காரைநகர் இந்துக் கல்லூரியில் கடந்த ஜுலை 4, 2016 அன்று நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவும் நிறுவனர் தினமும் நிகழ்வில் ஸ்ரீமான் முத்து சயம்பு அவர்களின் நினைவுப் பேருரையை கல்லூரியின் பழைய மாணவரும், கல்லூரியின் ஓய்வுநிலை அதிபருமாகிய பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்கள் நிகழ்த்தியிருந்தார்.
முழுமையான ஸ்ரீமான் முத்து சயம்பு அவர்களின் நினைவுப் பேருரையை இங்கே தருகின்றோம்.
காரைநகர் இந்துக் கல்லூரியின் பரிசளிப்பு விழாவும் நிறுவுனர் தினமும்
நிறுவுநர் ஸ்ரீமான் முத்து சயம்பு நினைவுப் பேருரை
“போற்றி ஓம் நமசிவாய சயசய போற்றி” என்று எம் பெருமானை வழுத்திக்கொண்டு இன்றைய பரிசளிப்பு விழாவிற்கு தலைமை தாங்கிக் கொண்டிருக்கும் கல்லூரி அதிபர் திருமதி கலாநிதி சிவனேசன் அவர்களே! கல்லூரித் தலைமையை அலங்கரித்துக் கொண்டிருக்கும் திருமதி வாசுகி தவபாலன் அவர்களே! பிரதம விருந்தினராக வருகை தந்திருக்கும் வடமாகாண சிறுவர் நன்னடத்தை ஆணையாளர் திரு தி. விஸ்வரூபன் அவர்களே! சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் காரைநகர் கோட்டக்கல்வி அதிகாரி திரு ஆ. குமரேசமூர்த்தி அவர்களே! ஆற்றல் மிகு அயற் பாடசாலை அதிபர்களே! தகைசார் ஆசிரியர்களே! பற்றுறுதிமிக்க பழைய மாணவர்களே! அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களே! புலம்பெயர் நாடுகளின் பழைய மாணவர்களே! மதி நலம் மிக்க மாணவ மணிகளே! பெற்றோர்களே! உங்கள் அனைவருக்கும் அன்பு கனிந்த வணக்கங்கள்.
125 ஆண்டுகளைக் கடந்து நல்லறிவைப் புகட்டும் கல்லூரி அன்னை தனது செல்வங்களுக்கு இன்று பரிசளிப்பு நடைபெற இருப்பதையிட்டு பூரித்து நிற்கின்றாள். சான்றோன் எனக்கேட்ட தாய் அல்லவா அவள். இன்றைய பரிசளிப்பு நாள் கல்லூரி வரலாற்றின் பொன்னாள். இத்தகைய பொன்னாளை சயம்பு அவர்களின் காலத்திலிருந்து கண்டுகளித்து வருகின்றாள். பல பரிசளிப்பு விழாக்களை நடாத்தி மகிழ்ந்த என்னையும் கௌரவ விருந்தினாராக அழைத்து ஸ்தாபகர் நினைவுப் பேருரை நிகழ்த்துமாறு வேண்டிய கல்லூரிச் சமூகத்திற்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டு சீமான் முத்து சயம்பு அவர்களின் நினைவுப் பேருரையைத் தொடங்குகின்றேன்.
அன்று 1988ஆம் ஆண்டு. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி. இன்று 2016ஆம் ஆண்டு. 21ஆம் நூற்றாண்டின் முற்பகுதி. அன்று ஆங்கிலேயர் ஆட்சி. ஆட்சி மொழி ஆங்கிலம். கிறிஸ்தவ மதம் வளர்ந்த காலம், சைவம் நீறுபூத்த நெருப்புப் போல மறைந்திருந்த காலம். சைவசமயம் கலாசாரத்தைப் பின்பற்ற முடியாத சூழ்நிலை. அரச பதவி உயர்படிப்பு பெற, ஆங்கில மொழி கற்று கிறிஸ்தவ மதம் தழுவியவர்களாக இருக்க வேண்டும். இவ்வேளையில் விடிவெள்ளியாக தோன்றியவரே ஆறுமுகநாவலர்.
“நல்லை நகர் நாவலர் தோன்றிலரேல் சொல்லு தமிழ் எங்கே சுருதி எங்கே எல்லவரும் ஏத்து ஆகமங்கள் எங்கே?..………
என்றெல்லாம் போற்றப்பட்டவர் நாவலர்.
