எமது காரைநகரைச் சேர்ந்த மகான் சிவத்திரு.ச.அருணாசலம் (31.10.1864 – 17.1.1920) அவர்களின் சிந்தனையில் கருக்கொண்டு அமைக்கப்பட்டதே எமது கல்லூரி ஆகும்.
காரைநகரிலும் நாடெங்கிலும் பல சைவப் பாடசாலைகளை நிறுவுவதற்கும், சைவாசிரிய கலாசாலைகளை அமைப்பதற்கும் பாடுபட்டு நாவலருக்கு அடுத்து வைத்துப் போற்றப்படும் வரலாற்று நாயகரான மகான் சிவத்திரு.ச.அருணாசல உபாத்தியாயர் அவர்கள் காரைநகரின் சைவக் கல்விப்பாரம்பரியத்தின் முன்னோடி ஆவார்.
‘காரைநகர் மடந்தை தவம் வாய்த்ததென வந்தானோர் கரும வீரன் ‘ என்று அருணாசல உபாத்தியாயர் பற்றி புலவர்மணி சோ. இளமுருகனார் எழுதிய ஈழத்துச் சிதம்பர புராணம் கூறுகின்றது. அதில் வரும் இன்னொரு பாடல்(134) பின்வருமாறு.
சைவர்களி னாதரவும் பெருநிதியு
மரசினர்தஞ் சார்புங் கொண்டு
மைவளருங் கண்டத்தான் சமயநெறி
வளர்ந்தோங்க மாசில் பள்ளி
மெய்வகையிற் பன்னூறு நிறுவினனால்
நாடெங்கு மெய்ம்மை யுள்ளச்
சைவனரு ணாசலற்குச் சிலையாகித்
தமிழ்போலத் தழைத்து வாழி.
பொருள்: சைவத் தொண்டர்களின் உதவியும், அவர்கள் கொடுத்த பெரிய செல்வமும், அரசினரின் உதவியும் ஆகியவற்றைத் துணையாகக் கொண்டு, நீல மைபோலும் நஞ்சு பரந்த கழுத்தை உடைய சிவபெருமானது சைவசமய ஒழுக்கம் மிகவும் வளர்ச்சி அடைய, குற்றமில்லாத பாடசாலைகள் பல நூற்றை, உண்மையான முறைமையோடு கட்டுவித்தான். உண்மை உள்ளத்தை உடைய சைவனாகிய அருணாசலத்தாருக்கு, அப்பாடசாலைகள் நாடு முழுவதும் நிறுவப்பட்ட நினைவுச் சிலைகளாக விளங்கி, என்றும் அழியாத தமிழ்மொழி போலத் தழைத்து வாழ்வனவாக.
மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்களின் 95 ஆவது நினைவு நாள் கடந்த மாதம் 17 ஆம் திகதியாகும்.
அத்தினத்தை முன்னிட்டு செயற்கரிய செயல் செய்த எமது ஊரைச் சேர்ந்த கல்வியாளர் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்கள் பற்றி எமது சங்கத்தின் ஆரம்ப கர்த்தாக்களுள் ஒருவரும் முதலாவது தலைவரும் எமது கல்லூரியின் பிரதி அதிபருமாகிய அமரர்.சி.தம்பிராசா அவர்கள் எழுதிய கட்டுரையை இங்கே எடுத்து வருகின்றோம்.
நாவலருக்கு அடுத்து வைத்து போற்றப்பட்ட காரைநகர் ஆசான் அருணாசல உபாத்தியார்
சி.தம்பிராசா
ஓய்வுநிலை பிரதி அதிபர்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின்பகுதியிலும், இருபதாம் நூற்றாண்டின் முன்பகுதியிலம் சமய, சமூக விழிப்புணர்ச்சி ஏற்பட்டது. இப்பின்னணியில் வாழ்ந்த, பெருமகன் நாவலரின் ஆளுமைத்திறனால் கவரப்பட்ட பலரும் அவர் வழியில் நின்று பணியாற்றினார்.
