கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு நிகழ்வு கடந்த சனிக்கிழமை (பெப்.14.2015) அன்று பிற்பகல் 1:00 மணிக்கு பாடசாலை மைதானத்தில் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களின் தலைமையில் விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர் திரு.அன்ரன் விமலதாஸ் அவர்களின் வழிநடத்தலில் சிறப்பாக நடைபெற்றது.
பிரதம விருந்தினராக வடமாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் திரு.M.இராதாக்கிருஷ்ணன் அவர்களும் சிறப்பு விருந்தினராக தீவக வலயக்கல்வி அலுவலக கணக்காளர் திருமதி.க.சிவசிறிசாந்திநாயகம் அவர்களும் நிகழ்விற்கு அநுசரணை வழங்கிய குடும்பத்தைச் சேர்ந்த திருமதி.செல்வநாயம்பிள்ளை அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
கல்லூரியின் முன்னாள் அதிபர்களான பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை, திரு.கா.குமாரவேலு, கல்லூரியின் முன்னாள் ஆசிரியையும் ஓய்வுநிலை உதவிக் கல்விப்பணிப்பாளருமாகிய திருமதி.சிவபாக்கியம் நடராஜா, பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் முன்னாள் தலைவர் திரு.த.அம்பிகைபாகன் ஆகியோர் உட்பட
ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், முன்னாள் அதிபர்கள், அயற்பாடசாலை அதிபர்கள், முன்னாள் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், உள்ளுர் அரசியல் பிரதிநிதிகள், உள்ளுர் நுண்கலை மன்றங்களின் பிரதிநிதிகள், நலன்விரும்பிகள், விளையாட்டு ரசிகர்கள் என பெருந்திரளானோர் நிகழ்வில் சமூகமளித்திருந்தனர்.
கல்லூரியின் பழைய மாணவரும் காரைநகர் பண்டித்தாழ்வினைச் சேர்ந்தவரும் பின்னர் லண்டனில் வசித்து வந்தவருமாகிய அமரர் கனகசபை செல்வநாயகம்பிள்ளை அவர்களின் நினைவாக புலம்பெயர்ந்து வாழும் அன்னாரது குடும்பத்தினர் இவ்வாண்டு மெய்வல்லுநர் திறனாய்வு நிகழ்விற்கான நிதி அநுசரணையை வழங்கியிருந்தனர்.
சிறிலங்கா கொடி, கல்லூரிக் கொடி, ஒலிம்பிக் கொடி, இல்லங்களிற்கான கொடிகள், சிறப்பு குழுக்களிற்கான கொடிகள் ஏற்றிவைக்கப்பட்டு நிகழ்வுகள் தொடங்கின.
கல்லூரிக் கொடியினை தாங்கிய அணி, பான்ட் அணி, நான்கு இல்லங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் ஆண்கள் பெண்கள் என்ற இரு அணிகள் வீதம் எட்டு அணிகள,; சுற்றாடல் முன்னோடிக்குழு, பெண்கள் சாரணிய அணி(Girls Guides) ஆண்கள் சாரணிய அணி(Boys Scouts), சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் அணி என மொத்தமாக 15 அணிகள் அணிநடையில் பங்குகொண்டிருந்தமை மைதானத்தில் மாணவர்களின் பங்குபற்றலை அதிகரித்திருந்தது.
இடைவேளையின்போது ‘இசையும் அசைவும்’ என்கின்ற தொனிப்பொருளில் 72 மாணவர்கள கண்ணைக்கவரும் வண்ணம் வண்ணமயமான உடையணிந்து பங்குபற்றிய உடற்பயிற்சிக் கண்காட்சி(Gymnastics Show) பார்வையாளர்களை கவர்ந்து பிரமிக்க வைத்திருந்தது.
இந்நிகழ்விற்கு தலைமை வகித்த கல்லூரி அதிபர் திருமதி வாசுகி தவபாலன் தமது உரையின்போது மாணவர்களின் ஆளுமையை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் மாகாண தேசிய நிலைகளில் கல்லூரியின் மாணவர்கள் பல தடங்களை ஏற்படுத்தி அதன் புகழை நிலைநாட்டிவருவதை இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிட விரும்புவதுடன் வருடாந்த மெய்வல்லுநர் நிகழ்வானது மாணவர்களின் ஆளுமை விருத்திக்கான முக்கியமான களத்தை அமைத்துக் கொடுப்பதாக மேலும் தெரிவித்தார்.
இணைப்பாட விதான செயற்பாடுகளில் மட்டுமல்லாது பாடவிதானச் செயற்பாடுகளிலும் ஏற்பட்டு வரும் வளர்ச்சி குறித்து தனது மகிழ்ச்சியினை வெளிப்படுத்திய அதிபர் திருமதி தவபாலன் அண்மையில் கல்லூரியிலிருந்து ஆறு மாணவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்களின் கலைப்பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தமையையும் தமது உரையில் குறிப்பிட்டார்.
மேலும் இம்மெய்வல்லுநர் திறனாய்வு நிகழ்வு சிறப்பாக நடைபெற நிதியனுசரணை வழங்கிய அமரர்.செல்வநாயகம் குடும்பத்தினருக்கு தமது நன்றியையும் அதிபர் தெரிவித்தார்.
நான்கு இல்லங்களுக்கிடையே நடைபெற்ற மெய்வல்லுநர் திறனாய்வில் இவ்வாண்டு பாரதி இல்லம்(401 புள்ளிகள்) முதலிடத்தையும், தியாகராசா இல்லம்(388புள்ளிகள்) இரண்டாம் இடத்தையும், சயம்பு இல்லம்(382 புள்ளிகள்) மூன்றாம் இடத்தையும், நடராசா இல்லம்(360 புள்ளிகள்) நான்காம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.
விருந்தினர்களும் நிகழ்விற்கு அநுசரணை வழங்கிய திருமதி.செல்வநாயகம்பிள்ளை அவர்களும் வெற்றி பெற்ற வீரர்கள், வீராங்கனைகளுக்கான பரிசில்களை வழங்கினர்.
கல்லூரியின் விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர் திரு.அன்ரன் விமலதாஸ் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.
இந்த மெய்வல்லுநர் திறனாய்வு நிகழ்வில் நன்கு பயிற்சியளிக்கப்பட்ட அணிவகுப்பு அணிகளும் மற்றும் உடற்பயிற்சி அணி நிகழ்த்திக் காட்டிய காட்சிகள் பாடசாலையில் கற்கும் சகல மாணவர்களும் மைதானநிகழ்வுகளில பங்குபற்றுவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்திருந்ததாக விளையாட்டு ரசிகர்கள் தெரிவித்திருந்தனர்.
நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.
No Responses to “கல்லூரியின் அனைத்து மாணவர்களும் மைதானத்தில் தமது தடங்களைப் பதித்த வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு – 2015”