புதுறோட்டு, காரைநகரைச் சேர்ந்த பரமநாதர் நாகேஸ்வரி அவர்களை நினைவுகூரும் வகையில் அன்னாரது குடும்பத்தினரால் அன்னாரது பெயரில் உருவாக்கப்பட்டதே நாகேஸ்வரி நற்பணியகம் என்ற சேவை அமைப்பாகும். இந்த அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நற்சேவைகள் வரிசையில் சுப்பிரமணிய வித்தியாசாலையிலிருந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற ஆறு மாணவர்களையும் பாராட்டி மதிப்பளிக்கும் நிகழ்விற்கான பூரண அனுசரணை வழங்கப்பட்டிருந்தது.
43 ஆண்டுகளாக (01-04-1971 – 01-01-2012) காரைநகர் இந்துக் கல்லூரியின் ஆரம்பப் பிரிவாக இயங்கி வந்ததும் அதன் ஊட்டப்பாடசாலைகளில் ஒன்றாக விளங்குவதுமாகிய சுப்பிரமணிய வித்தியாசாலையின் பழைய மாணவியாகிய அமரர் நாகேஸ்வரி பரமநாதர் அவர்களை நினைவுகூரும் வகையில் குறித்த பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டு பாடசாலையின் அதிபர் திரு.குலதீபன் அவர்களின் தலைமையில் வெகுசிறப்பாக சென்ற 17-05-2023 அன்று பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.
யாழ்ற்ரன் கல்லூரியின் முன்னாள் அதிபரும் சமய, சமூகச் செயற்பாட்டாளருமாகிய திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் பிரதம விருந்தினராகவும், தீவக வலயத்தின் ஆரம்பப் பிரிவு சேவைக்கால ஆலோசகர் திரு.கிருபாகரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் அமரர் நாகேஸ்வரி அவர்களின் புதல்வர்களுள் ஒருவரான திரு.பரமநாதர் சிவசுப்பிரமணியம் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
புலமைப் பரிசல் பரீட்சையில் சித்தியடைந்த ஆறு மாணவர்களிற்கும் துவிச்சக்கர வண்டிகளும் 100 மதிப்பெண்களிற்கு மேல் பெற்ற மாணவர்களிற்கு பரிசில்களும் வழங்கி ஊக்குவிக்கப்பட்ட அதேவேளை இவர்களைக் கற்பித்த அதிபருக்கும் ஆசிரியர்களுக்கும் பரிசல்கள் வழங்கப்பெற்று மதிப்பளிக்கப்பட்டிருந்தனர்.
இந்த பாராட்டு நிகழ்வினை ஆண்டுதோறும் தொடர்ந்து நடாத்துவதற்கான அனுசரணையினை வழங்கி உதவ நாகேஸ்வரி நற்பணியகம் முன்வந்துள்ளமை குறிப்படத்தக்கதாகும்.
நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பினை கீழே உள்ள இணைப்பினை அழுத்திப் பார்வையிடலாம்:
புகைப்பட உதவி:சுப்பிரமணிய வித்தியாசாலை முகநூல்
https://photos.app.goo.gl/pAs4cHtJrmoqfbfDA
No Responses to “சுப்பிரமணிய வித்தியாசாலையிலிருந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஆறு மாணவர்கள் நாகேஸ்வரி நற்பணியகத்தின் அனுசரணையில் பாராட்டி மதிப்பளிக்கப்பட்டனர்.”