இக்காலப்பகுதியில் காரைநகர் மக்கள் சிலர் அமெரிக்க மிசனரிமாரால் நடத்தப்பட்ட வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியிலே ஆங்கிலம் கற்று கிறிஸ்தவர்கள் ஆயினர். காரைநகர் அருணாசல ஆசிரியர், ஆறுமுகநாவலரின் அண்ணர் மகன் திரு தம்பு கைலாசபிள்ளையைச் சந்திப்பதற்கு வட்டுக்கோட்டை வழியாக நடந்து செல்லும் பொழுது அது போன்று ஒரு ஆங்கிலக் கல்லூரி காரைநகரில் உருவாக வேண்டுமென்று எண்ணுவார். அந்த எண்ணக்கருதான் திரு முத்து சயம்பு பெரியாரின் ஆங்கில வித்தியாசாலையின் தோற்றத்திற்கு உறுதுணையாக அமைந்தது.
இதே காலப்பகுதியில், அருணாசல ஆசிரியர், வியாவில் சைவபரிபாலன விததியாசாலை தோற்;றத்திற்கு காரணகர்த்தாவாக இருந்தார். மேற்படி இரு பாடசாலைகளிலும் வேதனம் இன்றி ஆசிரியராகக் கடமையாற்றினார். திரு சயம்பு சட்டம்பியாரின் விடாமுயற்சியாலும், ஊக்கத்தினாலும், திருஞானசம்பந்த நாயனார் வித்தியாசாலையும், திரு கா. வேதக்குட்டி ஐயரின் சகாயத்தினால் வியாவில் சைவபரிபாலன பாடசாலையும் ஆரம்பிக்கப்பட்டன. யாழ்ப்பாணத்து கிராமங்கள் தோறும் சைவப்பாடசாலைகள் ஆரம்பிக்க வேண்டும் என்ற பேராசை அருணாசல ஆசிரியரை, ஆசிரியத் தொழிலில் நிரந்தரமாக விட்டு வைக்கவில்லை.
யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதும் சென்று சைவ அபிமானிகளையும், செல்வந்தர்களையும் கண்டு தனது எண்ணத்தை விளக்குவார். தம் எண்ணம் நிறைவேறாவிடின் திரும்பத் திரும்பச் சென்று அவர்களை தம் எண்ணத்திற்கு இசைய வைப்பார். திரு அருணாசல ஆசிரியரின் விடாமுயற்சியால் மட்டுவில் கமலாசினி வித்தியாசாலை, கரணவாய் மாணிக்க வித்தியாசாலை, வல்வை சிவகுரு வித்தியாசாலை, அனலைதீவு சதாசிவ வித்தியாசாலை என்பன ஆரம்பிக்கப்பட்டன.
அருணாசலம் அவர்களின் தூண்டுதலாலும், விடாமுயற்சியாலும் புதிது புதிதாக யாழ்ப்பாணத்து கிராமங்களில் தோன்றிய சைவப்பாடசாலைகளின் வேகத்திற்கு ஈடாக போதிய சைவ ஆசிரியர் உருவாகவில்லை. இந்த நேரத்தில் தான் அவர்களுக்கு சைவ ஆசிரிய கலாசாலை உருவாக்க வேண்டிய எண்ணம் தோன்றியது.
உண்டி கொடுத்து உறையுள் கொடுத்து கல்வி கற்பித்த இரு பெரியார்கள் வாழ்ந்தார்கள். ஒருவர் நாவலரின் தமையனார் தம்புவின் மகன் கைலாசபிள்ளை அவர்கள், மற்றையவர் அருணாசல உபாத்தியாயர், கைலாசபிள்ளைக்கு பூர்வீக சொத்தும் உத்தியோகமும் இருந்தது. அருணாசல ஆசிரியர் தெல்லிப்பளை அமெரிக்க மிஷன் பாடசாலையில் ஆசிரியராக பயிற்சி பெற்றவர் மதம் மாற மறுத்ததன் காரணமாக பயிற்சிக் காலத்தை பூரணமாக முடிக்கவில்லை. இவரின் பூர்விக சொத்தும் கொஞ்சம் அவற்றை விற்றாவது சைவ ஆசிரியர்களை உருவாக்க வேண்டும். என்று யாழ்ப்பாணமும், கொழும்பும் அலைந்தவர். விடியமுன்னரே திரு கைலாசபிள்ளையின் வாசலில் அவர் கதவு திறக்கும் வரை குந்தியிருப்பார். இவரின் சமயத் தொண்டும், தமிழ் தொண்டும் பேருக்கும் புகழுக்கும் அல்ல சமய வாழ்க்கையே இவரின் சிந்தனை, நினைவு எண்ணமெல்லாம்.
