்பவருக்கும் அமிர்தவல்லிக்கும் கனிஷ்ட புத்திரனாக 1916 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 17 ஆந் திகதி முக்காலமும் நன்கு உணர்ந்த ஞானியான திருவள்ளுவரின்
“தோன்றில் புகழோடு தோன்றுக அஃ(து) இலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.”
என்ற ஈரடி வாக்குக்கு இணங்க புகழோடு மலேசியாவில் பிறந்தவரே பெரியார் கலாநிதி ஆ. தியாகராசா ஆவார்.
இப் பெரியார் கம்பீரமான ஆடம்பரமற்ற தோற்றத்தையும் கம்பீரமான நடையையும் துணிவு கொண்ட எண்ணத்தையும் தூய்மையான நெஞ்சத்தையும் எடுத்ததை முடிக்கும் ஆற்றலையும் எளிமையான வாழ்வையும் தனது அணிகலன்களாகக் கொண்டிருந்தார். இவர்,
“ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்.”
என்ற வள்ளுவனின் வாக்குக்கிணங்க ஒழுக்கத்தை தனது உயிரினும் மேலாக நேசித்தார். அத்தோடு “மக்கள் சேவையே மகேசன் சேவை” என்ற அதி உன்னத சிந்தனையுடன் மக்களுக்குப் பணியாற்றிய பெருந்தகை ஆவார்.
இவர் தனது ஆரம்பக்கல்வியை மலேசியாவிலே ஆரம்பித்து தனது எட்டு வயதிலே இலங்கை வந்து இரண்டு ஆண்டுகள் தனது பேரன் பேர்த்தியுடன் இருந்து யாழ்ப்பாணத்திலே கல்வி கற்றார். இவர் பத்து வயதுச் சிறுவனாக இருக்கும் போது இவரது தந்தையார் இந்தியாவிலுள்ள விஷ்பாரதி பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்வதற்கு அனுப்பிய போது இவருக்கு வயதுக் குறைவு காரணமாக இவர் சென்னை அடையாறு கலாஷேத்திரத்தில் சேர்க்கப்பட்டு கல்வியை பயின்றார்.
இவர் “தமிழ்ப்பாட்டி” என்று அழைக்கப்படுகின்ற ஒளவைப்பிராட்டியாரால் அருளப்பட்ட கொன்றைவேந்தனில் குறிப்பிடப்பட்டுள்ள “கைப்பொருள் தன்னில் மெய்ப்பொருள் கல்வி” அதாவது அழிவில்லாத நிலையான பொருள் கல்வி என்பதனை நன்கு உணர்ந்து 1932 இல் சீனியர் பரீட்சையிலும், 1934 இல் இன்ரர்சயன்ஸ் பரீட்சையிலும், 1936 இல் பீ.ஏ பரீட்சையிலும், 1938 இல் எம். ஏ. பரீட்சையிலும் சித்தி பெற்றார். இவர் 1938 இல் எம்.ஏ பட்டம் பெற்ற பின் 1940 ஆம் ஆண்டு வரை சிங்கப்பூர் மருத்துவக் கல்லூரியிலும் கல்வி கற்றார். 1941 இல் எம். லிற் பட்டத்தைப் பெற்று மீண்டும் இலங்கை திரும்பிய இவர் காரை வாழ் மாணவர்களின் கல்விப்புலத்தைமேம்படுத்தும் நோக்கோடு பெரியார் சயம்புவால் 1888 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட காரைநகரின் கலங்கரை விளக்காய் விளங்கும் காரைநகர் இந்துக்கல்லூரியில் ஆசிரியராகக் கடமையேற்றார்.
இப்பெரியார் 1942 இல் “மனைத்தக்க மாண்புடையாள்” அதாவது மனையறத்திற்கு தகுந்த நற்குண நற்செயல்களை உடையவளான திரு. சிவகுருநாதன் அவர்களின் மகள் மகேஸ்வரியை வாழ்க்கைத் துணைவியாக கொண்டார். இப் பெரியாரின் வெற்றிக்கு பக்கபலமாக இவரது துணைவியார் இருந்தார்.
பின் 1946 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 16 ஆம் திகதி முத்து சயம்பு,ஈ.கே.சிவசுப்பிரமணியஐயர், சிவத்திரு எஸ். இராமகிருஷ்ணஐயர், திரு பொ.வேலுப்பிள்ளை, திரு ந. கந்தையா, சிவத்திரு அ.சீதாராமஐயர், திரு அ.சரவணமுத்து, சிவத்திரு அ.சீதாராமஐயர், திரு ஏ.கனகசபை ஆகிய இந்துக்கல்லூரியின் அதிபர்களின் வரிசையிலே திரு ஏ.கனகசபை ஓய்வுபெற 11 வது அதிபராக பெரியார் ஆ.தியாகராசா அவர்கள் பொறுப்பேற்றார்.
