காரைநகர் இந்துக் கல்லூரியின் புலம் பெயர் தேச பழைய மாணவர்களுடான கலந்துரையாடல் 04.01.2023 புதன் கிழமை பி.ப 2.00 மணிக்கு கல்லூரியின் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரி அதிபர் திரு அ.ஜெகதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. கல்லூரியின் சங்கீத ஆசிரியை திருமதி மனோகரன் கமலவாணியின் தேவார பாராயணத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
கனடா பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் தலைவர் திரு மு.வேலாயுதபிள்ளை, பொருளாளர் திரு மா.கனகசபாபதி, கொழும்பு பழைய மாணவர் சங்கத் தலைவர் திரு தி.மார்க்கண்டு ஆகியோரின் மறைவிற்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. கல்லூரி அதிபர் வரவேற்பு உரையுடன் கூடிய தலைமை உரையை நிகழ்த்தினார்.
அதிபர் தனது உரையில் அண்மைக் காலங்களில் கல்லூரி மாணவர்கள் பொதுப்பரீட்சைகளில் பெற்றுக் கொண்ட பெறுபேறுகள் உயர்ந்து செல்வதை Power Point விளக்க காட்சியின் உதவியுடன் எடுத்தரைத்தார். க.பொ.த உயர்தரத்தில் கற்பதற்காக கடந்த மூன்று ஆண்டுகளாக மாணவர்கள் வேறு பாடசாலைக்கு செல்வதை தவிர்த்து எமது கல்லூரியில் தொடர்ந்து கற்பதாக தெரிவித்தார். புலம் பெயர் தேசங்களில் விசேடமாக கனடாவில் வாழும் பழைய மாணவர்கள் பின்தங்கிய மாணவர்களின் கல்வியை மேம்படுத்த மேலதிக வகுப்புக்களை நடாத்துதல், 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்று கல்லூரியில் கற்கும் மாணவர்களுக்கான உதவுதொகை வழங்குதல், மாகாண,தேசிய மட்டங்களில் சாதனை படைத்த மாணவர்களுக்கான பரிசில் வழங்குதல், க.பொ.த. உயர்தர, சாதாரண தர பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்றவர்களுக்கென பரிசில்கள் வழங்குதல், ஞாபகார்த்த பரிசில்கள் மற்றும் பல்கலைக்கழங்களுக்கு தெரிவாகும் வறிய மாணவர்களுக்கு மாதாந்த நிதியுதவி வழங்குதல் என்பன மாணவர் கற்பதற்கான ஊக்குவிப்பாக அமைகின்றது எனக் குறிப்பிட்டதுடன் கனடா பழைய மாணவர் சங்கம் கல்லூரியின் வளர்ச்சியில் கல்வி அடைவு மட்டத்தை உயர்த்துவதற்கு வழங்கும் பாரிய பங்களிப்பு பராட்டுவதற்குரியது எனக் குறிப்பிட்டார்.
பழைய மாணவர் சங்கத்தின் (தாய்சங்கம்) உப தலைவர் கலாபூசணம் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை கல்வியின் முக்கியம், இனம், சமுதாயம் சிறந்த கல்வியை பெற்றிட சமூகம், பழைய மாணவர் சங்கங்கள் வினைத்திறனுடன் பணியாற்ற வேண்டியது அவசியம் எனக் குறிப்பிட்டார்.