இத்தகைய நாவலருக்குப் பிறகு அருணாசலம் தான் என்று முற்றுப்புள்ளி வைத்து பாராட்டியவர் நாவலரின் தமையனார் மகன் ஸ்ரீமத் த. கைலாசபிள்ளை அவர்கள். அந்த அருணாசலம் வேறு யாருமல்லர். காரைமண் பெற்றெடுத்த பெருமகன். சைவ ஆசிரியர் ஆசிரிய பயிற்சி முடிப்பதற்கு முதன் முதலில் போதனா பாடசாலையை உருவாக்கிய பெருமைக்குரியவர். இவர் தம் ஊராம் காரைநகரில் சைவ ஆங்கில பாடசாலை அமைக்க வேண்டிய அவசிய நிலையை உணர்ந்து செயற்பட்டார். காரைநகர் மாப்பாணவூரியைச் சேர்ந்த கந்தப்பர் இலட்சுமணர், சிதம்பரப்பிள்ளை கந்தப்பு, மு. கோவிந்தபிள்ளை அவர்களுடன் தொடர்பு கொண்டார்.நல்லூர் முத்திரைச் சந்தியைச் சேர்ந்தவரும் சைவப்பற்றும் ஆங்கிலப் புலமையும் பெற்றவருமான முத்து சயம்பு அவர்களை ஆசானாக அழைத்து வந்தார்.
காரைநகர் புரவலர் மு. கோவிந்தபிள்ளை அவர்களின் சொந்த நிலத்தில் கிடுகுக் கொட்டில் அமைத்து 1888ஆம் ஆண்டு ஆவணித் திங்களில் இந்து ஆங்கிலப் பாடசாலை எனும் பெயரில் முத்து சயம்பர் அவர்களை ஆசிரியராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையே காரைநகர் இந்துக் கல்லூரி எனும் இப்பாடசாலையாகும்.
கந்தர் இலட்சுமணர் அவர்கள் காரைநகர் மாப்பாணவூரியைச் சேர்ந்தவர். அவரின் பாரியார் யாழ்ப்பாணம் கந்தர்மடத்தைச் சேர்ந்தவர். இலட்சுமணரின் பாரியாரின் மூத்த சகோதரனின் மகனே சயம்பு. இலட்சுமணர் தொடர்பாலும் சயம்பு உபாத்தியாயர் காரைநகருக்கு வரலாயினார். சயம்பு அவர்கள் 1866ஆம் ஆண்டு பிறந்தார் என்றும் நல்லூர் சாதனா பாடசாலையில் ஆரம்பக்கல்வியையும் சென்ஜோன்ஸ் கல்லூரியில் ஆங்கிலக் கல்வியையும் கற்றார் என்று அறிய முடிகின்றது.
சைவப்பிள்ளைகளின் அறிவுப் பசியைப் போக்க முத்து சயம்பு ஆசிரியராகப் பணி புரியத் தொடங்கினார். நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்ச்சியடையத் தொடங்கியது. இந்து ஆரம்ப பாடசாலை. திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் ஆங்கில வித்தியாலயம் எனப்பெயர் மாற்றம் பெற்றது. இதன்மூலம் சயம்பு அவர்களின் சமயப் பற்றையும் விசுவாசத்தையும் அறியமுடிகின்றது. கல்லூரிக் கீதம் பாடிய முன்னாள் இக் கல்லூரி ஆசிரியர் திரு நா. கனகசுந்தரம் அவர்கள் அக் கீதத்தில் திருஞானசம்பந்த வித்தியாலயம் பற்றிக் குறிப்பிடும்போது
“உவமையில்லாததோர் உமையவள் ஞானத்தை உண்டருள் மதலையின்
உயர் பெயர் தாங்கும் நம் (கல்லூரி)” என்று பாடியமை குறிப்பிடத்தக்கதொன்றாகும்.
1905ம் ஆண்டளவில் வித்தியாலயம் துரித வளர்ச்சி. இதனால் மாணவர் தொகை எழுச்சி, இடம் பற்றாக்குறை காரணமாக பாடசாலைக்கென ஒரு மண்டபமும் இரு அறை கொண்ட வகுப்பறையும் கட்டப்பட்டது. அக் காலத்தில் யாழ்ப்பாணம் அரசாங்க அதிபராக விளங்கிய திரு று. துவைனம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
1911 ஆம் ஆண்டில் மாணவர் தொகை அதிகரிக்க வகுப்புகளும் அதிகரித்தன. தனியொருவரால் நிர்வகிக்க முடியாத சூழலில் மனேஜரையும் தலைமை ஆசிரியரையும் உதவி ஆசிரியர்களையும் நியமனம் செய்தனர். சயம்பர் உள்ளுர் மனேஜராகவும், ஆசிரியராகவும் பணிபுரிந்தார். 1912ஆம் ஆண்டு வித்தியாலத்தின் வெள்ளி விழா இவர் காலத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
தன் பிள்ளை போல் பாதுகாத்த பாடசாலையை ஒரு நல்ல சபையிடம் ஒப்படைக்க விரும்பிய சயம்பு அவர்கள் 1918ஆம் ஆண்டு பாடசாலையின் நிர்வாகப் பொறுப்பை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிகார சபையிடம் ஒப்படைத்தார். அதிகாரசபையின் விருப்பப்படி உள்ளுர் மனேஜராக தொடர்ந்தும் பணியாற்றினார்.
சயம்பு உபாத்தியாயர் தான் வேறு, பாடசாலை வேறு என்று கருதியவர் அல்லர். பாடசாலையுடன் இரண்டறக் கலந்த நிலையில் சேவையாற்றி வந்த பெரியார் ஆவார். அதிபராக, மனேஜராக கடமையாற்றிய போதும் கற்பித்தல் பணியை கைவிடாதவர். காலை, மாலை வேளைகளில் பிள்ளைகளை வீட்டிற்கு அழைத்து இலவசமாகக் கற்பித்தார். “அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி” என்பதற்கேற்ப அதிபர்கள் நிர்வாகப் பொறுப்போடு மட்டும் நின்றுவிடாது கற்பித்தல் நடவடிக்கைகளிலும் ஈடுபடவேண்டும். இதனால் ஏனைய ஆசிரியர்களும் மனம் கோணாது மேலதிக வகுப்புக்களை தொடருவர் என்பது உறுதி.
அன்று அத்தியாவசியமாக இருந்த ஆங்கிலக் கல்வியையும் சமயக் கல்வியையும் தாமே போதித்தார்.
இயம்பிடு ஆங்கிலக் கல்வியை
வியன்மிகு காரைநகர் தன்னில்
நயம்பெற உரைத்த நல்லாசான் – என்று
சயம்பு அவர்களைப் போன்றுகின்றார். காரை மண் தந்த வித்துவான் F.X.C நடராசா அவர்கள் சயம்பு அவர்கள் மதம் மாற்றத்தை நிறுத்திய செயல் வீரர். இதற்காக பிற மதங்களுக்கு எதிராக போர்க்கொடி எழுப்பவில்லை, சொல்லம்பு தொடுக்கவில்லை, மின்னாமல் முழங்காமல் தம் கருமம் செய்தவர் ஆவார். மாணவர் உளங்கொள ஆங்கிலக் கல்வியைப் போதித்தார். சைவ பாரம்பரியத்தை மாணவர்களுக்கு விளாக்கினார். ஆலய வழிபாட்டை வற்புறுத்தினார். மக்களும் மாணவர்களும் நம்பிக்கை வைத்தனர். இதன் விளைவாக பிற மத பாடசாலையில் சேராது இவரது பாடசாலையில் சேர்த்தனர். இதனால் மதமாற்றம் தடைப்பட்டது.
சயம்பரிடம் கற்ற மாணவர்கள் அவரிடம் கற்ற ஆங்கில அறிவோடு மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குச் சென்று உயர் பதவி பெற்று வளமாக வாழ்ந்து பாடசாலையின் பெருமைய மேலோங்கச் செய்தனர். காரைநகர் மான்மியம் எனும் நூலில் “சயம்புச் சட்டம்பியார் காரைநகருக்கு வந்திலரேல் பெருங்குடி மக்களாகத் திகழும் மலாய் நாட்டு பஞ்சனியர்மார் காரைநகரில் தோன்றியிருக்கமாட்டார்கள்” என்று குறிப்பிடப்படுகிறது.