தனது சொந்தக் கிராமத்தில்(காரைநகரில்) ஆரம்பித்த சைவ ஆசிரிய கலாசாலை வித்தியா பகுதியின் அங்கீகாரம் கிடைக்காத காரணத்தால் மூடவேண்டிய நிலை ஏற்பட்டது. சோதனை மேல் சோதனை வந்த போதும் தனது விடாமுயற்சியால், தனது எண்ணத்தைக் கைவிடாது வண்ணர்பண்ணை நாவலர் வித்தியாசாலையின் ஒரு பகுதியில் அதனை நடத்தி வந்தார்.
இக்காலப்பகுதியில் சட்ட சபை உறுப்பினர்களான் சேர் பொன்னம்பலம் இராமநாதன், சேர் பொன்னம்பலம் அருணாசலம் சேர் வைத்திலிங்கம் துரைச்சாமி ஆகியோரின் உதவியுடன் வாதாடி 1916 இல் கோப்பாய் ஐக்கிய போதனா பாடசாலையைப் பெற்றுக் கொண்டனர்.
யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக சைவர்களும் ஏனைய கிறிஸ்தவர்களும் கற்கும் போதனா பாடசாலையை உருவாக்கிய பெருமை, காரைநகர் சைவ ஆசான், தமிழ்த்தொண்டன் பெருமகன் அருணாசல ஆசிரியரையே சாரும்.
சைவஆசிரியர்கள் உருவாவதும், கிராமங்கள் தோறும் சைவப்பாடசாலைகள் உதயமாவதும் கத்தோலிக்க பாதிரியாருக்கு புதிய தலையிடியைக் கொடுக்க 1920இல் அரசாங்கம் ஒரு புதிய பாடசாலை, மற்றொரு பாடசாலைக்கு அரை மைல் தூரத்துக்குள் தொடங்கக் கூடாது என்று ஒரு புதிய சட்டத்தைக் கொண்டுவந்தது. இதனால் புதிதாகத் தோன்றும் சைவப் பாடசாலைகள் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட, ஒழுங்கான வேதனத்தை பெறதா சைவ ஆசிரியர்கள் பாதிரிமாரை சரண்அடையும் நிலை எற்பட்டது. இந்த நேரத்தில்த்தான் சைவப்பாடசாலைகளுக்கு உயிர் கொடுத்தவர் சட்ட மேதையான ‘இந்து போட்’ இராசரத்தினம் அவர்கள் ஆவர். 1920இல் அருணாசல ஆசிரியர் மறைவுக்குப் பின்னர் இந்துப் பாடசாலைகள் பலவற்றைத் தோற்றுவித்த பெருமைக்குரியவர் திரு.சு.இராசரத்தினம் அவர்கள்.
அருணாசல ஆசிரியரின் எண்ணக் கருவில் உருவான ஆங்கில பாடசாலை, 1888 ஆண்டு ஆவணித் திங்களில் மகன் திரு முத்து சயம்பு அவர்களால் கிடுகுக் கொட்டிலில் ஆரம்பிக்கப்பட்ட காரைநகர் இந்து ஆங்கில பாடசாலை ஆகும். சயம்பு ஆசிரியரின் தனது உடல், பொருள் ஆவி அனைத்தும் அர்ப்பணம் செய்து கண்ணும், கருத்துமாக வளர்;த்த பாடசாலை காலக்கிரமத்தில் திருஞானசம்பந்த நாயனார் ஆங்கில பாடசாலை எனப்பெயர் பெற்று 1912 இல் உதவி நன்கொடை பெறும் பாடசாலையாக உயர்வு பெற்றது.
அதிபர் திரு.யு.கனகசபை அவர்களின் பத்தாண்டு காலத்தில் ஆங்கில புலமைமிக்கவர்களாலும் ஏனைய சேவை உணர்வு மிக்க ஆசிரியர்களாலும் சிரேஸ்ட பாடசாலையாகி, காரைநகர் இந்துக்கல்லூரியாக உயர்வு பெற்றது.
இவ்வாறு கல்லூரி உயர்வதற்கம் யாழ்ப்பாணத்தில் சைவக் கல்விப் பாரம்பரியம் தழைத்தோங்குவதற்கும் வழிவகுத்த அருணாசல உபாத்தியாரை நாம் என்றென்றும் நினைவு கூர்வோமாக.
No Responses to “நாவலருக்கு அடுத்து வைத்து போற்றப்பட்ட காரைநகர் ஆசான் அருணாசல உபாத்தியார்”