மாணவர்களின் பேச்சாற்றலை வளர்த்து அனைத்துலக அரங்கில் ஓர் அடையாளத்தையும் ஏற்படுத்திக் கொடுத்து வருகின்ற ‘அனைத்துலக பேசு தமிழா பேசு’ விவாதப் போட்டி சென்ற ஆறு ஆண்டுகளாக நடாத்தப்பட்டு வருகின்றது. பிரபல தொலைக்காட்சியான வணக்கம் மலேசியாவின் ஏற்பாட்டில் தமிழ்நாடு தஞ்சை தமிழ் பல்கலைக்கழக தமிழ் வளர் மையத்தின் இணை ஆதரவில் ஆறாவது ஆண்டாக மிகுந்த விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்ற இப்போட்டியானது இறுதிச் சுற்றினை எட்டியுள்ளது.
சர்வதேசத்தின் 10 நாடுகளில் இருந்தும் இப்போட்டிக்கு விண்ணப்பித்த நூற்றுக்கணக்கானவர்கள் மத்தியிலிருந்து முதற்கட்டமாக 40 மாணவர்கள் அவர்களின் பேச்சாற்றலின் மதிப்பீட்டின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டு அவர்கள் மத்தியிலான விவாதம் இயங்கலை வாயிலாக நடைபெற்று தமிழறிஞர்களைக்கொண்ட நடுவர் குழுவினால் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு தெரிவுகள் இடம்பெற்றன.
தங்களது வாதத் திறமையால் எதிர்ப் போட்டியாளர்களை திக்குமுக்காட வைத்ததோடு நடுவர்களின் கேள்விகளிற்கு தங்களது அறிவாற்றல் மிக்க பதில்களால் மடக்கிப் பேசிய போட்டியாளர்களுள் நால்வர் எதிர்வரும் 29ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் களம் காணவுள்ளனர்.
இறுதிப் போட்டிக்குத் தெரிவான மலேசியா, கனடா, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த நால்வருள் கனடாவைச் சேர்ந்த நிருத்திகா செல்வநாயகம் அவர்கள் காரை.இந்துவின் பாரம்பரியத்திலிருந்து வந்தவர் என்ற வகையில் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை மிகுந்த பெருமிதம் கொள்கின்றது. இவருடைய தந்தையாரான சமூக உணர்வாளர் திரு.செல்வநாயகம் அவர்களும் தாயார் டர்முதா அவர்களும் காரை.இந்துவின் பழைய மாணவர்கள் என்பதுடன் எமது சங்கப் பணிகளில் அக்கறைகொண்டு உதவி வருபவர்கள். முன்னாள் படவரைஞரான திரு.செல்வநாயகம் அண்மையில் நிறுவுனர் சயம்புவின் படத்தை வரைந்து சங்கத்திற்கு வழங்கியிருந்தவர் என்பது வாசகர்கள் அறிந்ததாகும்.
நிருத்திகா அவர்கள் ரொறன்ரோ பல்கலைக்கழக மாணவி என்பதுடன் சிறிய வயதில் கனடாவிற்கு புலம்பெயரந்து வந்திருந்தபோதிலும் தமிழ்மொழியை மறவாது அதை ஆர்வத்துடன் கற்று அனைவரும் வியந்து போற்றும் வண்ணம் விவாதிக்கும் ஆற்றல் பெற்றுள்ளார். இவரது சகோதரியும் மக்மாஸ்டர் பல்கலைக்கழக மாணவியுமாகிய சதுர்த்திகா செல்வநாயகம் அவர்களும் இப்போட்டியில் பங்குகொண்டு வெற்றிபெறாத போதிலும் தமது விவாதிக்கும் திறனை வெளிப்படுத்திச் சென்றுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
சனிக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டி வணக்கம் மலேசியாவின் முகப்புத்தகம் வாயிலாக நேரலை ஒளிபரப்புச் செய்யப்படவுள்ளது.
இலங்கை நேரம்: பிற்பகல் 2.30 மணி
ரொறன்ரோ நேரம்: முற்பகல் 5.00 மணி
சனிக்கிழமை இறுதிப் போட்டியில் களம் காணவுள்ள நிருத்திகாவும் ஏனைய போட்டியாளர்கள் மூவரும்:
No Responses to “‘அனைத்துலக பேசு தமிழா பேசு’ விவாதப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தெரிவாகி காரை.இந்து அன்னையைப் பெருமைப்படுத்திய நிருத்திகா செல்வநாயம் அவர்கள் வெற்றிபெற பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை வாழ்த்துகிறது.”