சமூக மாற்றத்திற்கு கல்வியே திறவுகோல் என்ற காரைநகர் கூற்றிற்கிணங்க சயம்பு உபாத்தியாயரின் கல்வித் திறவுகோலால் காரைநகர் பண்பட்ட சமூகமாக, கல்விச் சமூகமாக, நாகரிக சமூகமாக மிளிர்ந்தது. 1922 இல் சேர் பொன் இராமநாதன் அவர்கள் காரைதீவு வருகை தந்தபோது அவருக்கு அளித்த வரவேற்பில் மகிழ்ந்து இவ்வூர் தீவு அல்ல நகர் என்று கூறி பெருமிதம் கொண்டார். 1923இல் ஆட்சியாளர்கள் இவ்வூரின் பெருமை அறிந்து காரைநகர் என சட்டப்படி பெயர்மாற்றம் செய்தனர். சப்த தீவுகளில் ஒன்றாக விளங்கும் காரைதீவு, நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட காரைதீவு. சயம்பரின் கல்வி எனும் திறவுகோலால் நகர் மாற்றம் பெற்றதால் காரைநகர் என்னும் நகர் பெருமையை ஈட்டியுள்ளது எனலாம்.
சயம்பர் சமய விசுவாசத்தை வாழ்வின் மூலம் எடுத்துக்காட்டியுள்ளார். அதிகாலையில் தமது இல்லத்தில் கந்தரலங்காரம் பாடுவதும் வெள்ளிக்கிழமை தோறும் பஐனையில் ஈடுவடுவதும், மாணவர்களை ஈடுபடுத்துவதும் இவரது செயற்பாடாகும். இவர் தனது பஐனையில் “அம்பலத்தரசே அருமருந்தே……” எனும் பாடலை மனம் கசிந்துருகிப் பாடுவார்.
1924ஆம் ஆண்டு ஜே.எஸ்.சி பரீட்சைக்கு(அதுவே கல்லூரியின் உயர் பரீட்சை) பதினைந்து மாணவர்கள் தோற்றியிருந்தார்கள். இதில் ஒரு மாணவன் முதற்பிரிவிலும் பதின்மூன்று மாணவர்கள் இரண்டாம் பிரிவிலும் சித்திபெற்றனர். வடமாகாணம் முழுவதிலும் முதற்பிரிவில் சித்தியடைந்த மாணவன் ஒருவனேயாவான். அவனே இக்கல்லூரி மாணவன் ஆவான். இப்பரீட்சையில் 93.33 வீத மாணவர்கள் சித்திபெற்றுள்ளனர். அப்போது இருந்த கல்வி வளர்ச்சி தான் என்னே!
“ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக் கேட்ட தாய்” என்றார் வள்ளுவர்.
பாடசாலை தாயும், மாணவர்களை வளர்த்தெடுத்த ஆசிரியப் பெருந்தகைகளும் கல்லூரியைத் தாபித்த சயம்பு அவர்களும் எவ்வளவு பூரித்திருப்பார்கள்.
வசதிகள் குறைந்த காலத்தில் பாடசாலையை ஆரம்பித்து பல இன்னல்கள் மத்தியில் தன்னலங் கருதாது 43 வருட காலங்கள் ஆசிரியராக, அதிபராக, மனேஜராக பணிபுரிந்த சயம்பு அவர்கள் 1931.12.31 இல் ஓய்வு பெற்றார். ஆயிரம் ஆயிரம் கல்விமான்களையும், அரச உத்தியோகத்தர்களையும் உருவாக்கிய பெருமகனுக்கு, காரைநகரை தம் ஊராக எண்ணி செயல்பட்ட உத்தமருக்கு காரைநகர் மக்கள் பிரபல சட்டத்தரணி ஐ.வி.குலசிங்கம் தலைமையில் சேவைநலம் பாராட்டு விழாவை கோலாகலமாக நடத்தி தங்கள் பேரன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.
காரைநகர் மக்களின் நல்வாழ்வுக்கு மாபெரும் தியாகம் செய்த மகான், கல்விச் சிந்தனையாளர், சமய பக்தர், நாடகப்பிரியர், நாடக நெறியாளர், கட்டுரையாளர், என்றெல்லாம் போற்றப்படும் சயம்பு அவர்கள் 1938 ஆம் ஆண்டில் ஈழத்துச் சிதம்பரக் கூத்தன் திருவடி அடைந்தார். அவரது சேவையை பாராட்டி தொடர்ச்சியாக நினைவு கூர்ந்து வருவது போற்றுதற்குரியதாகும்.
