அண்மைக்காலம் வரை எம்மிடையே வாழ்ந்த மிகமூத்த பழையமாணவராகிய தத்துவக்கலாநிதி, சிவத்தமிழ் வித்தகர், பண்டிதர் சிவஸ்ரீ க.வைத்தீசுவரக்குருக்கள் அவர்கள் தில்லைக் கூத்தனின் திருவடி கலந்த ஓராண்டு நினைவு நாள் (24.04.2016) இன்றாகும்.
எல்லையில்லா ஈசன்பணியும், சொல்லில் அடங்காத் தமிழ்ப்பணியும் ஆற்றி தாம் பிறந்த காரையம்பதிக்கு மட்டுமல்ல தாம் கல்வி கற்ற காரைநகர் இந்துக் கல்லூரிக்கும் பெரும்புகழ் சேர்த்தவர் தத்துவக்கலாநிதி பண்டிதர் சிவஸ்ரீ.க.வைத்தீசுவரக்குருக்கள் ஐயா அவர்கள்.
அன்னாரின் ஓராண்டு நினைவு நாளையொட்டி யாழ்ப்பாணம் வலம்புரி நாளிதழில் இடம்பெற்ற காரைநகர் மணிவாகசகர் சபை முன்னாள் செயலாளரும், பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் பொருளாளருமாகிய திரு.மா.கனகசபாபதி அவர்கள் எழுதிய கட்டுரை இங்கே எடுத்துவரப்படுகின்றது.
ஈழத்துச் சிதம்பரத்தின் வளர்ச்சிக்காக அருந் தொண்டாற்றிய
கலாநிதி, பண்டிதர் சிவஸ்ரீ க. வைத்தீசுவரக்குருக்கள்
மா. கனகசபாபதி
காரைநகர் மணிவாசகர் சபை
முன்னாள்செயலாளர்
திருஉத்தரகோசமங்கையிலிருந்து காரைநகருக்கு அழைத்து வரப்பட்ட அந்தணர் பரம்பரையில் வந்த கணபதீசுவரக் குருக்கள் சிவயோகசுந்தராம்பாள் தம்பதியினருக்கு மூன்றாவது புதல்வராக 22.09.1916 அன்று திண்ணபுரம் என்னும் ஆன்மீக வளம் மிகுந்த சிவபூமியில் வைத்தீசுவரக் குருக்கள் தோன்றினார்.
இவர் தமது ஆரம்பக் கல்வியைக் காரைநகர் வலந்தலை வடக்கு அ.மி.த.க. பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியைக் காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலையிலும், ஆங்கிலக் கல்வியைக் காரைநகர் இந்துக் கல்லூரியிலும் பயின்றார். பின்னர் அளவெட்டி அருணோதயாக் கல்லூரியிலே கல்வி கற்றுச் சிரேட்ட பாடசாலைத் தராதரப் பரீட்சையில் சித்தியடைந்தார். சுன்னாகம் பிராசீன பாடசாலையில் வடமொழியும் தமிழும் கற்று வடமொழியில் பிரவேச பண்டிதர் பரீட்சையிலும் தமிழில் பாலபண்டிதர் பரீட்சையிலும் சித்தியடைந்தார். சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரின் மாணவனாகிய வித்தகர் ச. கந்தையாபிள்ளையிடம் சைவசித்தாந்தம் கற்றார். மகாவித்துவான் சி. கணேசையரிடம் தமிழ் இலக்கணத்தை முறையாகப் பயின்றார். 1939 ஆம் ஆண்டு பண்டிதர் பரீட்சையிலும் சித்தியடைந்தார். 1939 ஆம் ஆண்டில் பரமேசுவரா ஆசிரியர் கலாசாலையிலே கற்றுப் பயிற்றப்பட்ட ஆசிரியரானார். முன்னாள் ஆட்சிமன்ற உறுப்பினர் (Senator) அ. நடேசபிள்ளை அவர்களிடமும் தர்க்க சாத்திரமும் கற்றார்.
