காரை.இந்துவின் ஊட்டப் பாடசாலைகளிலிருந்து இவ்வாண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் ஆறாம் ஆண்டிற்கான அனுமதியை காரைநகர் இந்துக் கல்லூரியில் பெற்றுக்கொண்டு தமது கல்வியை தொடர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விதம் அனுமதியைப் பெற்றுக்கொள்ளவுள்ள அனைத்து மாணவர்களிற்கும் அவர்கள் கல்லூரியில் கற்கும் காலம் வரைக்கும் அவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கான நிதியினை மாதாந்தம் வழங்கி உதவ பொறியியலாளர் மகேஸ்வரன் பாலசுப்பிரமணியம் அவர்கள் முன்வந்துள்ளார்.
காரை.இந்துவின் பழைய மாணவனான அமெரிக்க பொறியியலாளர் திரு.மகேஸ்வரன் பாலசுப்பிரமணியம் அவர்கள் காரை.இந்துவின் வளர்ச்சியில் மிகுந்த கரிசனை கொண்டு பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையினூடாக பெரும் பங்காற்றி வருபவர். காரைநகர் இந்துக் கல்லூரியில் கற்று வருகின்ற ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற 36 மாணவர்களிற்கு அவர்கள் கற்கும் காலம் வரை மாதாந்த உதவியினை வழங்கி உதவும் திட்டம் மகேஸ்வரன் அவர்களது முழுமையான நிதிப் பங்களிப்புடன் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது. அது மட்டுமல்லாது ஆண்டிறிதிப் பரீட்சையில் முதலாவது நிலையினைப் பெற்றுக்கொள்கின்ற மாணவர்களிற்கும் இவ்வுதவி கிடைத்து வருகின்றது.
தேசியப் பரீட்சைப் பெறுபேறுகளில் சிறந்த தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடியது என எதிர்பார்க்கபபடும் இவ்வுதவித் திட்டமானது காரைநகர் கல்வியாளர்களின் பாராட்டினைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
குறித்த திட்டத்தினை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையின் ஊடாக செயற்படுத்தி வருகின்ற மகேஸ்வரன் அவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து இவ்வாண்டு அனுமதியயைப் பெற்றுக்கொள்ளவுள்ள மாணவர்களிற்கும் இவ்வுதவியை வழங்கி உதவ முன்வந்தமையை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி அவருக்கு உளமார்ந்த நன்றியினையும் தெரிவித்துக்கொள்கின்றது.
No Responses to “ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்று காரை.இந்துவில் கல்வியை தொடரவுள்ள மாணவர்கள் பொறியியலாளர் மகேஸ்வரன் பாலசுப்பிரமணியம் அவர்களின் உதவித் திட்டத்தின் கீழ் உதவியைப் பெறும் வாய்ப்பினைப் பெறவுள்ளனர்.”