சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரின் ஏற்பாட்டில் கலாநிதி ஆ. தியாகராசா அவர்களின் நூற்றாண்டு நிறைவை ஒட்டிய நூற்றாண்டு விழாவும் தியாகச்சுடர் நினைவுத் தொகுப்பு வெளியீடும்.
தியாகச்சுடர் நினைவுத் தொகுப்புக்கான ஆக்கங்கள் ஆர்வலர்களிடமிருந்து கோரப்படுகின்றன.
பயன்தூக்கார் செய்த உதவி
நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது – அதிகாரம் செய்ந்நன்றி அறிதல்: 103
காரைமாதாவின் மடிபூத்த காரை வாழ் மற்றும் புலம்பெயர்ந்து வாழும் அறிஞர்களே! பொதுச் சேவையாளர்களே! எழுத்தாளர்களே! நம் மண்ணின் பெருமைக்கு வித்திட்ட ஆன்மீகவாதிகள், விஞ்ஞானிகள், கல்விமான்கள், அரசியலாளர்கள், வள்ளல்கள் ஆகியோரில் ஒருவரும் பல்லாயிரம் மாணாக்கரின் வாழ்வில் ஒளியேற்றியவருமான கலாநிதி. ஆ. தியாகராசா அவர்களது பன்முக ஆளுமையை நம் சந்ததியினரின் அறிதலுக்காகப் பதிவு செய்யவேண்டிய கடப்பாடு எமக்கு உண்டு.
இதன் ஒரு அங்கமாக அன்னாரின் நூற்றாண்டு விழாவை எதிர்வரும் ஆங்கில ஆடி மாதம் 17ம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 16.00 மணிக்கு சுவிஸ் மண்ணில் St.Josef Pfarramt Röntgenstrasse 80, 8005 Zürich மண்டபத்தில் நாடாத்த தீரமானித்துள்ளோம். அவ்விழாவின் போது அவரது வரலாறு, சேவைகள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளும் கவிதைகளும் நினைவுக் குறிப்புகளும் அடங்கிய தியாகச்சுடர் என்ற நினைவுத் தொகுப்பு நூலை வெளியிடவும் எமது சபை தீர்மானித்துள்ளது. சுவிஸ்-காரை அபிவிருத்திச் சபையினரின் மொழி, கல்வி மற்றும் கலை மேம்பாட்டுக் குழுவினரால் தொகுக்கப்படவுள்ள இந்நூலை கனதியான வரலாற்று ஆவணமாக மலரச் செய்வதில் தங்களது பங்களிப்பையும் நாடிநிற்கிறோம்.
அன்னாரின் வாழ்க்கை வரலாறு, ஆசிரியப் பணி, அதிபர் சேவை, அரசியற் பணி, பொருளாதார அபிவிருத்தி, மற்றும் அவரது அரசியல், கல்வி மற்றும் பொருளாதாரச் சிந்தனைகள் எனப் பல கோணங்களிலும் கட்டுரைகள் அமையலாம். அன்னாருடன் நோரில் பழகியவர்கள், அவரிடம் படித்தவர்கள் நினைவுக் குறிப்புகளையும் வழங்கலாம். அன்னாரின் பணிகளை அவரது சமகால யாதார்த்தங்களுடன் ஒப்ப நோக்கிய ஆய்வுகளும் கவிதைகளும் வரவேற்கப்படுகின்றன.
தவிர்க்க முடியாத காரணங்களால் மிகக்குறுகிய கால இடைவெளியில் இவ்விழாவும் தியாகச்சுடர் நினைவுத் தொகுப்பு வெளியீடும் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது. எனவே தயை கூர்ந்து சிரமம் பாராமல் எதிர் வரும் 7ம் திகதிக்கு முன்பதாக தங்களது ஆக்கங்களை அனுப்பி நமதூரின் புனிதமான பணிகளிலொன்றான வரலாற்று ஆவணப் படுத்தலில் பங்காளர்களாகுமாறு ஊரவர்கள் என்ற உறவின் பாற்பட்ட அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.
இவ்வறிவித்தலை தனிப்பட்ட அழைப்பாக, வேண்டுகோளாகக் கருதி வினையாற்றுமாறு எமது ஊர் அறிஞர்கள், சமூக சேவையாளர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரை வேண்டிக்கொள்கிறோம். பிறவூரைச் சார்ந்தோருடைய ஆக்கங்களும் வரவேற்படுகின்றன.
ஆக்கங்களை அனுப்பவும், மேலதிக விபரங்களை அறியவும் பின்வரும் மின்னஞ்சல் முகவரிகளுக்குத் தொடர்பு கொள்ளுங்கள். swisskarai2004@gmail.com மற்றும் eeveraa2000@gmail.com
நன்றி.
நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்.
“இன்று நாம் செய்யும் நற்கருமங்களே நாட்டின் நாளைய வரலாறு”
இங்ஙனம்.
சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையின் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழு செயற்குழு உறுப்பினர்கள் சுவிஸ் வாழ் காரை மக்கள்.
29 ஆனி 2016
No Responses to “சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரின் ஏற்பாட்டில் கலாநிதி ஆ. தியாகராசா அவர்களின் நூற்றாண்டு நிறைவை ஒட்டிய நூற்றாண்டு விழாவும் தியாகச்சுடர் நினைவுத் தொகுப்பு வெளியீடும்”