இக்காலத்தில் இலவசக்கல்வியின் தந்தையான சீ. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா என்பவரால் பாலர் கல்வி முதல் பல்கலைக்கழகம் வரை இலவசக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. காரைநகர் இந்துக்கல்லூரியில் சிரேஷ்ட பாடசாலை சான்றிதழ் வகுப்புக்கள் வரை இருந்தமையினால் ஏனைய பாடசாலைகளில் 5 ஆம் வகுப்புடன் கல்வியை இடைநிறுத்திய மாணவர்கள்; அனைவரும் காரை இந்துக்கல்லூரியில் அனுமதி கோரினார். மாணவர்கள் அனைவரும் நன்கு கற்க வேண்டும் என்ற அவாவுடன் அனைத்து மாணவர்களுக்கும் அனுமதி வழங்கினார். 1915 இல் சாமி பள்ளிக்கூடம் உருவாக்கப்பட்டு 7 ஆம் ஆண்டு வரை ஆங்கில மொழி மூலம் கல்வி வழங்கப்பட்டது. பின்னர் மாணவர் எண்ணிக்கை நன்கு குறைய 1945 இல் இப் பள்ளிக்கூடம் மூடப்பட்டது இதனால் காரைநகர் மேற்குப் பகுதியில் வசித்த மாணவர்களும் இக் கல்லூரிக்கு வருகை தந்தனர். இவ்வாறு வருகை தரும் மாணவர் எண்ணிக்கை அதிகரித்தமை பெரும் சவாலாக இருந்தது. ஏனெனில் மாணவர்களுக்கு அமர்வதற்கு வாங்கோ, மேசையோ, இடவசதியோ இருக்கவில்லை. அத்தோடு கற்பிப்பதற்கும் ஆசிரியர் இருக்கவில்லை. மாணவர்களது கல்வி பாதிக்கப்படக்கூடாது என்ற உயர்ந்த நோக்கோடு ஆறு அறைகளைக் கொண்ட கட்டடத்தைக் கட்டுவித்தார். பெற்றோரின் உதவியுடன் வாங்குமேசைகளையும் இந்துக்கல்லூரி சபையின் அனுசரணையுடனும் கடமை உணர்வு நிறைந்த ஆசிரியர்களையும் பெற்று மாணவர்களின் கல்விக்கு ஆதரவு வழங்கினார்.
கோபுரம் இல்லாத கோயிலாக பல வித்தைகளைக் கற்பிக்கின்ற பூணூல் அணியாத பல பூசகர்கள் அதி உன்னத அபிஷேக ஆராதனையை அன்றும் இன்றும் நடாத்திக் கொண்டிருக்கின்ற இந்த காரைநகர் இந்துக் கல்லூரிக்கு “திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார்” என்ற சிறப்பிற்குரிய திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் அருளிய மாணிக்கவாசகர் மன்னன் குதிரை வாங்கக் கொடுத்த பணத்தை சிவத்தொண்டிற்காக செலவளித்தார். ஆனால் எங்கள் பெரியார் தியாகராசா அவர்கள் தனது வீட்டிலே வேயப்பட்டிருந்த ஓட்டைக் கழற்றி வந்து இந்தக் கோபுரம் இல்லாத கோவிலின் ஓட்டைகளை எல்லாம் வேய்ந்தார்.
சாமி பள்ளிக்கூடம் (அமெரிக்கன் மிஷன் பாடசாலை) மூடப்பட்டதன் காரணமாக காரைநகர் மேற்குப்பகுதி மாணவர்களின் நலன் கருதி சைவ பாடசாலையை நிறுவவேண்டும் என காரைநகர் மேற்கைச் சேர்ந்த பெற்றோர்கள், கல்வியாளர்கள், வர்த்தகப் பிரமுகர்கள் ஆகியோர் தீர்மானித்தனர். இப் பாடசாலையை ஆரம்பிப்பதற்கான ஓர் ஆலோசனைக் கூட்டம் திரு தியாகராசாவின் தலைமையில் அவர் இல்லத்தில் நடைபெற்றது என்றால் மிகையாகாது. பாடசாலையைத் தாமதமின்றி ஆரம்பிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது. அதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன.
