பழைய மாணவர் சங்க கனடா கிளையின் நான்காவது ஆண்டுப் பொதுக் கூட்டம் கனடா செல்வச்சந்நிதி முருகன் கோவில் திருமண மண்டபத்தில் (30-04-2016) அன்று சனிக்கிழமை பிற்பகல் 2:30 மணிக்கு நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்பிரல் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னதாக ஆண்டுப் பொதுக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்ற சங்க யாப்பு விதிக்கு அமைவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்பொதுக் கூட்டம் முன்னாள் இலங்கை பிரதி நிலஅளவையாளர் நாயகமும் சங்கத்தின் தலைவருமாகிய திரு.முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இருபத்தைந்து வரையான சங்கத்தின் உறுப்பினர்கள் இக் கூட்டத்திற்கு சமூகமளித்திருந்தனர். திரு. தம்பையா அம்பிகைபாகன் அவர்களின் கடவுள் வணக்கத்தைத் தொடர்ந்து எமது பாடசாலை சமூகத்தைச் சேர்ந்து அமரத்துவம் அடைந்தோரை நினைவு கூர்ந்தும் சபையில் அக வணக்கம் செலுத்தப்பட்டது.
அடுத்து அமரர் சங்கீதபூசணம் காரை ஆ. புண்ணியமூர்த்தி அவர்களினால் இசைக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டிருந்த ‘தாய் மலரடி பணிவோம்| எனத் தொடங்கும் கல்லூரிப் பண் ஒலிபரப்பப்பட்டபோது சபையினர் எழுந்து நின்று பாடசாலை அன்னைக்கு வணக்கம் செலுத்தினர்.
தலைவர் திரு.மு.வேலாயுதபிள்ளை அவர்கள் தமது தலைமை உரையில், சென்ற ஆண்டு சங்கம் பாடசாலையின் முக்கியமான தேவைகளை நிறைவு செய்ய உதவியதுடன் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையிலான உதவிகளையும் வழங்கி சிறப்பாக செயற்பட்டிருந்தமை குறித்து தமது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியிருந்ததுடன் இவற்றிற்கு மூலகாரணமாகவிருந்து ஆதரவளித்த சங்க உறுப்பினர்கள் நலன் விரும்பிகள் அனுசரணையாளர்கள் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். தாம் அண்மையில் பாடசாலைக்குச் சென்று அதிபர் திருமதி.வாசுகி தவபாலன், பதில் அதிபர் திருமதி.கலாநிதி சிவநேசன் மற்றும் பழைய மாணவர் சங்க நிர்வாகிகளைச் சந்தித்து கலந்துரையாடியமை குறித்த பல்வேறு விடயங்களையும் சபையில் பகிர்ந்துகொண்டார்.
தலைவர் உரையைத் தொடர்ந்து செயலாளர் திரு. கனக சிவகுமாரன் சென்ற பொதுக் கூட்ட அறிக்கையினையும், செயற்பாட்டு அறிக்கையினையும் சமர்ப்பித்து வாசித்திருந்தார். இவ்விரு அறிக்கைகளும் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
வரவு-செலவு அறிக்கையை உதவிப் பொருளாளர் திரு. நடராசா பிரகலாதீஸ்வரன் சமர்ப்பித்திருந்தார். இந்த வரவு செலவு அறிக்கையின் வடிவத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று சபை உறுப்பினர்கள் தெரிவித்த யோசனை சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் எதிர்வரும் காலங்களில் அவ்வடிவம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் சபையில் தெரிவிக்கப்பட்ட பின்னர் இந்த அறிக்கை சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
புதிய நிர்வாக சபைத் தெரிவினை தேர்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டடிருந்த சங்கத்தின் போசகர் சிவநெறிச் செல்வர் திரு.தி.விசுவலிங்கம் அவர்கள் நடத்தி வைத்தார். நிர்வாக சபையில் உள்ள பதினொரு வெற்றிடங்களுக்கும் போட்டியிட விரும்புவோரிடமிருந்து மூன்று வாரங்களுக்கு முன்னர் விண்ணப்பங்கள் கோரப்பட்டபோது, பதவிகள் ஒவ்வொன்றிற்கும் தலா ஒரு உறுப்பினர் வீதம் விண்ணப்பங்கள் கிடைத்திருப்பதாகத் தெரிவித்ததுடன் அவற்றின் விபரங்களையும் தேர்தல் அலுவலர் சபைக்குத் தெரியப்படுத்தியிருந்தார்.
