பிரித்தானியா லண்டன் பல்கலைக்கழக தகவலியல் துறைப் பேராசிரியரும் காரைநகர் இந்துக் கல்லூரியின் பழைய மாணவருமாகிய பேராசிரியர் ஆறுமுகம் நல்லநாதன் இவ்வாண்டில்(2016) அனைத்துலக அளவில் அதிகமாகக் குறிப்பிடப்பட்ட ஆராய்ச்சியாளர்களின் பட்டியலில் இடம்பெற்று தாம் பிறந்த மண்ணுக்கும், கல்வி கற்ற பாடசாலைகளுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
உலகப் பல்கலைக்கழக மட்டங்களில் கீர்த்திமிகு பட்டியலாகக் கருதப்படும் மேற்படி ஆராய்ச்சியாளர்களின் பட்டியலை ‘தொம்சன் றொய்ட்டர்ஸ்’ என்னும் ஆய்வு நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது. கணனி விஞ்ஞானத்துறையில் மேற்படி பட்டியலில் இடம்பெற்றுள்ள 127 ஆராய்சியாளர்களில் பேராசிரியர் நல்லநாதனும் ஒருவர் ஆவார்.
உலகில் மிகப்பெரிய தொழில்நுட்பத்துறைசார் நிபுணர்களின் நிறுவனமான மின் மற்றும் இலத்தினியல் பொறியியல் நிறுவனத்தில் (IEEE) ‘தனிச்சிறப்புவாய்ந்த’ விரிவுரையாளராக பேராசிரியர் ஆறுமுகம் நல்லநாதன் அழைக்கப்படுகின்றார். 300 இற்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள், மாநாட்டு அறிக்கைகள், நூல்களையும் வெளியிட்டுள்ள பேராசிரியர் ஆ.நல்லநாதன் தகவல் தொழில்நுட்பத்துறையில் சிறந்த சேவைக்கான பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
தற்போது பேராசிரியர் ஆறுமுகம் நல்லநாதன் ஆறு பிரித்தானிய பல்கலைக்கழகங்களுடனும் மற்றும் பல தொழில் நிறுவனங்களுடனும் இணைந்து நவீன 5G வகை கம்பியில்லா தகவல் வலையமைப்பு தொழில்நுட்பத்தில் 2.5 மில்லியன் பவுண்ஸ் பெறுமதியான 3 பாரிய திட்டங்களை வழிநடத்தி வருகின்றார்.
காரைநகர், நாவலடிக்கேணியைச் சேர்ந்த பேராசியர் ஆறுமுகம் நல்லநாதன் தமது தொடக்கக் கல்வியை சுப்பிரமணிய வித்தியாசாலையிலும் இடைநிலைக் கல்வியை காரைநகர் இந்துக் கல்லூரியிலும், உயர்நிலைக் கல்வியை யாழ் இந்துக் கல்லூரியிலும் பயின்றவர். பாடசாலைக் காலத்தில் முன்னணி மாணவனாகத் திகழ்ந்த நல்லநாதன் க.பொ.த (உ-த) பரீட்சையில் நான்கு பாடங்களிலும் A தர சித்தி பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பேராசிரியர் ஆ.நல்லநாதன் கடந்த ஆண்டில் (2015) இலங்கைப் பயணத்தின்போது யாழப்பாணப் பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்களுக்கும் விரிவுரையாளர்களுக்கும் பயனளிக்கும் வகையில் தகவல் தொடர்பாடலின் புதிய ஆராய்ச்சிகள் பற்றிய விரிவுரையை நிகழ்த்தியிருந்தார்.
உலக அளவில் புகழ்பெற்று சாதனை படைத்து வரும் பேராசிரியர் நல்லநாதன் அவர்களை பாடசாலை சமூகத்துடன் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையும் பாராட்டி வாழ்த்துகின்றது.
கடந்த 2015 ஆகஸ்ட் மாதம் யாழ் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் பேராசிரியர் ஆ.நல்லநாதன் விரிவுரையாற்றியபோது எடுக்கப்பட்ட படங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்
No Responses to “கீர்த்திமிகு ஆராய்ச்சியாளர்களின் பட்டியலில் இடம்பெற்று சாதனை படைத்துள்ள எமது கல்லூரியின் பழைய மாணவன் பேராசிரியர் ஆறுமுகம் நல்லநாதன்”