பின்னர் பெரியார் ஆ.தியாகராசா அவர்களை யாழ்ற்றன் கல்லூரி அதிபராக பதவி ஏற்குமாறு பலர் வற்புறுத்தியும்
“எண்ணிய எண்ணியாங்(கு) எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்”
என்ற வள்ளுவரின் வாக்குக்கு இணங்க தான் பொறுப்பேற்ற காரைநகர் இந்துக்கல்லூரியை உயர்த்த வேண்டும் என்ற அதி உன்னத நோக்கோடு அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்தார். இவரது காலத்திலே உயர்நீதிமன்ற நீதிபதி உயர்திரு ந.நடராஜா அவர்களின் ஞாபகார்த்தமாக அவரது துணைவியார் தங்கம்மா நடராஜா அவர்களால் அறுபதினாயிரம் ரூபாய் செலவில் நடராஜா ஞாபகார்த்த மண்டபம் அமைக்கப்பட்டு 19ஆம் திகதி ஆவணி மாதம் 1950ஆண்டில் கௌரவ நீதி அமைச்சர் கலாநிதி ராஜபக்ஸ அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
அடுத்து இப் பெரியார் திருமதி தங்கம்மா நடராஜா என்பவரிடமிருந்து பாடசாலைக்கு பின்புறம் இருந்த காணியை தர்ம ஆதீனமாகப் பெற்று விளையாட்டு மைதானத்தை அமைத்தார். இரசாயனம், பௌதீகம், விலங்கியல், உயிரியல் ஆகிய பாடங்களுக்கான தனித்தனி ஆய்வுகூடங்கள் அமைத்தார் மற்றும் இவரது காலத்தில் மனையியல் ஆய்வுகூடம், புதிய நூலகம், புவியியல் அறை என்பன உருவாக்கப்பட்டன. பின்னர் 1942 இல் “காரைநகர் இந்துக் கல்லூரி”என்ற பெயரிலே சஞ்சிகை வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1953, 1956, 1959 ம்ஆண்டுகளில் “சயம்பு” என்ற கல்லூரி சஞ்சிகை வெளியிடப்பட்டது மற்றும் கல்லூரியின் வைரவிழா, பவளவிழா, முத்துவிழா என்பன இவரது காலத்திலே கொண்டாடப்பட்டன. இப் பெரியார் மலேசியா சென்று பழைய மாணவர்களிடம் நிதி சேகரித்து “சயம்பு ஞாபகார்த்த” கட்டடத்தை அமைத்தார். பின் இதன் மேற்குப்புறத்தில் “சியவச” நூல் நிலையத்தை அமைக்க அரசினால் வழங்கிய நிதியை விட மேலதிக நிதி தேவைப்பட்ட பொழுது நன்கொடையாளரிடம் பெற்று நூல்நிலையத்தையும் அதனோடு சேர்ந்த வகுப்பறைத் தொகுதியையும் அமைத்தார். இவர் உயர்தர வகுப்புக்களை ஆரம்பித்து கல்லூரியின் தரத்தை சிறப்புத் தரத்துக்கு (1AB) உயர்த்தினார்.
இவர் கல்விப் போதனையில் பண்புடனும் பணிவுடனும் செயற்பட்டு தன் உயிரை விட மேலாக ஒழுக்கத்தை மதித்து ஒழுக்கம் மிக்க மாணவரை உருவாக்குவதில் அல்லும் பகலும் உழைத்தார். இவர் இருபத்தைந்து ஆண்டுகள் காரை இந்துவின் வெள்ளி விழா கண்ட அதிபராக இருந்து திறமை மிக்க உதாரண புருஷராக நிருவாகத்தை நடாத்தி மாணவர் சமுதாயம் சீரிய எதிர்காலத்தை எதிர்கொள்ள கலங்கரை விளக்கானார். இவர் சிறப்புத்தர பதவியில் உயர்நிலை சம்பளம், ஓய்வூதியம் என்பவற்றுக்கு காத்திராது 02.04.1970 இல் ஓய்வு பெற்று மக்கள் பணி ஆற்ற ஆரம்பித்தார்.