இவ்விண்ணப்பங்கள் தொடர்பில் சபையிலிருந்து எவ்வித ஆட்சேபனையும் கிடைக்காதமையினால் குறிப்பிட்ட பதவிகளுக்கு விண்ணப்பித்த அனைவரும் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து போசகராக மீண்டும் சிவநெறிச்செல்வர் திரு.தி விசுவலிங்கம் அவர்களும் கணக்காய்வாளராக திரு.த.பரமானந்தராசா அவர்களும் ஒட்டாவா இணைப்பாளராக திருமதி.சந்திராதேவி முத்துராசா அவர்களும் மொன்றியல் இணைபபாளாராக திருமதி.செல்வதி ஸ்ரீகணேசர் அவர்களும் ஜக்கிய அமெரிக்கா இணைப்பாளராக திரு.கந்தையா தர்மராசா அவர்களும் சபையினால் நியமிக்கப்பட்டனர்.
நிர்வாக சபைக்குத் தெரிவான உறுப்பினர்களின் விபரம் வருமாறு:
தலைவர்: திரு.தம்பையா அம்பிகைபாகன்
உப-தலைவர்: திரு.நாகலிங்கம் குஞ்சிதபாதம்
செயலாளர்: திரு.கனகசுந்தரம் சிவகுமாரன்
உப-செயலாளர்: திருமதி. செல்வா இந்திராணி சித்திரவடிவேல்
பொருளாளர்: திரு. மாணிக்கம் கனகசபாபதி
உப-பொருளாளர்: திரு. திரு. நடராசா பிரகலாதீஸ்வரன்
நிர்வாக சபை உறுப்பினர்கள்:
திருமதி.கருணாவதி சுரேந்திரகுமார்
திருமதி.பிரபா ரவிச்சந்திரன்
திரு. சிவபாதசுந்தரம் கனகரட்ணம்
திரு. திருவேங்கடம் சந்திரசோதி
திரு. செல்வரத்தினம் சிவானந்தன்
போசகர்: சிவநெறிச்செல்வர்.தி.விசுவலிங்கம்
ஒட்டாவா பிரதிநிதி: திருமதி.சந்திராதேவி முத்துராசா
மொன்றியல் பிரதிநிதி: திருமதி.செல்வதி சிறிகணேசர்
ஜக்கிய அமெரிக்க இராச்சியம்: திரு.கந்தையா தர்மராசா
கணக்காய்வாளர்: திரு.தம்பிஐயா பரமானந்தராசா
புதிய தலைவர் திரு.தம்பையா அம்பிகைபாகன் அவர்கள் பதவியை ஏற்றுக்கொண்டு உரையாற்றுகையில் தாம் கல்வி கற்ற காலத்தின் நினைவகளை பகிர்ந்துகொண்டதுடன் தன்னை நல்லாசிரியர் என்ற பெருமைக்குரியவராக உருவாக்கிய பாடசாiiயின் வளர்ச்சியில் ஈடுபடுவதற்கான வாய்ப்பாகத் தாம் தலைவராக பதவியேற்றமை குறித்து மகிழ்வதாகத் தெரிவித்தார். மேலும் அவர் தமது உரையில், கல்லூரியை உன்னதமான நிலைக்கு கொண்டு வருவதில் அயராது உழைத்த வெள்ளி விழா அதிபர் உத்தமர் அமரர் தியாகராசாவின் அரும் பணிகளைக் குறிப்பிட்டு அன்னாரை நினைவு கூர்ந்தார்.
