சிவத்தமிழ்ச்செல்வி பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் பிறந்த நாளின் போது அறக்கொடை நிறுவனத்தினால் ஆண்டுதோறும் சான்றோர்கள் ‘சிவத்தமிழ்’ என்னும் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாண்டு அன்னையின் 98வது பிறந்த நாளில் நான்கு சான்றோர்கள் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளனர். இந்த நால்வருள் ஒருவராக காரைநகர் இந்துக் கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும், கல்லூரியின் ஓய்வுநிலை அதிபரும், காரைநகர் மணிவாசகர் சபையின் தலைவருமாகிய பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்கள் இடம்பெற்றுள்ளார்.
தெல்லிப்பளை துர்க்கை அம்மன் தேவஸ்தானத்திலுள்ள அன்னபூரணி மண்டபத்தில் 7-01-2023 சனிக்கிழமை நடைபெற்ற அன்னையின் 98வது பிறந்த நாள் அறக்கொடை விழாவின்போது பண்டிதர் வேலாயுதபிள்ளை அவர்களிற்கான விருது வழங்கப்பட்டிருந்தது. கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவின் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்த வடக்கு மாகாண அரசின் பிரதம செயலாளர் திரு.உமாமகேஸ்வரன் அவர்கள் இவருக்கான விருதினை வழங்கி மதிப்பளித்தார்.
பண்டிதர் இவ்விருதினைப் பெற்றமை குறித்து அவரைப் பாராட்டிக் கௌரவித்த நிகழ்வு கல்லூரியின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்களின் தலைமையில் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றிருந்தது. பண்டிதர் வேலாயுதபிள்ளை அவர்களும் அவரது துணைவியார் திருமதி விஜயலட்சுமி வேலாயுதபிள்ளை அவர்களும் முறையே அதிபரினாலும் உப-அதிபரினாலும் பொன்னாடை, மலர்மாலை என்பன அணிவிக்கப்பட்டிருந்தனர். அதிபர் திரு.ஜெகதீஸ்வரன் அவர்களும், கல்லூரியின் ஆசிரியை திருமதி சிவரூபி சிவரங்கன் அவர்களும் வாழ்த்துரை வழங்கியதைத் தொடர்ந்து பண்டிதர் வேலாயுதபிள்ளை அவர்கள் ஏற்புரை நிகழ்த்தினார்.
பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையும் பண்டிதர் வேலாயுதபிள்ளை அவர்களை பாராட்டி வாழ்த்துவதில் பேருவகையடைகின்றது.
நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன:
No Responses to “‘சிவத்தமிழ்’ விருது பெற்ற காரை.இந்துவின் ஓய்வுநிலை அதிபர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்கள் கல்லூரிச் சமூகத்தினால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.”