திரு S.K. சதாசிவம் அவர்கள் உரையாற்றுகையில், பழைய மாணவர் சங்கங்களின் ஆரம்பகாலங்கள், அண்மைய காலங்களில் பழைய மாணவர் சங்கங்களின் பங்களிப்பு விசேடமாக கனடா பழைய மாணவர் சங்கத்தின் நிதி ஏற்பாடுகள் கல்லூரி சீராக பயணிப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது எனவும் கடந்த காலங்களில் விளையாட்டு மைதான அபிவிருத்திக்கு மேற்கொண்ட முயற்சிகள் தொடர்பாகவும் எதிர் காலத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய வேலைத்திட்டங்களுக்கு நிதி ஆதரவு வழங்குமாறும் தற்கால கல்வி போதனை முறை மாற்றங்களுக்குகேற்ப கல்வி கற்பிக்க தேவையான பௌதீக வளங்களை பெற்றுக் கொள்ள ஆவன செய்யுமாறும் வேண்டியதுடன் எதிர்வரும் ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தபடவுள்ள கல்வி நிருவாக கட்டமைப்பு மாற்றங்கள் தொடர்பாக கல்விச் சமூகம் கடந்தகால அனுபங்களின் அடிபடையில் சிந்திக்கவேண்டும் எனவும் கடந்த 30 ஆண்டு காலமாக நடைமுறையில் உள்ள கல்வி நிருவாக கட்டமைப்பு காரைநகரின் கல்விச் செயற்பாடுகளுக்காக ஊக்கம் அளிப்பதாக அன்றி சுமையாக உள்ளது எனவும் குறிப்பிட்டார்.
கனடா பழைய மாணவர் சங்க தலைவர் திரு நா.குஞ்சிதபாதம் கல்லூரியின் கல்வி வளர்ச்சியில் பங்குபற்ற கிடைத்த சந்தர்ப்பத்தை பெரும் பேறாக கருதுவதாக தெரிவித்ததுடன் எமது சங்க நிர்வாக சபை உறுப்பினர்களின் அர்ப்பணிப்பு மிக்க அயராத உழைப்புக்கு கனடாவில் பழைய மாணவர்கள் கரம் கொடுப்பதாகவும் தொடர்ந்து இப்பணி முன் எடுத்துச் செல்லப்படும் எனவும் தெரிவித்தார்.
ஒய்வு நிலை அதிபர் திரு நா.செல்வரத்தினம் ‘எனது ஊர் காரைநகர்’ இன் தொகுப்பாளர் திரு தீசன் திரவியநாதன, திரு. வி.பரந்தாமன் (கனடா) ஆகியோர் கல்லூரியின் கல்வி வளர்ச்சிக்கு ஆற்ற வேண்டிய பணிகள் பற்றி குறிப்பிட்டனர்.
பழைய மாணவர் சங்க (தாய்ச் சங்கம்) செயலாளர் திரு க.நிமலதாசன் நன்றி உரையில் தமிழர் பிரதேசங்களில் நிகழ்ந்துகொண்டு இருக்கும் நெறிபிறழ்வு சம்பவங்களில் மாணவர்கள் பங்கு கொள்வதை தவிர்பதற்காக பழைய மாணவர்களும் பழைய மாணவர்சங்கங்களும் பங்களிப்பு செய்ய வேண்டியதன் முக்கியதுவத்தையும் இல்லாவிடின் காரைநகர் கிராமத்தின் பெருமையை எதிர்காலத்தில் தக்க வைப்பது இயலாத விடயமாகிவிடும் எனவும் தெரிவித்ததுடன். கனடா பழைய மாணவர் சங்கம், கனடா காரை கலாசார மன்றம், காரை நலன்புரிச்சங்கம் (லண்டன்), காரைநகர் அபிவருத்தியில் பங்கு கொள்ளும் அமைப்புக்கள், அதிக எண்ணிக்கையான பழைய மாணவர்களினால் தனிப்பட்ட ரீதியில் வழங்கப்படும் உதவிகள் என்பனற்றுக்கு கல்லூரியின் சார்பில் நன்றி தெரிவித்தார்.
பேராசிரியர் ஆறுமுகம் நல்லநாதன் அவர்களும், யாழ் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி யோ.வீரமங்கைஸ்ரலினா அவர்களும், லண்டன், ஜேர்மனி, பிரான்ஸ், அவுஸ்ரேலியா, சுவிற்ஸலாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வதியும் பழைய மாணவர்கள் இந் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.
இந்நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள
No Responses to “காரைநகர் இந்துக் கல்லூரியின் புலம்பெயர் தேச பழைய மாணவர்களுடான கலந்துரையாடலின்போது பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் பாரிய பங்களிப்பிற்கு அதிபர் பாராட்டு”