காரைநகர் மக்களின் முன்னேற்றத்திற்கு முன்னோடியாகத் திகழ்ந்த சயம்பருக்கு திருவுருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலை கல்லூரி முகப்பை அலங்கரிப்பதோடு நன்றியுணர்வையும் எடுத்து இயம்புகின்றது. கல்லூரிக்கு வடக்கே ஈழத்து சிதம்பரத்துக்கு செல்லும் வீதி, சயம்பு அவர்களின் நாமம் பூண்டு “சயம்பு வீதி” யாக போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
பெரியார் சயம்பு அவர்களைத் தொடர்ந்து 25 அதிபர்கள் வழிநடத்தியுள்ளனர். இவர்களில் கால் நூற்றாண்டு காலமாக அதிபராக பணியாற்றிய பெருமை திரு ஆ.தியாகராஜா அவர்களைச் சாரும். அவரின் காலம் பொற்காலம் என போற்றப்படுகின்றது. முத்து சயம்பு அவர்களுக்கு அடுத்ததாக பணி செய்தவராகக் கருதப்படுகின்றார். அவரால் உருவாக்கிய பௌதிக வளங்கள், கல்வி வளங்கள் எண்ணிலடங்காதவை கல்லூரியை உருவாக்கி 43 வருடங்கள் சேவையாற்றிய சயம்பு அவர்களுக்கு நன்றிக்கடனாக எப்போதும் நினைவுகூரும் வகையில் மூன்று கருமங்களை ஆற்றியுள்ளார்.
1. மலேசியா சென்று இக்கல்லூரி பழைய மாணவர்களிடம் நிதியைச் சேகரித்து ஸ்தாபகர் முத்து சயம்பு அவர்களின் ஞாபகார்த்தமாக கீழ் மாடியில் 4 வகுப்பறைகளும் மேல்மாடியில் திறந்த மண்டபத்தையும் நிர்மாணித்துள்ளார்.
2. காலத்திற்குக் காலம் வெளிவரும் கல்லூரி சஞ்சிகைகளில் “சயம்பு மலர்” எனும் பெயரில் வெளிவரச் செய்துள்ளார்.
3. மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 4 இல்லங்களில் ஒன்றை “சயம்பு இல்லம்” ஆக்கியுள்ளார். இதனால் போட்டிகள் தோறும் “கமோன் சயம்பு” “கமோன் சயம்பு” எனும் குரல் விளையாட்டு மைதானம் முழுவதும் ஒலிக்கச் செய்துள்ளார்.
இவ்வாறு கல்லூரிக்கும் ஸ்தாபகர் சயம்பு அவர்களுக்கும் தியாகராசா அவர்கள் செய்த சேவை மகத்தானதாகும். இக்கல்லூரியில் பணியாற்றிய அதிபர்கள், பணியாற்றும் அதிபர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை. இவர்களின் பெருமுயற்சியால் இன்று இக்கல்லூரி பெரும் விருட்சமாக விளங்குவதை இட்டு பெருமைப்படுகின்றேன். அவர்கள் அனைவரையும் வாழ்த்துகின்றேன்.
ஆசிரியப் பெருந்தகைகளே! “உனக்கு நீயே உண்மையாக இரு” என்னும் இக்கல்லூரி மகுடவாசகத்தை உங்கள் நெஞ்சில் பதியுங்கள். இது என்றும் உங்களை தலைநிமிர்ந்து வாழவைக்கும்.
மாணவச் செல்வங்களே! என்றும் பணிவுடையவனாக வாழுங்கள். பணிந்து நடப்பது அடிமைத்தனம் என்று எண்ணாதீர்கள் அன்பைப் பெருக்கும் வழி என்பதை உணருங்கள். எப்போதும் இனிமையான சொல்லால் இனிமையாகப் பேசுங்கள், மற்றவர் மனம் புண்படப் பேசாதீர்கள், இது உறவைப் பெருக்கும் வழி என்பதை உணருங்கள். இதனை வள்ளுவர் பெருமான்
“பணிவுடையன் இன்சொலன் ஆதல்
அணி அல்ல மற்றுப் பிற” என்றார்.
இக்குறளை மனனஞ்செய்து நம் வாழ்வில் கடைப்பிடிப்போமாக மேலும் பல சாதனைகள் நிலைநாட்டி கல்லூரிக்கு வளம்சேர்க்க வேண்டும் என வாழ்த்துகின்றேன்.
மீளவும் கல்லூரியை மனமொன்றித்து நினைக்க சந்தர்ப்பம் அளித்த அதிபருக்கும், விழா சபையினருக்கும் நன்றிகூறி விடைபெறுகின்றேன்.
நன்றி
பண்டிதர் மு. சு. வேலாயுதபிள்ளை,
ஓய்வுநிலை அதிபர்,
யா/ காரைநகர் இந்துக்கல்லூரி,
காரைநகர்.
04.07.2016
No Responses to “ஸ்ரீமான் முத்து சயம்பு நினைவுப் பேருரை – ஒய்வுநிலை அதிபர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை –”