காரைநகர் இந்துக் கல்லூரியின் தோற்றத்தின் மூலகர்த்தாவும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமகநாவலர் அவர்களிற்கு அடுத்து வைத்துப் போற்றப்படும் பெருமைக்குரியவருமாகிய மகான் சிவத்திரு.அருணாசல உபாத்தியாயர் அவர்களது நினைவு தினத்தை முன்னிட்டு கோப்பாய் ஆசிரியகலாசாலை அதிபர் ‘செந்தமிழ் சொல்லருவி’ சந்திரமௌலீசன் லலீசன் அவர்கள் எழுதி முகநூலில் பதிவிடப்பெற்ற கட்டுரை இங்கே எடுத்து வரப்பட்டுள்ளது.
நாவலருக்குப் பின் அவர் வழியில் சைவப்பாடசாலைகளையும் ஆசிரிய கலாசாலையையும் நிறுவுவதற்கு அருணாசல உபாத்தியாயர் முன்னின்று உழைத்தார்.
தெல்லிப்பழை அமெரிக்க மிசன் போதனா பாடசாலையில் ஆசிரிய கல்வியைப் பெற்றார். (முற்காலத்தில் ஆசிரிய கலாசாலையை போதனா பாடசாலை என்றே அழைப்பர். அவர்கள் பயிற்சி பெறும் பாடசாலையை சாதனா பாடசாலை என்பர்)
.
தெல்லிப்பழையில் படித்து முடியும் சூழலில் சமயம் மாறினால்தான் பரீட்சை எழுதலாம் என்ற சூழல் இருந்தது. அதனால் மனவிரக்தி அடைந்து அங்கிருந்து வெளியேறிய அருணாசலம் 1916 இல் கோப்பாயில் ஆசிரியர்கள் கற்பதற்காக ஒரு போதனா பாடசாலையை (கோப்பாய் ஐக்கிய போதனா பாடசாலை) உருவாக்கினார். நிதி நெருக்கடியால் இதனை அவரால் தொடரமுடியாமல் போனது.
.
இதுவே இன்றைய கோப்பாய் ஆசிரிய கலாசாலை 1923 இல் உருவாவதற்கான வித்தாக அமைந்தது. அருணாசலம் உருவாக்கிய கோப்பாய் போதனா பாடசாலை இன்றைய கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி இருந்த இடத்தின் அருகில் இருந்தது.
.
அவரது சைவ ஆசிரிய கலாசாலைக் கனவு 1928 இல் இந்துபோட் இராசரத்தினத்தால் நிறைவேற்றப்பட்டது. (இதுவே இன்றைய முத்துத்தம்பி மகா வித்தியாலயம்)
காரைநகர் ச. அருணாசல உபாத்தியாயர் 31.10.1864 இல் பிறந்து 17.01.1920 இல் அமரத்துவம் அடைந்தார். அவர் காரைநகரில் பல சைவப்பாடசாலைகளை நிறுவியுள்ளார்.
.
பண்டிதமணி அவர்கள் சைவாசிரிய உலகின் மூன்று கண்களாக நாவலர், இந்துபோட்டர், மற்றும் அருணாசல உபாத்தியாயர் ஆகியோரை விதந்துரைத்துள்ளார் என்பதுவும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
No Responses to “சைவப்பாடசாலைகளையும், ஆசிரிய கலாசாலையையும் தோற்றுவித்த மகான் காரைநகர் அருணாசல உபாத்தியாயர்.”