சமூக உணர்வாளரும் காரை.இந்துவின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் பணிகளிற்கு உதவி ஆதரவளித்து வருபவருமான திரு.செல்வரத்தினம் செல்வநாயகம் அவர்கள் ஓவியம் வரைதலில் இயல்பாகவே சிறந்த ஆற்றலைப் பெற்று விளங்குபவர். காரைநகரின் நுழை வாயிலில் நிர்மாணிக்கப்பட்டுள்ள காரைநகர் உங்களை அன்புடன் வரவேற்கின்றது என்ற வாசகம் பொறிக்கப்பட்ட அழகிய வரவேற்புக் கோபுரத்தின் வடிவமைப்பு திரு.செல்வநாயகம் அவர்களின் சிந்தனையின் வெளிப்பாடாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இலகடி, சிவகௌரி சனசமூக நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பல பெரியார்களின் படங்களும் காரைநகரின் பல ஆலயங்களின் திரைச் சேலைகளில் உள்ள ஓவியங்களும் செல்வநாயகம் அவர்களின் கைவண்ணத்தின் வெளிப்பாடாகும். வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராகப் பதவி வகித்த திரு. விக்கினேஸ்வரன் அவர்கள் 2017ஆம் ஆண்டு கனடாவிற்கு வருகை தந்தபோது அவரது உருவத்தை உயிரோட்டமான முறையில் வரைந்து அவரிடம் கையளித்து விக்கினேஸ்வரன் அவர்களது பாராட்டினைப் பெற்றுக்கொண்டவர்.
தற்போது தான் கற்ற பாடசாலையான காரை.இந்துவின் நிறுவுனரான ஸ்ரீமான் முத்து சயம்பு அவர்களின் உருவப் படத்தினை வரைந்து அவருக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கப் பெற்றவராக உயிரோட்டமான முறையில் வரைந்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் தலைவர் திரு.நாகலிங்கம் குஞ்சிதபாதம் அவர்களிடம் கையளித்துள்ளார்.
இலகடி, காரைநகரைச் சேர்ந்த திரு.செல்வநாயகம் அவர்கள் முன்னாள் படவரைஞர் என்பதுடன் தற்போது கனடா, ரொறன்ரோ நகரசபையின் நீர் விநியோகத் திட்டத்தில் பணியாற்றி வருபவர். அத்துடன் இவர் ஒன்ராறியோ போக்குவரத்து அமைச்சின் அங்கீகாரத்தினைப் பெற்ற மோட்டார் வாகன சாரதிப் பயிற்சியாளராகவும் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
செல்வநாயகம் அவர்களின் ஓவியம் வரையும் ஆற்றலையும் இவ்வாற்றலை சமூகத்திற்காக பயன்படுத்தி வருவதையும் பாராட்டுகின்ற பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை அவர் இத்துறையில் பிராகாசித்து சமூகத்திற்கு பயனுள்ள வகையில் செயலாற்றி காரை.இந்து அன்னைக்கு மேலும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறது.
சங்கத்தின் தலைவர் திரு.நாகலிங்கம் குஞ்சிதபாதம் அவர்களிடம் உருவப்படம் கையளிக்கப்பட்டபோது:
திரு.செல்வநாயகத்தின் வடிவமைப்பில் காரைநகரின் நுழை வாயிலில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ‘காரைநகர் உங்களை அன்புடன் வரவேற்கின்றது’ வரவேற்புக் கோபுரம்.
No Responses to “பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உறுப்பினர் செல்வநாயகம் அவர்களினால் வரையப்பட்ட நிறுவுனர் சயம்புவின் உயிரோட்டமான ஓவியம்.”