காரை இந்துவின் மேம்பாட்டு நிதிக்காக பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த சாயி விக்னேசின் கர்நாடக இசைக் கச்சேரி சனிக்கிழமை(17.09.2016) மாலை கனடா கந்தசுவாமி கோயில் மண்டபத்தில் வெகு சிறப்பாக நடந்திருந்தது.
மண்டபம் நிறைந்திருந்த இசை ரசிகர்களை மூன்றரை மணி நேரமாக கட்டிவைத்து விட்ட சாயி விக்னேசின் இனிமையான இசைக்கு அணிசேர் கலைஞர்களான காரை மண் தந்த செல்வன் அமுதீசர் சச்சிதானந்தன் மிருதங்கம் வாசித்தும் செல்வன் மிதுரன் மனோகரன் வயலின் வாசித்தும் இருந்ததுடன் செல்வன் பிரணவன் குகமூர்த்தி கடம் வாசித்து ரசிகர்களை இசை வெள்ளத்தில் திணற வைத்திருந்தனர். சாயி விக்னேஸ் கர்நடாக இசைப் பாடல்களுடன் பக்திப் பாடல்களையும் பாடியிருந்தமை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. அணிசேர் கலைஞர்கள் தனி ஆவர்த்தனம் வாசித்தபோதும் இணைந்து வாசித்தபோதும் வெளிப்படுத்தியிருந்த அபாரத் திறமை ரசிகர்களை வியக்கவைத்தது என்பதுடன் இவர்களைப் போன்ற இளம் கலைஞர்கள் வாய்ப்பளிக்கப்பட்டு ஊக்குவிக்கப்படவேண்டும் என்ற சிந்தனையையும் அவர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது.
சாயி விக்னேஸ் தனது கச்சேரியின் நிறைவில் உரையாற்றியிருந்தபோது மூன்றரை மணிநேரமாக ரசிகர்கள் அமைதியாக இருந்து தமது இசையை ரசித்தமைக்காக மகிழ்ச்சியினை வெளிப்படுத்தி நன்றி கூறியதுடன் சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் இது போன்ற இசை நிகழ்வுகளின்போது குறிப்பாக தனி ஆவர்த்தனம் வாசிக்க ஆரம்பிக்கும்போது மண்டபத்திலிருந்து ரசிகர்கள் எழுந்து செல்கின்ற வழமைக்கு மாறாக மூன்றரை மணிநேரமாக பொறுமையோடு அமைதியாக இருந்து ரசித்தமைக்காக தனது பாராட்டினையும் தெரிவித்தார். பக்க வாத்தியக் கலைஞர்களின் பங்களிப்பினை வெகுவாகப் பாராட்டி இவ்விசை நிகழ்வினை சிறப்பாக ஒழுங்கமைத்து தமக்கு வாய்ப்பளித்த பழைய மாணவர் சங்க நிர்வாகத்துக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். அணிசேர் கலைஞர்கள் சார்பில் உரையாற்றியிருந்த செல்வன் அமுதீசர் சச்சிதானந்தன் நிகழ்வு முடியும் வரை பொறுமையாகவிருந்து ரசிகர்கள் ரசித்ததன்மூலம் வழங்கிய ஆதரவு தமக்கு மிகப்பெரிய ஊக்குவிப்பாக இருந்தது எனக் குறிப்பிட்டார்.
மாலை 6.00மணிக்கு சம்பிரதாய நிகழ்வுகளுடன் நிகழ்வு ஆரம்பமானது. நிகழ்வின் பிரதம விருந்தினர் திரு.மகேஸ்வரன் பாலசுப்பிரமணியம் அவரது துணைவியார் திருமதி மோகனா மகேஸ்வரன்இ காரை இந்துவின் மூத்த பழைய மாணவரும் விவசாயத் திணைக்கள ஓய்வு நிலை லிகிதருமாகிய திரு.ஐயம்பிள்ளை பூபாலசிங்கம் அவரது துணைவியாரஇ; கல்லூரியின் முன்னாள் ஆசிரியை திருமதி விஜயா மகேந்திரம்இ கல்லூரியின் மூத்த பழைய மாணவி திருமதி காமாட்சி நாகராசா ஆகியோர் இணைந்து மங்கள விளக்கேற்றி நிகழ்வை தொடக்கி வைத்தனர். ‘இசைக்கலைமணி’ திருமதி பவானி ஆலாலசுந்தரத்தின் மாணவிகளான செல்வி கவிதா சிவநாதன் செல்வி காவிரி சிவநாதன் சகோதரிகள் கடவுள் வணக்கம்இ தமிழ்மொழி வாழ்த்துஇ கனேடிய தேசிய கீதம் என்பவற்றை சிறப்புற இசைத்ததைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது. பழைய மாணவர் சங்கத்தின உப-தலைவர் திரு.நாகலிங்கம் குஞ்சிதபாதம் அவர்களின் வரவேற்புரையை அடுத்து கல்லூரியின் இசை ஆசிரியைகளான திருமதி பராசக்தி றொபேசன்இ திருமதி பங்கையற்செல்வி முகுந்தன் ஆகியோரினால் பாடப்பட்டு பதிவுசெய்யப்பட்டிருந்த கல்லூரிப் பண் ஒலிபரப்பப்பட்டபோது சபையினர் எழுந்து நின்று கல்லூரித் தாய்க்கு மதிப்பளித்திருந்தனர். பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் திரு.தம்பையா அம்பிகைபாகன் உரையாற்றி நிகழ்சியை ஆரம்பித்து வைத்தார்.
