காரைநகர் இந்துக் கல்லூரியின் மேம்பாட்டு நிதிக்காக எதிர்வரும் செப்ரெம்பர் 17ஆம் திகதி சனிக்கிழமை கனடா கந்தசுவாமி கோயில் கலை அரங்கில் பழைய மாணவர் சங்க கனடா கிளையின் எற்பாட்டில் சுப்பர் சிங்கர் புகழ் சாயி விக்னேஸின் கர்நாடக இசைக் கச்சேரி நடைபெறவிருப்பது அனைவரும் அறிந்ததே.
தற்போது 21 வயதாகவிருக்கும் சாயி விக்னேஸ் மிகவும் சிறிய வயதிலேயே கர்நாடக இசைப் பாடல்களையும் மெல்லிசைப் பாடல்களையும் பல்வேறு போட்டிகளிலும் பாடி ஆற்றல் மிக்க சிறந்த பாடகர் என்ற பாராட்டினைப் பெற்றவர். சிறப்பாக விஜே தொலைக்காட்சியினால் 2013ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட சுப்பர் சிங்கர்4 தெரிவுப் போட்டியில் பங்கு பற்றி முதல் எட்டு போட்டியாளர்களுள் ஒருவராக தெரிவுசெய்யப்பட்டவர் என்பதுடன் இப்போட்டியின்போது இவரிடத்தில் வெளிப்பட்ட கர்நாடக இசைத் திறமை நடுவர்களினால் வெகுவாகப் பாரட்டப்பட்டிருந்தது. சுப்பர் சிங்கர் போட்டியில் பங்கு கொண்டதன் மூலமாக சர்வதேசமெங்கும் பல்லாயிரக் கணக்கான கர்நாடக இசை ரசிகர்களை உருவாக்கிக் கொண்டவர்.இள வயதிலேயே தமிழ்நாட்டின் பல இசை அரங்குகளில் மட்டுமல்லாது வட-அமெரிக்கா, ஸ்ரீலங்கா, சிங்கப்பூர, மலேசியா போன்ற நாடுகளில் கர்நாடக இசைக் கச்சேரி மற்றும் மெல்லிசை நிகழ்ச்சிகளை நடாத்தி அமோக வரவேற்பினைப் பெற்றுக்கொண்டவர்.
அந்த வகையில் பழைய மாணவர் சங்க கனடா கிளையின் அழைப்பினை ஏற்று கனடாவிற்கு வருகை தந்து மூன்று மணி நேர இசை நிகழ்ச்சியினை வழங்கவுள்ளமை இங்குள்ள இசை ரசிகர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என்றே கூறலாம். பல இசை ரசிகர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டதற்கிணங்க திரைப் படங்களில் இடம்பெற்ற பிரபல்யம் மிக்க கர்நாடக இசைப் பாடல்களையும் பக்திப் பாடல்களையும் சாயி விக்னேஸ் 17ஆம் திகதி நடைபெறவுள்ள கச்சேரியின்போது பாடவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
சாயி விக்னேஸின் இசைக்கு காரை மண் தந்த இரு இளங் கலைஞர்கள் பக்கவாத்தியம் வாசிக்கவுள்ளமை இவ் இசை நிகழ்வின் மற்றொரு சிறப்பம்சமாகும். கனேடிய தமிழ் இசை உலகில் வளர்ந்துவரும பிரபல்யம் மிக்க இளம் முன்னணி வயலின் இசைக் கலைஞரான செல்வன் மிதுரன் மனோகரன் வயலின் இசை வழங்கவுள்ளதுடன் வாய்ப்பாட்டில் பிரபல்யம் மிக்க இளம் கலைஞராக பிரகாசிக்கும் செல்வன் அமுதீசர் சச்சிதானந்தன் மிருதங்கத்தையும் திறமையாக வாசிக்கமுடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் மிருதங்க இசையும் வழங்கி உன்னதம் சேர்க்கவுள்ளனர்.
அற்புதமான ஓர் இசை நிகழ்ச்சியை பார்த்தும் கேட்டும் அனுபவிப்பதுடன் மட்டுமல்லாது ஓர் கல்வி நிறுவனத்தின் மேம்பாட்டுத் திட்டத்துக்கு உதவி செய்வதாகவும் உங்கள் அனைவரது வருகையும் அமைந்து விளங்கும் என இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களான பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை தெரிவிக்கின்றது.
காரைநகர் இந்துக் கல்லூரியில் அரச உதவியுடன் மேற்கொள்ளப்படவள்ள அண்மித்த பாடசாலை சிறந்த பாடசாலை என்கின்ற பாரிய பௌதிக வள அபிவிருத்தித் திட்டத்துக்குத் தேவையான காணியின் ஒரு பகுதியை கொள்வனவு செய்ய உதவும் நோக்குடன் நடாத்தப்படுகின்ற இந்நிகழ்விற்கு கல்லூரியின் பழைய மாணவர்களும் நலன் விரும்பிகளும் திரண்டு வந்து ஆதரவு நல்குமாறு மேலும் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை நிர்வாகம் அன்புடன் வேண்டிக்கொண்டுள்ளது.
No Responses to “சாயி விக்னேஸின் கர்நாடக இசை அரங்கில் காரை மண் தந்த இசைக் கலைஞர்களும் பங்கேற்கின்றனர்”