காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினால் வெளியிடப்பெற்ற நாட்காட்டியினை வெளியிட்டு வைத்த சம்பிரதாயபூர்வ நிகழ்வு சென்ற ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு ஸ்காபுரோ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் ஆகியோரது சமூகத்துடன் வெகு சிறப்பாக நடைபெற்றது. விநாயகப் பெருமானுக்கு விசேட பூசை வழிபாட்டினைத் தொடர்ந்து தமிழ் ஆர்வலர் கவிஞர் திருமதி கோதை அமுதன் அவர்கள் சிறந்த அறிமுக உரையினை நிகழ்த்தியிருந்தார்.
நாட்காட்டியை வெளியிடுவது என்பது சிறிய விடயமாகத் தோற்றலாம். ஆனால் இங்கே வெளியிடப்படுகின்ற நாட்காட்டியில் நல்ல பல விடயங்கள் பொதிந்துள்ளது என்பதை நீங்கள் நாட்காட்டியினை வீட்டிற்கு எடுத்துச் சென்று பார்க்கும்போது உணர்ந்துகொள்வீர்கள். நீங்கள் படித்த பாடசாலை, இப்பாடசாலையின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் உழைத்த பெரியார்கள், உங்கள் ஊரின் முக்கியமான அடையாளங்கள் என்பவற்றை இந்நாட்காட்டியிலே அழகுறப் பதித்து அவற்றைப் பார்க்கின்றபோதெல்லாம் பாடசாலையினதும் ஊரினதும் நினைவுகள் வருவதுடன் ஊருக்கு அழைத்துச் செல்கின்ற உணர்வும் ஏற்படக்கூடிய வகையில் இந்நாட்காட்டி அழகுற அமைக்கப்பட்டுள்ளது. ஒரு நாட்காட்டியை இப்படியும் பயன்படுத்தமுடியும் என்பதற்கு இதை வெளியிடுகின்ற பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை எடுத்துக்காட்டானதாகும். அந்த வகையில் இந்நாட்காட்டியினை வெளியிட்டு வைக்கின்ற இச்சங்கத்தினரும் இவ்வெளியீட்டிற்கு அனுசரணை வழங்கி உதவிய கல்லூரியின் பழைய மாணவனும் வீடு விற்பனை முகவருமாகிய திரு.ஜெயகுமார் நடராசா அவர்களும் பாராட்டிற்குரியவர்களாகும் என திருமதி கோதை அமுதன் தமது அறிமுக உரையில் தெரிவித்தார். நாட்காட்டியின் 13 பக்கங்களிலுள்ள படங்களைக் காண்பித்து ஒவ்வொரு படங்களிலும் பொதிந்துள்ள அர்த்தங்களை சுவைபட எடுத்துக்கூறியபோது சபையினர் ஆவலோடு செவிமடுத்திருந்ததை அவதானிக்முடிந்தது. வரசித்தி விநாயகர் ஆலய குரு கலாநிதி சோமாஸ்கந்த குருக்கள் அவர்கள் ஆசியுரை வழங்கினார்.
காரை.இந்துவின் மூத்த பழைய மாணவனான ஓய்வுநிலை நீதிமன்ற மொழிபெயர்ப்பாளர் திரு.நமசிவாயம் அம்பலவாணர் அவர்கள் பழைய மாணவர் சங்கத்தின் உதவிச் செயலாளர் திரு.சிற்றம்பலம் சச்சிதானந்தன் அவர்களிடமிருந்து நாட்காட்டியின் முதற்பிரதியைப் பெற்றுக்கொண்டு வெளியிட்டு வைத்தார்.
பழைய மாணவன் கணக்காளர் திரு.வேலுப்பிள்ளை இராஜேந்திரம், சங்கத்தின் நேச அமைப்பான கனடா-காரை கலாசார மன்றத்தின் தலைவர் கணக்காளர் திரு.சிவசம்பு சிவநாதன், பழைய மாணவி பல்வைத்திய நிபுணர் Dr.தவமணி ஸ்ரீஸ்கந்தராசா, பழைய மாணவி நடன ஆசிரியை திருமதி ஞானாம்பிகை குணரத்தினம், பழைய மாணவன் நாதஸ்வரக் கலைஞர் கணேசன் பவப்பிரியன் (பவன்) ஆகியோர் சிறப்புப் பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர்.
நாட்காட்டியின் வெளியீட்டிற்கு முழுமையான அனுசரணை வழங்கியதுடன் வெளியீட்டு நிகழ்விற்கான அனுசரணையினையும் வழங்கி உதவிய வீடு விற்பனை முகவரும் அடமானக் கடன் முகவருமாகிய திரு.நடராசா ஜெயகுமார், அறிமுக உரையினை வழங்கிய தமிழறிஞர் திருமதி கோதை அமுதன், நிகழ்வினை ஆலயத்தில் நடாத்துவதற்கு அனுமதி தந்து பல்லாற்றாலும் ஒத்துழைத்த ஆலய குருமார் சிறப்பாக விஐயகுமாரக் குருக்கள் அவர்கள், நாட்காட்டியை அழகுற வடிவமைத்து உதவிய காரை.இந்துவின் பழைய மாணவன் திரு.பா.ஞானபண்டிதன், நாட்காட்டியில் இடம்பெற்றுள்ள படங்களைத் தந்து ஊக்குவித்த கல்லூரியின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன், தாய்ச் சங்கத்தின் செயலாளர் திரு.நிமலதாசன் கணபதிப்பிள்ளை, நாட்காட்டியின் முதற் பிரதி, சிறப்புப் பிரதி ஆகியனவற்றைப் பெற்றுக்கொண்டோர், இந்நிகழ்வினை சிறந்தமுறையில் காணொளியாக்கி உதவிய “ஒருத்தி” திரைப்பட இயக்குனர் திரு.P.S.சுதாகரன், நிகழ்விற்கு சமூகமளித்தவர்கள் அனைவருக்கும் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் கனக சிவகுமாரன் நன்றி தெரிவித்து உரையாற்றினார்.
நிகழ்வின் புகைப்படங்களை கீழே உள்ள இணைப்பினை அழுத்திப் பார்வையிடமுடியும்:
https://photos.app.goo.gl/4paBDAbE5Gnu5oXm7
படத்தொகுப்பிலுள்ள ஒரு படத்தின்மீது அழுத்தி Slide Shaw ஊடாகவும் அனைத்துப் படங்களையும் தெளிவாகப் பார்வையிடலாம்:
நிகழ்வின் காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது:
No Responses to “பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் நாட்காட்டி வெளியீட்டு நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.”