அடுத்ததாக, பழைய நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தும் புதிய நிர்வாகத்தை வாழ்த்தியும் கல்லூரி அதிபர் திருமதி வாசுகி தவபாலன,பதில் அதிபர் திருமதி கலாநிதி சிவநேசன் ஆகியோரால் அனுப்பிவைக்கப்பட்டிருந்த செய்திகள் செயலாளரினால் வாசிக்கப்பட்டன.
அடுத்து யாப்புத் திருத்தப் பிரேரணை சபையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. சங்க யாப்புக்கு நிர்வாகத்தினால் பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள் சில நிபந்தனைகளுடன் பொதுச் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஆயுட்கால சந்தா மற்றும் சங்கத்திற்கான இணை உறுப்பினர்கள் (Associate Members) தொடர்பில் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் சங்க நலனிற்கு பாதகமில்லாத வகையில் அமைந்துள்ளதா என்பது குறித்து ஆராய்ந்து தீர்மானித்த பின்னர் செயற்படுத்துவதற்கான அதிகாரத்தினை பொதுச்சபை நிர்வாகத்திற்கு வழங்கியிருந்தது.
சங்க நிர்வாக சபையின் பதவிக்காலம் ஒர் ஆண்டுக்குப் பதிலாக இரண்டு ஆண்டுகளாக இருக்கவேண்டும் என்ற தனிநபர் பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்ட அதேவேளையில், ஒவ்வொரு ஆண்டும் பொதுச் சபை ஏதோ ஒரு வகையில் கூட்டப்படுதல் வேண்டும் எனவும் வரவு-செலவு அறிக்கை செயற்பாட்டு அறிக்கை என்பன பொதுச் சபைக்கு சமர்ப்பிக்கப்படல் வேண்டும் எனவும் பொதச் சபை தீர்மானித்தது.
செயலாளர் திரு.கனக சிவகுமாரன் இறுதியில் கூட்டத்தை சிறப்பாக நடத்துவதற்கு ஒத்துழைத்தும் உதவிகள் வழங்கியும் ஊக்கிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து உரையாற்றினார். முன்னைய தலைவர் திரு.முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை அவர்கள் பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை ஏனையோர் பாராட்டும் வண்ணம் துரிதமான வளர்ச்சியைப் பெற்றுக்கொள்ள உழைத்திருந்தார் என பாராட்டியதுடன் அவரது சேவை தொடர்ந்தும் சங்கத்திற்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டு உரையாற்றிய கனக சிவகுமாரன் புதிய தலைவர் திரு.அம்பிகைபாகன் அவர்களையும் வரவேற்றுக்கொண்டு நல்லாசிரியர் என்ற பெயர்பெற்றவரும் சமூக அக்கறை கொண்டு விளங்குபவருமாகிய அவரது தலைமையில் சங்கம் பல முன்னேற்றகரமான திட்டங்களை செயற்படுத்தும் எனவும் மேலும் தனது நம்பிக்கையினை வெளியிட்டார்.
நிறைவாக போசகர் சிவநெறிச்செல்வர் திரு.தி.விசுவலிங்கம் அவர்களின் திருமுறை ஓதலுடன் கூட்டம் இனிதே முடிவுக்கு வந்தது.
பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையினை ஆரம்பிப்பது முதல் இன்று வரை சங்கத்தினைச் சீரிய முறையில் வழிநடத்துவதில் முதுகெலும்பாக அயராது உழைத்துவரும் செயலாளர் திரு.கனக.சிவகுமாரன் அவர்களை இச்சந்தர்ப்பத்தில் பாராட்டாமல் இருக்க முடியாது.
கூட்ட நடவடிக்கைகளின் போது எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.
No Responses to “பழைய மாணவர் சங்க கனடா கிளையின் ஆண்டுப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும்”