கற்றதனாலாய பயன் வெளிக்கொணரப்பட வேண்டியது அவசியம். இதனை உணர்ந்த, தனக்கென வாழாத பெரியார் சயம்பர் அவர்கள் 1888ஆம் ஆண்டளவில் காரைநகரை இனங்கண்டு பாடசாலை ஒன்றினை நிறுவினார் என்பது வரலாறு. நாளடைவில் ஆல்போல் தளைத்த இவரது பாடசாலையே பெயர் மாற்றங்கள் பெற்றும் இன்றும் நம்மிடையே ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் நாம் கண்ட காரைநகர் இந்துக் கல்லூரி. நன்றி மறவா நம்மக்கள் கல்லூரி முன்றலில் பெரியார் சயம்பருக்கோர் சிலையெழுப்பி இன்றும் கௌரவித்து வருகின்றமை போற்றுதற்குரியதே.
இவ்வாறான செயற்பாடுகளுக்கு காரணகர்த்தாக்களும் ஆங்காங்கே இருக்கின்றனர் என்றால் அவர்கள்தான் தாம் கற்ற கல்லூரியை மறவாப் பழைய மாணவர்களாவர். இவர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும்கூட ஆர்வத்தோடு செயலாற்றி வருவதையும், கல்லூரி மேன்மேலும் வளர முடிவுறாப் பணிகள் தொடர கல்வித் தரம் உயர உதவிகள் புரிந்துவருவதையும் நாம் அறிவோம். பெருமைப்படுகின்றோம்.
இவ்வாறான சூழ்நிலையில் எம் கடன் பணிசெய்து கிடப்பதே என்னும் அப்பர் சுவாமிகளின் பொன் மொழிகளுக்கேற்ப கனடாவில் முனைப்போடு இயங்கிவரும் பழைய மாணவர் சங்கத்தினராகிய நீங்கள் சங்கத்தினை மேலும் ஒருபடி முன்னோக்கி எடுத்துச்செல்ல வேண்டும் சங்கத்தினது செயற்பாடுகள் தகவல்கள் உடனுக்குடன் பாரெங்கும பரந்து வாழும் பழைய மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் எனும் நல்நோக்கில் சங்கத்திற்கான இணையத்தளம் ஒன்று உதயமாகிறது என அறிந்து எங்கள் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையும்; மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றது. செயற்திறனைப் பாராட்டுகின்றோம். கல்லூரிக்கெனச் செய்துவரும் தங்களது பணிகளையும் அறிந்து அகமகிழ்கின்றோம்.
தூரநோக்கம் கொண்ட தங்களது சங்கம் மேன்மேலும வளர எனது நல்லாசிகள்.
க. ஜெகதீசன்
தலைவர்
பழைய மாணவர் சங்கம் – கொழும்பு கிளை
No Responses to “பழைய மாணவர் சங்கக் கொழும்புக் கிளைத் தலைவர் திரு.க.ஜெகதீசன் அவர்களின் வாழ்த்துச் செய்தி”