இவர் வட்டுக்கோட்டைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார். இவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் காரை மண் புதுப் பொலிவு பெற்று விளங்கியது எனலாம். மின்சாரம், குழாய்நீர்த்திட்டம், நன்னீர்மயமாக்கல், வேணன் அணைக்கட்டு போன்ற பல திட்டங்களை நிறைவேற்றினார். வட்டுக்கோட்டைத் தொகுதியின் பாடசாலை அதிபர்களுடன் பகிர்ந்து தரமான கல்வி அபிவிருத்தியில் அக்கறை செலுத்தினார். அனைத்து நியமனங்களின் போதும் விசேடமாக கல்வி ஆளணி நியமனங்களின் போது கிடைக்க வேண்டிய இடங்களை தவறாது கிடைக்க இடைவிடாது முயன்று பொருத்தமானவர்கள் நியமனம் பெற ஆவன செய்தார். பாராளுமன்றத்தில் கல்வி தொடர்பான விவாதங்களின் போது ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்தார். இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகத்தை ஆரம்பிப்பதற்கு முன்னோடியாக இருந்தார். இப் பல்கலைக்கழகம் 1974 இல் பரமேஸ்வராக் கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்டது. இவரின் வேண்டுகோளுக்கு இணங்க யாழ்ப்பாணகல்லூரியில் விஞ்ஞான பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கு யாழ்ப்பாண வளாகத்தின் இன்னொரு பிரிவை ஆரம்பித்தது.
இப்பெரியார் 1979 ஆம் ஆண்டு இந்தியா சென்று கலாநிதி பட்டத்திற்கான ஆய்வினை மேற்கொண்டு “இலங்கையும் தென் ஆசியாவின் பொருளாதார ஒத்துழைப்பு” என்ற நூலை எழுதினார். இந்நூலுக்கு முகவுரை எழுதிய யாழ்ப்பாண பல்கலைக்கழக பொருளியல் துறை தலைவர் “கலாநிதி தியாகராசாஇந்த நூலில் இலங்கையின் பொருளாதார பிரச்சனைகளை பிராந்திய ரீதியான பார்வையில் பகுப்பாய்வு செய்துள்ளார். பொருளாதார ஒத்துழைப்பிற்கான தென் ஆசியா சம்மேளனம் (SAARC)உதயமாவதற்கு முன் இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந் நூலில் கருத்திற் கொள்ளப்பட்டவை சார்க் அமைப்பு இலக்குகளாக இருப்பதனால் இந்நூல் சரியான திசையில் எடுக்கப்பட்ட முதல்படி எனக் குறிப்பிடலாம். இந்தப் பின்னணியில் கலாநிதி தியாகராசாவின் ஆய்வு இருப்பதால் முக்கியத்துவம் பெறுகின்றது. அவர் மிகக் கவனத்தையும் ஆக்கபூர்வமான பரிசீலனைகளையும் விடயத்தின் எல்லா அம்சங்களிலும் செலுத்தியுள்ளார். கலாநிதி தியாகராசாவின் புலமை மிக்க அணுகுமுறையும், அரசியல் அனுபவங்களுடன் இணைந்த செயற்பாடு மிக்க இந்நூல் பொருளாதார வல்லுனர்களுக்கும் அரசியல் விஞ்ஞானிகளுக்கும் ஆர்வம் ஊட்டுவதாக அமையும்” எனக் குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து இவரது திறமை வெளிப்படுகிறது.
இவ்வுலகமானது நேற்று உண்டு, உடுத்தி, களித்து, மகிழ்ந்து வாழ்ந்தவர் இன்றில்லை என்னும் பெருமையுடையது. இவ்வுலக வாழ்க்கை நீர்க்குமிழி போன்று நிலையற்றது. இதனை,
“நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும்
பெருமையுடைத்து இவ்வுலகு”
என்று பொய்யாமொழிப் புலவர் வாக்கு கூறுகிறது. விதியை யார் தான் வெல்ல முடியும். பிறப்பு உண்டேல் இறப்பு நிச்சயம் என்பது உலக நியதியாகும். “எல்லாம் எப்பவோ முடிந்த காரியம்” என்று ஈழத்துச் சித்தரில் ஒருவரான யோகர் சுவாமிகள் கூறுகின்றார். இவ்வாறான உலக வாழ்க்கையிலே காரை மண்ணிற்கு சேவை ஆற்றிக் கொண்டிருந்த போது 1981 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை வேட்பாளராக யாழ் மாவட்ட சபைத் தேர்தலில் போட்டியிட்ட போது எம் பெரியார் கலாநிதி ஆ.தியாகராசாவின் உயிர் பறிக்கப்பட்டது. இவர் ஆற்றிய சேவையால்,
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்”
என்ற வள்ளுவனின் வாக்குக்கு இணங்க மறைந்தும் காரை வாழ் மக்களின் மனங்களிலே மறையாமல் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்.
No Responses to “வெள்ளி விழா அதிபர் அமரர்.கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் 100 வது பிறந்த நாள் (17.04.2016) சிறப்புக் கட்டுரை–1”