சுன்னாகம் மயிலணியைச் சேர்ந்த பிரம்மசிறீ ச. சிவராமலிங்கஐயர் -ஞானாம்பிகை தம்பதிகளின் மூத்த மகள் சாரதாம்பிகையைத் திருமணம் செய்தார். சச்சிதானந்த சர்மா, இராணி, சாவித்திரி ஆகிய மும்மணிகளுடன் இன்பத்திலே திழைத்து இல்வாழ்க்கையில் நிறைவு பெற்றார்
1940 ஆம் ஆண்டு கொழும்பு விவேகானந்தாக் கல்லூரியில் ஆசிரியப் பணியைத் தொடங்;கினார். பணியாற்றிய காலத்தில் கொழும்பு விவேகானந்த சபையால் நடத்தப்பட்டு வந்த அகில இலங்கைச் சைவசமய பாடப் பரீட்சைக் குழுவில் அங்கம் வகித்துச் சேவை செய்து வந்தார். ஞாயிற்றுக்கிழமைகளில் வெலிக்கடைச் சிறைச்சாலைக்குச் சென்று கைதிகளுக்கு அறிவுரை வழங்கி வந்தார். நாட்டின் பல்வேறு பாகங்களிலும் ஆசிரியப் பணியாற்றி வட்டுக்கோட்டை துணைவி அ. மி. த. க. பாடசாலையில் அதிபராகக் கடமையாற்றி 1971ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
தவத்திரு யோகர் சுவாமிகளின் ஆசியுடன் 01.01.1940 ஆம் ஆண்டு காரைநகர் மணிவாசகர் சபையை குருக்கள் ஐயா நிறுவினார். மணிவாசகர் சபை மார்கழி மாத திருவெம்பாவைக் காலத்தில் 1955ஆம் ஆண்டு முதல் மணிவாசகர் விழாவினை நடத்தி வருவதற்கும், மணிவாசகர் விழாவில் எமது நாட்டிலிருந்தும் தமிழ்நாட்டிலிருந்தும் சைவத் தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டு சமயச் சொற்பொழிவாற்றி வருவதற்கும் சிவசிறீ வைத்தீசுவரக்குருக்கள் மணிவாசகர் சபையோடு இணைந்து இறுதிவரை பெரும் பணியாற்றி வந்துள்ளார்.
ஈழத்துச் சிதம்பரத்தில் நடைபெறும் மார்கழி திருவாதிரை உற்சவகாலத்திற் ஷகூத்தப்பிரான் புத்தகசாலை| என்ற பெயருடன் புத்தக நிலையம் ஒன்றை அமைத்துப் பயனுள்ள சைவசமய நூல்கள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற பெருநோக்குடன் ஆதாயம் கருதாது விற்பனை செய்து தொண்டாற்றினார்.
1960ஆம் ஆண்டு காரைநகர் தமிழ் வளர்ச்சிக் கழகத்தினை நிறுவினார். இதன்மூலம் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான தமிழ்மொழி மாதிரி வினாக்கள் அடங்கிய பத்திரங்களை வெளியிட்டு மாணவர்கள் சிறந்த பெறுபேற்றினைப் பெற்றுக் கொள்வதற்கு உதவினார். தமிழ் இலக்கிய விளக்கம், மதிப்பீட்டுப் பயிற்சிகள், கட்டுரைக்கோவை முதலிய நூல்களையும் வெளியிட்டு மாணவர்களின் தமிழ்க் கல்வி வளர்ச்சிக்கு வழிகோலினார். திண்ணபுரத்திற்கு அருகாமையில் சடையாளி என்ற இடத்தில் ‘மணிவாசகர் சனசமூக நிலையம்’ அமைவதற்கு மூலகர்த்தாவாக இருந்துள்ளார். தன்னிடமிருந்த நூல்களை எல்லாம் கொடுத்து காரைநகர் வியாவில் ஐயனார் ஆலயத்தில் நூல் நிலையம் அமைப்பதற்கு உதவினார்
இவர் ஈழத்துச் சிதம்பரத்தை உயிரினும் மேலாகக் கருதி அதன் வளர்ச்சிக்காக அருந் தொண்டாற்றினார். காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் ‘ஈழத்துச் சிதம்பரம்’ எனப் பெயர் பெற்று உலகறிய விளங்குவதற்கு இவர் காரணமாகவிருந்து தொண்டாற்றியமை குறிப்பிடத்தக்கது.
