கற்றல் செயற்பாட்டினை ஊக்குவிக்கின்ற செயற்பாடுகளுள் பாடசாலைகளில் ஒழுங்கமைக்கப்பட்டு வருகின்ற ‘பரிசில் தினம்’ நிகழ்வு கல்வியாளர்களின் ஏகோபித்த அங்கீகாரத்தினைப் பெற்று மாணவர்களின் முன்னேற்றத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தவல்ல முன்னணி நிகழ்வாகக் கருதப்படுகின்றது.
ஆற்றல் மிக்க மாணவர்கள் பாராட்டி ஊக்குவிக்கப்படுகின்றபோது சாதனையாளர்களாக மிளிரக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்படுகின்றது என்பதை அனுபவரீதியாக உணர்ந்துகொண்டவரும் காரைநகர் இந்துக் கல்லூரியில் கற்று நிபுணத்துவம் மிக்க குழந்தைகள் மருத்துவராக கனடாவில் பிரபல்யம் பெற்று விளங்கி கல்லூரியின் புகழை நிலைநாட்டிவருகின்றவருமாகிய மருத்துவகலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் அவர்களால் ஒன்றரை மில்லியன் ரூபா நிரந்தர வைப்பிலிடப்பட்டு 2014ஆம் ஆண்டு பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் ஒத்துழைப்புடன் நிறுவப்பட்டதே ‘மருத்துவகலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியம்’ ஆகும்.
காரைநகரில் சட்டரீதியாக அமைந்து விளங்கும் ஒரே நம்பிக்கை நிதியம்(Charitable Trust Fund) என்ற பெருமையைப்பெற்றுள்ள இந்நிதியத்திலிருந்து பெறப்படுகின்ற வருடாந்த வட்டிப் பணம் கல்லூரியின் வருடாந்த பரிசில் தினத்தினை தங்குதடையின்றி காலாகாலமாக தொடர்ந்து நடாத்துவதற்கான ஏற்பாடுகள் இந்நிதியத்தின் ஊடாக செய்யப்பட்டுள்ளது. இந்நிதியத்தின் நிறுவுநரோ அன்றி கல்லூரியின் விசுவாசிகள் எவருமோ விரும்பும் சமயத்தில் இந்நிதியத்தில் மேலும் வைப்பீடு செய்யமுடியும் என சட்டஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாட்டுக்கு அமைய மேலதிகமாக அரை மில்லியன் ரூபாவினை நிதியத்தின் நிறுவுநர மருத்தவகலாநிதி; வி.விஜயரத்தினம் அவர்கள் வைப்பிலிட முன்வந்து அத்தொகையினை வங்கிக்கு அனுப்பிவைத்துள்ளார். இதன்மூலம் நிதியத்தின் வைப்புத்தொகை இரண்டு மில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது. இந்நிதியத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ளப்படும் வட்டித்தொகையிலிருந்து பரிசில் தினத்திற்கு ஏற்படும் செலவுகளை ஈடுசெய்தபின்னர் உள்ள மிகுதிப்பணத்தினை கல்லூரியின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தமுடியும் என்கின்ற ஏற்பாடும் நிதியத்தின் சட்ட ஆவணத்தில் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கல்லூரியின் வளர்ச்சியில் அக்கறைகொண்டு உதவிவருகின்ற மருத்துவகலாநிதி வி.விஜயரத்தினம் அவர்களை கல்லூரிச் சமூகமும் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையும் பாராட்டி நன்றிகூறுகின்றது.
No Responses to “‘மருத்துவ கலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியம்’ இரண்டு மில்லியன் ரூபாவாக அதிகரிப்பு”