மனித விழுமியங்களைக் கட்டியெழுப்பும் நோக்குடன் யாழ்ப்பாணம் பிரம்மகுமாரிகள் இராஜயோகா நிலையத்தினால் “சுகதாமம்” மண்டபத்தின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு வட மாகாண கல்வி அமைச்சின் அனுசரணையில் கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்கள் மத்தியில் மாகாண மட்டத்தில் விழுமியங்கள் பற்றிய விவாதப் போட்டித்தொடர் இடம்பெற்றது.
வடமாகாண மாணவர்களின் விழுமியங்கள் பற்றிய சிந்தனை ஆற்றலை ஊக்குவிப்பதன் மூலம் மன ஒருமைப்பாட்டுத் திறனையும்இ கல்வியாற்றலையும், தனி மனித ஆளுமையையும் வளர்க்கும் நோக்குடன் இப்போட்டி வடிவமைக்கப்பட்டிருந்தது.
எமது பாடசாலை அணியில் கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்பு மாணவர்களான, செல்வன் குமாரவேள் பிரணவன், செல்வி ஜஸ்மினா நவரட்ணராஜா, செல்வி அபினோசா கருணாகரன் ஆகியோர் மேற்படி போட்டித்தொடரின் 2ம் 3ம் சுற்றுக்களில் பங்குபற்றி வெற்றியீட்டியிருந்தனர்.
இப்போட்டியின் நான்கு சுற்றுக்களில் முதலாம் இரண்டாம் சுற்றுக்களில் “சிறந்த நினைவாற்றலுக்குக் காரணம் மனநிம்மதியா? மனமகிழ்ச்சியா?” என்ற தலைப்பில் வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கிடையில் விவாதம் இடம்பெற்றது. அச்சுற்றுப்போட்டியில் எமது பாடசாலை மாணவ அணியினர் வெற்றி பெற்று மூன்றாம் சுற்றுப் போட்டிக்கு தெரிவாகியிருந்தனர்.
மூன்றாம் சுற்றுப் போட்டியில் “நல்ல மாற்றத்தைக் கொண்டுவருவது அன்பா? மரியாதையா?” என்ற பொருளில் விவாதம் இடம்பெற்றது. இச்சுற்றுப்போட்டியிலும் எமது பாடசாலை மாணவ அணியினர் வெற்றியீட்டினர்.
விழுமியங்கள் பற்றிய விவாதப் போட்டியின் 2ம்இ 3ம் சுற்றுக்களில் வெற்றியீட்டி காலிறுதியில் பங்;குபற்றிய மாணவர்களின் பரிசளிப்பு விழா நிகழ்வானது அண்மையில் சுகதாமம் மண்டபத்தில் இடம்பெற்றது. இப் பரிசில் நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் கௌரவ நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் அவர்களும், சிறப்பு விருந்தினராக வடமாகாண கல்விப் பண்பாட்டலுவல்கள்இ விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் கௌரவ கல்வியமைச்சர் திரு த. குருகுலராஜா அவர்களும், கௌரவ விருந்தினராக வடமாகாண கல்விப் பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு இ. இரவீந்திரன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
விழுமியங்கள் பற்றிய விவாதப்போட்டியில் பங்குபற்றிய மாணவர்களையும், மாணவர்களை சகல வழிகளிலும் நெறிப்படுத்திய தமிழ்ப் பாட ஆசிரியரான திரு இராசதுரை இராஜகோபால் அவர்களையும் கல்லூரிச் சமூகத்துடன் பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையும் பாராட்டி வாழ்த்துகின்றது.
விவாதப் போட்டியில் வெற்றியீட்டிய எமது பாடசாலை விவாத அணிக்கு வழங்கப்பட்ட நினைவுப்பரிசிலை கீழே காணலாம்.
No Responses to “மாகாண மட்ட விழுமியங்கள் பற்றிய விவாதப்போட்டியில் காலிறுதியில் பங்கு பற்றிய மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா”