ஐக்கிய நாடுகள் சங்க பிருத்தானிய அமைப்பின் (The United Nations Association of Great Britain and Northern Ireland (UNA-UK) ) உறுப்பினரும், எமது கல்லூரியின் பழைய மாணவியும், முன்னாள் ஆசிரியையுமாகிய திருமதி புனிதம் செல்வரத்தினம் அவர்கள் அண்மையில் பாடசாலையில் நடைபெற்ற வாணி விழாவில் பிரதம விருந்தினராக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
வாணி விழாவின் மூன்றாம் நாள் நிகழ்வில் கலந்து கொண்ட திருமதி.புனிதம் செல்வரத்தினம் அவர்கள் ‘ஐ.நா இன் பேண்தகு அபிவிருத்தி’ என்னும் பொருளில் சிறப்புரையாற்றினார்.
உலகளாவிய ரீதியில் பாடசாலைகள், தொழில்நுட்பக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உட்பட்ட அனைத்துத் தனியார், அரச கல்வி நிறுவனங்களின் கற்றல் செயற்பாடுகளும் வறுமையின்மை, பசியின்மை, உடல்நலனும் நல்வாழ்வும், தரமான கல்வி, பால் சமத்துவம், தூய்மையும் நன்னீரும், சகாயமான தூய சக்தி, பண்பான வேலையும், பொருளாதார வளர்ச்சியும், புதிய தொழில்துறையும், பௌதீக வளங்களும், பொறுப்புணர்வுள்ள உற்பத்தியும் நுகர்வும், சமத்துவமின்மையைக் குறைத்தல், காலநிலை தொடர்பான செயற்பாடுகள், நீதியும் சமாதானமும் உள்ளிட்டவற்றைப் பேணும் பின்வரும் 17 அபிவிருத்தி இலக்குகளைக் கொண்டதாக அமைய வேண்டும் என்ற ஐ.நா அமைப்பின் திட்டம் குறித்து திருமதி.புனிதம் செல்வரத்தினம் விளக்கமளித்தார்.
1960 களில் இலங்கைப் பல்கலைக் கழகமாகவிருந்த பேராதனை வளாக தாவரவியல் சிறப்புப் பட்டதாரியான திருமதி.புனிதம் செல்வரத்தினம் அவர்கள் 1970 களிலிருந்து காரை இந்துவில் நல்லாசிரியையாகப் பணியாற்றி பல மருத்துவ, உயிரியல் விஞ்ஞான மாணவர்களை உருவாக்கியவர் என்பது வரலாறாகும்.
பிருத்தானியாவில் புலம் பெயர்ந்து வாழும் இவரும் காரைநகர், சக்கலாவோடையைச் சேர்ந்த இவரது கணவர் மருத்துவ கலாநிதி.செல்வரத்தினம் அவர்களும் ஈழத்தமிழர் நலனில் அக்கறை கொண்டு கல்வி, இயற்கை வளம், மனிதநேயம், பெண்கள் நலன் எனப் பல தளங்களில் உரத்த குரல் எழுப்பி உண்மைத் தொண்டாராக தம்மை அர்ப்பணித்து ஆர்ப்பாட்டமில்லாமல் சேவையாற்றி வருவதை எம்மில் பலர் அறிந்திருக்க முடியாது.
குறிப்பாக ஆன்மீகம் என்ற பெயரில், பொருளாதாரத்தை வீண் விரயம் செய்யும் எம் மக்களின் அறியாமை கண்டு கலங்கும் திருமதி.புனிதம் செல்வரத்தினம் அவர்கள் அமெரிக்காவில் கறுப்பினத்தவருக்காகக் குரல் கொடுத்த மாட்டின் லூதர் கிங் அவர்களுக்காக 2012 ஆம் ஆண்டு பிருத்தானியாவில் நடைபெற்ற நினைவு நிகழ்வின்போது அமைதிக்கும் நீதிக்குமான தமிழ்ப் பெண்ணாக உலக நீதிக்காக குரல் எழுப்பியிருந்தமை பிருத்தானியாவில் அனைவரினதும் கவனத்தை ஈர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
காந்தியின் எளிமையும், தன் தந்தையின் துணிவும், தொலைநோக்கும் கொண்டு ஈழத்தமிழ் பெண்களுக்கெல்லாம் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டும் எம் கல்லூரி அன்னையின் மடியில் தவழ்ந்த திருமதி.புனிதம் செல்வரத்தினம் அவர்கள் எமது கல்லூரியின் காலத்தைப் பொற்காலமாக்கிய வெள்ளிவிழா அதிபர் கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களின் இரண்டாவது மகள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
வாணிவிழாவில் திருமதி.புனிதம் செல்வரத்தினம் அவர்கள் உரையாற்றும் போது எடுத்த படத்தைக் கீழே காணலாம்.
பிருத்தானியாவில் நடைபெற்ற மாட்டின் லூதர் கிங்கின் நினைவு நிகழ்வில் திருமதி.புனிதம் செல்வரத்தினம் அவர்கள் உரையாற்றும் போது எடுக்கப்பட்ட படத்தைக் கீழே காணலாம்.
No Responses to “ஐக்கிய நாடுகள் சபைப் பிரதிநிதி திருமதி.புனிதம் செல்வரத்தினம் அவர்கள் வாணி விழாவில் சிறப்புரை”