1960 ஆம் ஆண்டு இவரது தந்தையாரும், ஈழத்துச் சிதம்பர பிரதம சிவாச்சாரியாருமாகிய சிவசிறீ கணபதீசுவரக் குருக்களால் எழுதப்பட்ட ‘ஈழத்துச் சிதம்பரம்’ என்னும் நூலை பதிப்பித்து வெளியீடு செய்தார்.
‘ஈழத்துச் சிதம்பர புராணம்’ என்னும் தல புராணத்தை 1971 ஆம் ஆண்டு நவாலியூர் புலவர்மணி சோ. இளமுருகனார் அவர்களைக் கொண்டு இயற்றுவித்து அன்னாரின் துணைவியாரான பண்டிதைமணி பரமேசுவரி அம்மையாரைக் கொண்டு அதற்குச் சிறந்த உரையையும் எழுதுவித்துப் பதிப்பித்த பெருமை குருக்கள் ஐயாவையே சாரும்.
இவரால் பதிப்பிக்கப்பட்ட ஈழத்துச் சிதம்பரபுராணம் சிறந்த கட்டமைப்பு உடைய நூல் என்று 1974ஆம் ஆண்டு சனவரி 29ஆம் திகதி இலங்கைத் தேசிய நூல் அபிவிருத்திச் சபையால் பாராட்டப்பட்டு சான்றிதழ் அளிக்கப்பட்டது.
2007ஆம் ஆண்டு ஈழத்துச் சிதம்பரத்தில் வீற்றிருக்கும் பூரணை, புட்கலை சமேத ஐயனார் வரலாற்றைக் கூறும் ‘ஆண்டிகேணி ஐயனார் புராணம்’ என்னும் நூலை வட்டுக்கோட்டைப் பண்டிதர் க. மயில்வாகனனார் மூலம் இயற்றுவித்ததுடன் சைவப்புலவர் சு. செல்லத்துரை அவர்களைக்கொண்டு அதற்கு உரையும் எழுதுவித்து வெளியீடு செய்தார்.
காரைநர் கார்த்திகேயப் புலவரால் ஆக்கப்பட்ட ஈழத்துச் சிதம்பர ஆலயத்தின் பெருமையை எடுத்தியம்பும் திண்ணபுர அந்தாதி என்னும் நூலுக்கு தென்னிந்திய தருமைபுர ஆதீனப்புலவர் செஞ்சொற் கொண்டல் சொ. சிங்காரவேலன் அவர்களைக் கொண்டு உரை எழுதுவித்து வெளியீடு செய்தார்.
ஈழத்துச் சிதம்பர தேவஸ்தானத்தினாலே வெளியிடப்பட்ட திருவாதிரை மலர்களுக்கு ஆசிரியராக இருந்து பதிப்பித்து வெளியீடு செய்தார்.
திருமுறைப் பெருமை, சேத்திரத் திருவெண்பா, அருள்நெறித் திரட்டு, திக்கரையந்தாதி, திருவெழு கூற்றிருக்கை, தன்னை அந்தாதி, திருப்போசை வெண்பா, நாவலர் பிள்ளைத் தமிழ், கட்டுரைக் கோவை போன்ற நூல்களையும் பதிப்பித்து வெளியிட்டார்.
தொடர் மொழிக்கு ஒரு சொல், எதிர்சொற்கோவை, பாரத இதிகாசத்தில் வரும் பாத்திரங்களின் குணவியல்பு, காரைநகரில் சைவசமய வளர்ச்சி, உரைநடையாக்கம், மதிப்பீட்டுப் பயிற்சிக்கோவை – தமிழ் மொழி (கா.பொ.த. சாதாரண வகுப்பிற்குரியது) ஆகிய நூல்களை வெளியிட்டமை இவரின் ஆக்கத்திறமையை எடுத்தியம்பியது.
