காரை மடந்தை செய்த நற்றவத்தின் பயனாக காரைநகரின் உதய சூரியனாக உதித்து நான்கு தசாப்த காலமாக காரை மண்ணை பூமிப்பந்தில் ஒளிரும் மாணிக்கமாகத் துலங்க வைத்த, எவரும் வஞ்சனை செய்து மறைக்கவோ மறக்கவோ முடியாத மனிதருள் மாமனிதர் அமரர் கலாநிதி.ஆ.தியாகராசா என்றால் மிகையாகாது.
அத்தகைய சிறப்பு வாய்ந்த காலம் தந்த கதிரவனான கலாநிதி ஆ.தியாகரசா அவர்களுக்கு எழில்மிகு சுவிஸ்லாந்து நாட்டில் வாழும் எம் காரை மைந்தர்கள் உண்மை அன்புடனும் நன்றி விசுவாசத்துடனும் 17.07.2016 அன்று நூற்றாண்டு விழா எடுத்தனர். இவ்விழாவில் “தியாகச் சுடர்” என்னும் மலரும் வெளியிடப்பட்டது.
அவர்களின் நூற்றாண்டு விழா மலருக்கு அமரர்.கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களின் நன்மதிப்பைப் பெற்ற பழைய மாணவியும் யாழ் பல்கலைகழக உயிரியில் விஞ்ஞான சிறப்புப் பட்டதாரியும் காரைநகர் இந்துக் கல்லூரியின் ஒய்வுநிலை அதிபரும் இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் ஒய்வுநிலை உதவி ஆணையாளருமாகிய திருமதி.தவநாயகி பாலசிங்கம் அவர்கள் வாழ்த்துச் செய்தி வழங்கியுள்ளார்.
அமரர்.கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களும் 1974-1978 காலப்பகுதியில் அதிபராகவிருந்த திரு.கே.கே.நடராசா அவர்களும் திருமதி.தவநாயகி அவர்களை அவர்களின் இல்லம் சென்று அழைத்து வந்து காரைநகர் இந்துக் கல்லூரியில் 1976 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உயர்தர வகுப்பினருக்கு உயிரியல் பாட ஆசிரியராக நியமித்திருந்தமை இங்கு நினைவுகூரத்தக்கது. அன்றிலிருந்து 22 ஆண்டு காலமாக பல மருத்துவத்துறை, உயிரியல் விஞ்ஞானத்துறை மாணவர்களை உருவாக்கியதுடன் முதலாவது பெண் அதிபராகவும் இருந்து இக்கட்டான இடப்பெயர்வு காலத்தில் பாடசாலையை சிதைந்து போகாமல் கட்டிக் காத்து மீளவும் துணிச்சலுடன் காரைநகரில் ஆரம்பித்து சிறப்புடன் வழிநடத்திய பெருமைக்குரிய அதிபர் திருமதி.தவநாயகி பாலசிங்கம் அவாகள் ஆவார்.
அத்தகைய சிறப்பு வாய்ந்த ஒய்வுநிலை அதிபர் திருமதி.தவநாயகி பாலசிங்கம் அவர்கள் தம் ஆசான் அமரர் கலாநிதி.ஆ.தியாகராசா அவர்கள் மீது சுவரில் வரைந்த சித்திரம் போல அன்றும் இன்றும் என்றும் மாறாத மதிப்புடன் வழங்கிய வாழ்த்துச் செய்தியைக் கீழே காணலாம்.
“பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானில் நனி சிறந்ததுவே” என்ற தெய்வப் புலவரின் கூற்றுக்கமைய வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வமாக இன்றும் நினைவு கூரப்படும் எம் அதிபர் அமரர் கலாநிதி. ஆ. தியாகராஜா அவர்களின் நூற்றாண்டு அகவை தினத்தை முன்னிட்டு சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் வெளியிடும் மலரிற்கு வாழ்த்துச் செய்தி வழங்குவதில் பேருவகை அடைகின்றேன்.
அமரர் கலாநிதி. ஆ. தியாகராஜா அவர்கள் எமது ஊரைப் பொறுத்தவரை ஆசிரியர், அதிபர், அரசியல்வாதி என்ற பல் ஆளுமை கொண்ட செயல் வீரனாகச் செயற்பட்டு சேவையாற்றியமை என்றென்றும் நன்றிப் பெருக்குடன் நினைவுகூரப்பட வேண்டியதாகும்.
மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற முன்னோரின் வாக்குக்கு அமைய நல்ல தாய், தந்தை குருவை பெற்றவர்கள் மிகுந்த பாக்கியசாலிகளாவர். அந்த வகையில் எமது காரை மாணவ சமூகத்தின் எழுச்சிக்கு நிமிர்ந்த நடை, நேர் கொண்ட பார்வை, மொழிப் புலமை, சீரிய தூரநோக்கு சிந்தனை, தன்னலமற்ற சேவை கொண்ட அதிபரின் வழி நடத்தல் அமைந்தமை எம் ஊரின் பொற்காலமே ஆகும். அவரிடம் கல்வி பயின்ற எமது ஊர் மாணவர்கள் இன்று பல்வேறு தகமை கொண்ட செயல் வீரர்களாக உலகம் முழுவதும் பரந்திருக்கின்றார்கள் என்பது யாரும் மறுக்க முடியாது.
இத்தகைய மாமனிதருக்கு இந்நூலை நன்றிக் காணிக்கையாக்குதல் சாலப் பொருத்தமானதே. “எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே” என்ற பாரதியின் பாடல் வரிக்கேற்ப புலம்பெயர்ந்த நிலையிலும் தம் ஊரையும் ஊர் வாழ்ந்த நன் மகானின் பெருமையை மறவாது கௌரவிக்கும் சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை உறுப்பினர்களின் அயராத முயற்சியைப் பாராட்டி வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
திருமதி. தவநாயகி பாலசிங்கம்
B.Sc (Special), PGDE, PGDEM, MA in Teacher Education
ஒய்வுநிலை அதிபர், காரைநகர் இந்துக் கல்லூரி
ஓய்வுபெற்ற உதவிப் பரீட்சை ஆணையாளர்
பரீட்சைத் திணைக்களம்.
No Responses to “கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவிற்கு ஒய்வுநிலை அதிபர் திருமதி.தவநாயகி பாலசிங்கம் அவர்களின் வாழ்த்துச் செய்தி”