கச்சேரியின் இடையே இந்நிகழ்வின் பிரதம விருந்தினரான ஐக்கிய அமெரிக்காவின் Texas மாநிலத்திலுள்ள Wabtec Railway Electronics நிறுவனத்தில் நிறைவேற்றுப் பணிப்பாளராக பணியாற்றுபவரும் கல்லூரியின் மகிமை மிக்க பழைய மாணவருமான திரு.மகேஸ்வரன் பாலசுப்பிரமணியமும் California மாநிலத்தில் Edisun Heliostts Inc நிறுவனத்தில் பிரதம பொறியியலாளராக பணியாற்றுகின்ற அவரது துணைவியார் திருமதி மோகனா மகேஸ்வரன் அவர்களும்இ பழைய மாணவர் சங்கத்தின் போசகர் சிவநெறிச் செல்வர் தில்லையம்பலம் விசுவலிங்கம் அவர்களினாலும் அவரது பாரியார் வடிவழகாம்பாள் விசுவலிங்கம் அவர்களினாலும் பொன்னாடை அணிவித்தும் மலர்ச்செண்டு வழங்கியும் கௌரவிக்கப்பட்டதைத் தொடர்ந்து திரு.மகேஸ்வரன் உரையாற்றினார். தனது வாழ்வின் முன்னேற்றத்தில பங்குகொண்டுள்ள தனது தாய்இ தந்தைஇ மனைவி ஆகியோருடன் தான் கற்ற காரை இந்து அன்னையின் பங்களிப்பினையும் தன்னால் மறக்கமுடியாது எனக் குறிப்பிட்டதுடன் இக்கல்லூரியின் மேம்பாட்டிற்கு பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை ஆற்றி வருகின்ற பணிகளைப் பாராட்டி நன்றி தெரிவித்தார்.
திரு.மகேஸ்வரனின் உரையினைத் தொடர்ந்து கலைஞர்கள் கௌரவம் இடம்பெற்றது. குழந்தை மருத்துவ நிபுணர் மருத்துவகலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் சாயி விக்னேசையும் பழைய மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு.முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை அவர்கள் மிருதங்கம் வாசித்த செல்வன் அமுதீசர் சச்சிதானந்தன் அவர்களையும் Doubleseal Insulating Glass Ltd அதிபர் திரு.மகாதேவன் பாலசுப்பிரமணியம் அவர்கள் வயலின் வாசித்த செல்வன் மிதுரன் மனோகரன் அவர்களையும் வாட்டலூ பல்கலைக்கழக இணைப் பேராசிரியரும் சமய சமூக ஆர்வலருமாகிய கலாநிதி தம்பிராசா ரவிச்சந்திரன அவர்கள் கடம் வாசித்த செல்வன் பிரணவன் குகமூர்த்தி அவர்களையும் பொன்னாடை அணிவித்தும் நினைவு விருதுகள் வழங்கியும் கௌரவித்தனர்.
பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் திரு.கனக சிவகுமாரன் நன்றி தெரிவித்து உரையாற்றினார். நிகழ்ச்சிகளை அழகு தமிழில் சிறப்பாக தொகுத்து வழங்கிய பிரபல வானொலி அரங்க அறிவிப்பாளரும் கல்லூரியின் பழைய மாணவருமாகிய திரு.பாலசுப்பிரமணியம் ஞானபண்டிதன் அவர்கள் கல்லூரியின் மூத்த பழைய மாணவரும் ஓய்வுநிலை ஆசிரியருமாகிய திரு.முருகேசம்பிள்ளை பாலசுப்பிரமணியம் அவர்களினால் பொன்னாடை போர்த்து கௌரவிக்கப்பட்டார். நல்லதொரு இசை நிகழ்வினை கண்டு களித்ததுடன் கல்விநிறுவனம் ஒன்றின் மேம்பாட்டுக்கு உதவிய மனநிறைவுடன் மண்டபத்திலிருந்து மக்கள் வெளியேறினர் என்பதுடன் இந்நிகழ்வினை சிறப்பாக ஒழுங்கமைத்திருந்த பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை நிர்வாகத்தினை பலரும் பாராட்டிச் சென்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் கீழே காணலாம்.
No Responses to “பல்வேறு சிறப்புக்களைக் கொண்டு உன்னதமான நிகழ்வாக அமைந்து விட்ட சாயி விக்னேசின் கர்நாடக இசைக் கச்சேரி”