காரைநகர் சைவமகாசபை பொன்விழா மலர், காரைநகர் மணிவாசகர் சபை வெள்ளிவிழா மலர், காரைநகர் வியாவில் ஐயனார் கோயில் குமாபிகேஷமலர், சைவக் களஞ்சியம் போன்ற நூல்களின் தொகுப்பாசிரியராகவும் பணியாற்றினார்;.
12.12.2002இல் யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தத்துவ கலாநிதிப் பட்டம் (PhD) வழங்கப்பட்டது. 1995இல் இலங்கை கம்பன் கழகத்தினால் ‘மூதறிஞர்| என்னும் பட்டம் வழங்கப்பட்டது. 18.11.2001இல் வடக்கு அபிவிருத்தி புனர்வாழ்வு புனரமைப்பு, மற்றும் தமிழ் விவகாரங்கள் அமைச்சு நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் நடைபெற்ற மூத்த கலைஞர்கள் கௌரவிப்பின்போது ‘கலைஞானகேசரி’ என்ற பல்துறைக்கான பட்டம் வழங்கப்பட்டது. 04.11.2007இல் சர்வதேச இந்துக் குருமார் ஒன்றியத்தினால் ‘சிவாகம கிரியா பூஷணம்| என்னும் பட்டம் வழங்கப்பட்டது. 2008இல் காரைநகர் உதவி அரசாங்க அதிபர் பிரிவினரால் நடத்தப்பட்ட கலை இலக்கிய விழாவில் ‘கலைஞானச்சுடர்| என்னும் பட்டம் வழங்கப்பட்டது. 04.02.2006இல் திருவாவடுதுறை ஆதீனம் விருது வழங்கிக் கௌரவித்தது. வலி – கிழக்கு கோப்பாய் சைவசமய அருள்நெறி மன்றம் இவரது சமயப்பணியைப் பாராட்டி ‘அருட்சுடர்மணி| என்னும் பட்டம் வழங்கி கௌரவித்தது. திண்ணபுர அந்தாதி வெளியீட்டு விழாவில் ‘செந்தமிழ் ஞாயிறு| என்னும் பட்டமும் வழங்கப்பட்டது. பேராசிரியர் கனகசபாபதி நாகேஸ்வரனின் மணிவிழாக்குழுவினரால் ‘சமூகமாமணி| என்னும் பட்டமும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
பெயரையோ புகழையோ அவாவி நில்லாது மிக அமைதியான முறையில் வாழ்ந்த குருக்கள் ஐயா அவர்கள் சுந்தரேசப் பெருமானின் ஆலயம் உயர்வுக்கும், ‘ஈழத்துச் சிதம்பரம|; என்னும் பெயர் உலகெலாம் பரவி நிலைக்கவும், திருநெறி தமிழும் தெய்வச் சைவசமயமும் தழைக்கவும் அரிய பல தொண்டுகள் செய்த சிவசிறீ க. வைத்தீசுவரக்குருக்கள் அவர்கள் ஏப்ரல் மாதம் இருபத்திநான்காம் நாள் (24-04-2015) வெள்ளிக்கிழமை பூர்வபட்ச சப்தமி திதியில் அதிகாலை 3 மணிக்கு பிறவிப் பெருங்கடலை நீத்து ஈழத்துச் சிதம்பரத்தில் திருநடனம் செய்யும் சிவகாமசுந்தரி சமேத நடராசப் பெருமானின் பாதாரவிந்தங்களிலே சங்கமித்தார்.
No Responses to “ஈழத்துச் சிதம்பரத்தின் வளர்ச்சிக்காக அருந் தொண்டாற்றிய கலாநிதி, பண்டிதர் சிவஸ்ரீ க. வைத்தீசுவரக்குருக்கள்”