பெரியோர்களின் நினைவேந்தல் என்பது வெறும் சடங்கல்ல. அது கடந்த காலத்தின் சுவடுளைப் பதிவிலிடுவது. அதன் படிப்பினைகளின் வழி இளையோரை வழிநடாத்துவதற்கு ஒரு சமூகத்தின் அறிவார்ந்த செயற்பாட்டாளர்களின் முயற்சியாகும். நமது தமிழ் மரபில் பல்லாயிரம் வருடங்களாக இருந்த வழிபாட்டு மரபு மாண்டுபட்ட போர் வீரர்கள் சேவையாளர்களின் நடுகல் வழிபாடே.
இன்றும் இறந்து போன தாய் தந்தையை நாம் வழிபடுகிறோம். முன்னுதாரணங்களைப் போற்றுதல் இளையோருக்கு வழிகாட்டுதலாகும். அமரர் கலாநிதி. ஆ. தியாகராசா அவர்கள் நமது ஊரின் கல்வி வளர்ச்சியல் பாரிய பங்காற்றியவர்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மாங்குடிக் கிழார் என்னும் புலவர் எழுதிய புறநாநூற்றுப் பாடல் இங்கு கவனிக்கத் தக்கது. நாட்டிற்காகத் தியாகம் செய்த பெரியோரே, வீரர்களே நம் கடவுளர் அது தவிர நாம் பரவும் வேறோர் கடவுள் இல்லை என்கிறார் அவர். அமரரின் அரசியல் நிலைப்பாடு பற்றிய கருத்து வேறுபாடுகள் இருப்பினும் அவர் ஊருக்கு ஆற்றிய கல்வி மற்றும் அபிவிருத்திச் சேவைகளைப் பொருத்தவரை அவர் உண்மையிலேயே தியாகிதான் என்பதில் ஐயமில்லை. அவரை மனங்கொள்ளும் இடத்துப் பின்வரும் பாடல் அவருக்கும் பொருந்தும். அவரும் ஊர்ச் சேவைக்கான பாதையிலேயே உயிர்துறந்தார்.
ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவின் அல்லது
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே! (புறநானூறு, பாடல் 335)
இது தேசத்தின் சேவையாளர்களுக்குத் தமிழ் மரபில் அளிக்கப்படும் மகோன்னதமான இறைநிலை மரியாதைக்குச் சான்று.
அன்னாரது நினைவு போற்றும் இந்நிகழ்வில் எமது சுவிஸ் காரை குடும்பத்தினர் அனைவரும் திரளாகக் கலந்து சிறப்பிக்க வேண்டுகிறோம். இது அவர்களின் நன்றிக்கடன். செய் நன்றி போற்றுவது தமிழர் பண்பாடு. ஐக்கிய இராச்சியம், ஜெர்மன், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து வருகை தரும் பிரமுகர்களுக்கு எமது நன்றிகள்.
இத்துடன் அன்னாருக்கான ‘சேவை அஞ்சலியாக’ சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரின் அனுமதியுடன் அச்சபையின் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவினரின் சார்பில் பின்வரும் நிகழ்ச்சித் திட்டம் பற்றி அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
“தியாகத் திறன் வேள்வி 2016”
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் அதன் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவினரின் பங்களிப்புடன் நடாத்தப்பட்டு வருகிற கட்டுரைப் போட்டி விரிவாக்கம் செய்யப்படவுள்ளது என்பதை மிகுந்த மகிழ்வுடன் அறியத்தருகிறோம்.
17- 07- 2016 இல் மேற்படி சபையின் ஏற்பாட்டில் நடைபெறும் அமரர் கலாநிதி. ஆறுமுகம் தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழா மற்றும் “தியாகச் சுடர்” நினைவுத் தொகுப்பு வெளியீட்டு வைபவம் ஆகியன இடம் பெறும் இத் தருணத்தில் இந்த உவப்பான செய்தியை மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவின் சார்பாகத் தெரிவிப்பதில் மகிழ்ச்சிடைகிறேன்.
இந்த ஆண்டிலிருந்து மாணவர் திறன் வளர்க்கும் போட்டிகளை விரிவாக்கம் செய்யவுள்ளோம். காரைநகரின் கல்விப் புரட்;சியின் தந்தை கலாநிதி. ஆ. தியாகராசா அவர்களின் நினைவாக வருடந்தோறும் “தியாகத் திறன் வேள்வி” என்ற நிகழ்வாக “ஆளுயுர்வே ஊருயர்வு” என்ற மகுட வாசகத்துடன் இடம்பெறும்.
இவ்வருடத்தில் இருந்து கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, கர்நாடக சங்கீதப் போட்டி, பொது அறிவு வினாடி வினாப் போட்டி, திருக்குறள் மனனப் போட்டி என ஐந்து வகையான போட்டிகள் மூன்று பிரிவுகளில் இடம் பெறும். இவை அனைத்தும் அடுத்த மாதத்தில் ஆரம்பித்து எதிர்வரும் மார்கழி மாதம் ஆதிரை நாளுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பதாக நறைவுபெறும்.
இந்தப் போட்டிகளைக் காரைநகரிலும் முடிந்தவரை உலகெங்கிலும் காரைநகர் மாணவர்கள் செறிந்து வாழும் முக்கிய நகரங்களிலும் ஏற்பாடு செய்ய உள்ளோம். இப்பணியை வெற்றிகரமாக நிறைவேற்ற எமது சகோர புலம்பெயர் சங்கங்களின் உதவியை நாடி நிற்கிறோம். அதே போல் காரைநகரின் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் ஆகியோரது ஈடுபாடும் முயற்சியும் அவசியமானவை. கடந்த இரண்டாண்டுகளில் நீங்கள் காட்டிய ஊக்கமே எம்மை உற்சாகப்படுத்தியிருக்கிறது. தொடர்ந்தும் உங்கள் பலமான ஆதரவை எதிர்பார்க்கிறோம்.
விதிமுறைகள், திகதி, போட்டி இடங்கள் ஆகியன குறித்த அறிக்கை விரைவில் வெளிவரும். இது ஊர் மக்கள் அனைவருக்குமான பொதுத்தொண்டு. சிரமம் பாராது மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் மேற்கூறிய திட்டம் பற்றிய தமது ஆலோசனைகளைப் பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி உதவுமாறு வேண்டுகிறோம்: swisskarai2004@gmail.com
“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”. “ஆளுயர்வே ஊருயர்வு”.
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின்
மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு சார்பாக
இணைப்பாளர்
கலாநிதி. கென்னடி விஜயரத்தினம்
No Responses to “காரைநகரின் கல்விப் புரட்சியின் தந்தை கலாநிதி ஆ. தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவும் “தியாச் சுடர்” நினைவுத் தொகுப்பு வெளியீடும் சிறப்புற வாழ்த்துக்கள் -கலாநிதி. கென்னடி விஜயரத்தினம்-”